கேர்ள் விட்த் டிராங்கோ

in கட்டுரை

“Girl Width Drango Tattoo கட்டாயம் பாருய்யா” என்றார் லார்டு லபக்குதாஸ் என்னிடம் ஃபோனில். ஒரே பேச்சில் தான் பார்த்ததையும் நான் பார்க்கவில்லை என என்னிடமேயும் நிறுவும் சாமர்த்தியம்.

“கேர்ள் விட்த் டிராங்கோ நான் பார்த்துட்டேன். நல்ல படம். அந்த கேரக்டர் ஒண்ணு வருமே…”

“அதே படம்தான். நெறைய சீன்ஸ் இருக்கும்.”

“ஆமா, நல்ல மேக்கிங். விமர்சனம் எழுதுறீரா?”

“அது வந்து ரொம்ப நாளாச்சே. இப்ப எதுக்கு? சும்மா பிளாகுல ரெண்டு வரி. இந்த ஆண்டுதான் பாக்க அவகாசம் கிட்டியது… தன்னிச்சையாக இயங்கும் நேர்மையான இதழியலாளர் கார்ப்பரேட் சதிக்கு ஆளாகிறாரு… பாலியல் வன்முறைக்கு பலியாகும் நாயகி… சிகரெட் புகைக்கிற இருபாற்புணரி கணிப்பொறி நிபுணி… தற்சார்புப் பெண்களை ஆண் தன்மை கொண்ட அழகிலிகளாகவும் ஒழுக்கக் கேடாகவும் சித்தரிக்கும் ஸ்வீடிச அழகியல்… .”

இதற்குள் எனக்கு முகம் கோணியிருந்தது. எழுதியே விட்டாரா ஃபோனில்?

“நானும் எழுத ஆரம்பிச்சேன், முடிக்க நேரமில்ல.”

“படத்தைப் பாத்துட்டீருல்ல?”

“கண்டிப்பா! முருகராஜ் இல்ல… ஆக்டர் ஜீவா அசிஸ்டென்ட் – அவன் டி.வி.டி. குடுத்தான்.”

“ஓ.”

லபக்குதாஸ் விடைபெற்று அழைப்பைத் துண்டித்தார்.

நான் கூகுளுக்குப் போய் “Girl Width Drango” என்று தேடிப் பார்த்தேன். அது “Girl With Dragon” என்று திருத்தியது. அவர் பார்த்த படம் வேறு, நான் பார்க்காத படம் வேறு என்று தெரிந்த பின்பே நிம்மதி வந்தது.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar