உலகம் சூடுபிடிக்கிறது

in கட்டுரை

இயற்கை அன்னைக்குக் காய்ச்சல். உலகம் சூடாகிக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் இதை ‘புவி வெப்பமாதல்’ என்கிறார்கள். மழையும் வெயிலும் அதிகரிப்பது மட்டுமே இதன் விளைவுகள் என்று நினைத்திருந்தேன். நல்லவேளையாக ஒரு வாசக விஞ்ஞானியைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்ன விளைவுகள் இன்னும் பயங்கரமானவை. முக்கியமானவற்றை மட்டும் இங்கு பட்டியலிடுகிறேன்.

 • கடல் மட்டம் கணிசமாக அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் நாம் கடற்கரைக்கு விமானத்தில்தான் செல்ல வேண்டியிருக்கும். மேடான பகுதிகளில் வசிப்பவர்களே பீச்சிற்கு இரண்டு மாடி ஏற வேண்டியிருக்கும்.
 • பனி உருகுவதால் உலகில் எங்குமே நல்ல தண்ணீர் கிடைக்காது. ஆனால் அது சென்னைவாசிகளை பாதிக்காது.
 • வெள்ளமும் வறட்சியும் போட்டி போட்டுத் தாண்டவமாடும். இதில் எது ஜெயிக்கிறதோ அதுவே அதிக ஆபத்தானதாகக் கருதப்படும்.
 • மிகப் பிரம்மாண்டமான மரங்களுக்கும் சலிப்பைத் தருமளவிற்குப் புயல்கள் அதிகமாகும்.
 • வெப்பநிலை ஏற்றத்தால் மலேரியா, டெங்கு பரவல் அதிகரிக்கும். பல அரசியல் தலைவர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் பலியாவார்கள்.
 • கோடையில் வெக்கை உயர்ந்து காட்டுத் தீக்கள் வதந்தி போல் பரவும். ஸ்வெட்டர் விற்காது.
 • தண்ணீருக்காகப் போர்கள் நடக்கும். துருப்புகள் குடிக்கத் தண்ணீர் இருக்காது.
 • பல காட்டு விலங்கினங்கள் அழியும். இரைக்கு அவற்றை நம்பி வாழும் அபாயகர விலங்குகள் எல்லாம் மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு வந்து உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொள்ளும்.
 • ஓசோன் மாசுபாட்டால் நுரையீரல் நோய்கள் ஏற்படும். இது மூச்சு வாங்குதலுக்கு இட்டுச்செல்லும்.
 • பனி ஆறுகள் மறைந்து ஒரே கஷ்டமாக இருக்கும்.
 • வெப்ப அலைகள் வீசும். இதனால் மழை சூடாகப் பெய்யும்.
 • கரியமில வாயுத்தொல்லையால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். ஒயிட் சட்னி இரண்டாவது முறை பரிமாறப்படாது.
 • நோய்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் ஃபேஸ்புக் நண்பர்கள் எண்ணிக்கை குறையும். பல சமயங்களில் நமது சுற்றுப்பயண புகைப்படங்களுக்கு லைக்கே கிடைக்காமல் போகும்.
 • பேரழிவுகளால் பெருத்த பொருளாதார நஷ்டம் ஏற்படும். சம்பளம் விட்டு விட்டுத்தான் கிடைக்கும்.
 • தமிழ்நாட்டின் நிலவியல் மாறி தமிழில் கௌபாய் திரைப்படங்கள் எடுக்கப்படும்.

இதில் ஒரே ஆறுதல் என்ன என்று யாராவது கேட்டால், இவை எதுவும் நம் காலத்தில் நடக்கா. நம் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்காகத்தான் இத்தனையும். அதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோம்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar