முக்கியமான ஐஸ்லாந்தியப் படம்

in கட்டுரை

சமீபத்தில் பர்மா பஜாரின் டி.வி.டி. கடை ஒன்றில் பார்த்த ஒரு டி.வி.டி. உறை என்னைக் கவர்ந்தது. அது ஒரு ஐஸ்லாந்தியப் படம். அட்டையில் ஒரு அழகிய பெண் கண்மூடி மெய்மறந்த நிலையில் டி.வி.டி. கடைக்காரரை நோக்கிப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் பின்னணியில் ‘பிளர் எபெக்ட்’டில் நீல ‘டின்டிங்’கில் கடற்கரை. அவள் தலைக்கு மேல் பல விருதுப் பட டி.வி.டி.களில் இருப்பது போல ஒரு கோதுமை இலை வளையம். அவள் மார்பகங்கள் மீதும் இரு வளையங்கள். பல திரைப்பட விழாக்களில் விருது பெற்றதை அவ்வளையங்கள் சொல்லின.

“இந்த ஆண்டின் மிக முக்கியமான வெளிநாட்டுப் படம்” என்ற ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ பத்திரிகை விமர்சன வாசகம் அவள் சுவாசத்தின் அநேகமாக உஷ்ணமான ஸ்பரிசத்தை வாங்கிக்கொண்டிருந்தது. அவள் தாடையின் கீழே “ஆற்றலின் சுற்றுப்பயணம்” என்றார் ஒரு வெள்ளைக்கார விமர்சகர். “இந்த மாதிரி வராது” என்ற ‘நியூயார்க் டைம்’ஸின் வார்த்தைகள் அவள் மேலாடையை அத்துமீற முயன்றுகொண்டிருந்தன. தவற விடக் கூடாத படம்தான் போல என டி.வி.டி.யை வாங்கினேன் (அக்கவுண்ட் இருக்கிறது).

The Falcon என்ற இந்தப் படம் நிஜமாகவே 1998இன் மிக முக்கியமான படம். இந்த ஆண்டிலும் முக்கியமானதுதான். அதற்காகவே இந்த விமர்சனம். விமர்சனம் என்று வரும்போது முழுக் கதையையும் எழுதுவது அவசியம். இது தமிழ் கதைசொல்லல் மரபின் நீட்சி. நாம் சொல்லும் கதை சினிமாவில் வந்ததாக இருப்பது பிரச்சினை இல்லை. பெரும்பாலான படங்களின் கதை ஒரே மாதிரி இருக்கிறது. எனவே டிரீட்மெண்ட் மூலம் வித்தியாசம் காட்டுகிறார்கள். அது போக, முழு கதையைச் சொன்னால்தான் மக்கள் காட்ஃபாதரையும் சினிமா பாரடைசோவையும் குழப்பிக்கொள்ள மாட்டார்கள்.

ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜவிக்கில் ஒருவன் இருக்கிறான். படத்தில் முதலில் அவனைக் காட்டுவதால் அவன்தான் கதாநாயகன். அவன் ஒரு இடத்திற்குப் போகிறான். அங்கே இன்னொருவன் இருக்கிறான். இருவரும் பேசுகிறார்கள். முதல் ஆள் கிளம்பி வேறு ஓரிடம் செல்கிறான். போன இடத்தில் அவனுக்கு ஒன்று நடக்கிறது. இதனால் ஒரு மாற்றம் நிகழ்கிறது. ஒருத்தி இவனைத் தேடி வருகிறாள். இவன் கோபமாகப் பேசுகிறான். அவள் அழுதுவிட்டுக் கிளம்புகிறாள். அவள் போகும் இடத்தில் நான்கு பேர் அவளுடன் நீண்ட நேரம் பேசுகிறார்கள். பேசியவர்கள் முதல் ஆளிடம் வருகிறார்கள். முதல் ஆள் இரண்டாம் ஆளை வரவைக்கிறான். எல்லோரும் நீண்ட நேரம் பேசுகிறார்கள்.

இதற்கிடையில் அந்தப் பெண் திரும்பி வருகிறாள். அவளிடம் எல்லோரும் பேசுகிறார்கள். அந்தப் பெண்ணும் வந்தவர்களில் ஒருவரும் அங்கிருந்து காரில் கிளம்புகிறார்கள். முதல் ஆள் வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறான். இரண்டாவதாக ஒருத்தி வந்து அவனிடம் ஒன்றைக் கொடுக்கிறாள். இருவரும் சில நொடித் தியாலங்களுக்கு முத்தமிடுகிறார்கள். அவன் அந்தப் பொருளை வாங்கி உள்ளே கொடுத்துவிட்டு மீண்டும் வெளியே வருகிறான். அங்கேயே சிறிது நேரம் நிற்கிறான். அவன் மீது பீப்பி வகை வாத்திய இசையுடன் முடிவு டைட்டில் ஓடுகிறது.

படத்தை இயக்கியவர் குவின்னார் யுன்சன். வாயால் இரண்டு நிமிடங்களில் சொல்லப்படக்கூடிய கதையை காட்சிப்படுத்தல் என்ற திறமையைக் கொண்டு 80 நிமிடங்களுக்கு வளர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நம் கண்ணைக் கட்டிப்போடுவன. கதையைப் புரிந்துகொள்ளவே படத்தை இருமுறை பார்க்கலாம். மற்றவைகள் புரிய இப்படம் குறித்த விமர்சனம் எதையாவது படிக்கலாம். உண்மையிலேயே சொல்கிறேன், இது போல இன்னொரு படத்தைப் பார்க்க முடியாது. ஏனென்றால் உலக சினிமாவில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar