ஒரு நற்செய்தி

in கட்டுரை

விரைவில் என் படைப்புகளை மருந்துக் கடைகளில் வாங்கலாம். வயாக்ரா தயாரிக்கும் ஃபைஸர் மருந்து நிறுவனம் என்னிடம் ஆர்டரின்பேரில் எழுதி வாங்க முடிவு செய்துள்ளது. என் படைப்புகளில் மருத்துவ குணங்கள் இருப்பதாக யாரோ அவர்களிடம் கிளப்பி விட்டதுதான் எனக்கு நன்மையில் முடிந்திருக்கிறது. தூக்கமின்மைக்கு மருந்தாக Payon 50s, Payon  100s, Payon 250s என மூன்று டோஸ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதித் தருவதாக ஒப்பந்தம் (இங்கு S என்பது நொடிகள்). மாத்திரை வடிவில் வராது. சிறு புத்தகங்களாக வரும். சோதனை எலிகள் படிக்குமளவு பரிணாம வளர்ச்சி அடையாததால் இந்த டோஸ்கள் மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டன. பக்கவிளைவுகள், எச்சரிக்கைகள் என சில பட்டியல்களை ஃபைஸர் வெளியிட்டுள்ளது. இதயப் பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் இம்மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். சோதனைகளில் ஒருவருக்கு மட்டும் ஓவர்டோஸ் ஆகி கோமா நிலையில் உள்ளார். மற்றபடி பிரச்சினை இல்லை. இதன் சந்தைச் செயல்பாட்டைப் பொறுத்து Payon SR (Slow Release) என்ற பிரிவில் சில படைப்புகளைக் கேட்டிருக்கிறார்கள். அமெரிக்க மருந்து நிர்வாக வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டியதுதான் பாக்கி. இதில் எனக்குச் சுளையாக ஒரு தொகை கிடைக்கப்போகிறது. சக எழுத்தாளர்களுக்கு நிச்சயம் வயிற்றெரிச்சலில் தூக்கம் போய்விடும். அவர்கள் தூக்கம் அனுஷ்டிக்க பேயோன் 100sஐப் பரிந்துரைக்கிறேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar