சுகாவின் ‘தாயார் சன்னதி’

in கட்டுரை

மூன்றாம் பதிப்புக்கு எழுதிய அணிந்துரை. வெளியீடு சொல்வனம்.

நல்ல புத்தகம்

முதலில் சம்பிரதாயமாக சில வார்த்தைகளைச் சொல்லிவிடுகிறேன். ‘தாயார் சன்னதி’ என்ற புத்தகத்தை (இதுதான் அது) படிப்பதற்கு முன்பு எனக்குத் தோன்றியது: சுகா ஒரு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல மனிதரும்கூட. நூலைப் படித்த பின்பும் இந்தக் கருத்தெனக்கு மாறவில்லை. எழுத்தாளர்-மனிதர் என்று ஒரு கலவையான ஆள் இந்த சுகா.

சுவாரசியமான எழுத்து சலிப்பூட்டக்கூடியது என்பது என் கருத்து. காரணம், அதிலுள்ள ஆர்ப்பாட்டம், ‘படி, பிரமி’ என்ற முரட்டு மெனக்கெடல். சுகாவின் எழுத்து இந்த சுயமுன்னேற்ற உத்திகள் இல்லாமல் சுவாரசியம் அளிக்கிறது. அவர் தன் கதைகளைத் தனக்கே உரிய மொழியில் சொல்கிறார். சுகாவின் எழுத்துநடை வெகுஜன அச்சு ஊடகத்தில் பயன்படுத்தத்தக்கது என்றாலும் அவர் பொதுவான ஒரு வார்ப்புருவில் சிக்கவில்லை. திருநெல்வேலிப் பேச்சுத் தமிழின் கூறுகள் அடங்கிய நடை அவருடையது. நினைவுகூரல் தொனி தூக்கலாக இருந்தாலும் அவருடைய மொழிநடை இந்த அம்சங்களால் தனித்துவம் பெற்றிருக்கிறது. அடுத்த பத்தியைப் படிப்போமா என்ற நிச்சயமின்மை அவரை வாசிக்கும்போது ஏற்படுவதில்லை. சரி, என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்பதைவிட அதிக எதிர்பார்ப்பை அவர் எழுத்து தூண்டுகிறது. சுவாரசியமூட்டும் நோக்கம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அநாவசிய அலங்காரங்கள், எப்படி வளைத்து நிமிர்த்தி எழுதுகிறேன் பார் போன்ற வர்ணனைகள், வார்த்தை ஜாலங்கள் இல்லை. இந்த அரிய குணத்திற்கு வாசகர்கள் அவருக்குக் கடமைப்படுவதுதான் நியாயம்.

சுகா தனது நினைவேட்டில் பத்திரப்படுத்திப் பதிவுசெய்யும் பல விஷயங்கள் பத்தாண்டுகள் முன்பு வரை இளைய தலைமுறையினராக நம்பிக்கையுடன் வலம் வந்த பலருக்கும் என்னைப் போன்ற பிறவி சென்னைவாசிகளுக்கும் பழக்கமானவையே. மூட்டைப்பூச்சி, டயனோரா கருப்பு-வெள்ளை டி.வி., பொதுநலனுக்காக மேற்கொள்ளப்படாத நீண்டதூர சைக்கிள் பயணங்கள், எம்.ஜி.ஆர். எல்லாம் மறக்க முடியமா? மறக்கத்தான் சுகா விடுவாரா? அவை பற்றித் ‘தாயார் சன்னதி’ போல் ஒரு புத்தகம் எழுதிவிட மாட்டாரா? காலத்தின் தேவைகளுக்கு இழுபட்டுப் பல அற்புதமான விஷயங்களை இழந்து பெருமூச்சு விடும் நம் போன்றோரை சுகா தனது சைக்கிள் கேரியரில் ஏற்றிக்கொள்கிறார். பழகிய சைக்கிளின் நிதானமான ஓட்டத்தில் மென்மையான உலோகச் சத்தமாக அவரது குரல் ஒலிக்கிறது.

இந்த நூல் சுகாவின் வாழ்க்கை வரலாறு என்று சொன்னால் தவறாகாது. தன் வாழ்க்கை அனுபவங்களைத்தான் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் சொல்லும் அனுபவங்களைச் சிறுகதை போன்று தொடங்கி இடையுறுத்தல் ஏதுமின்றிக் கச்சிதமாக முடிக்கிறார். புன்னகையூட்டும் தருணங்கள் போல மனத்தை கனக்கச் செய்யும் நிகழ்வுகளும் அவர் கதைகளில் அதிகம் உண்டு. துன்பமும் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொண்ட தொனியில் இந்தக் கதைகளை எழுதுகிறார். எனக்கென்னவோ இந்தத் தொனி அவர் எழுத்து வடிவத்திற்குக் கொடுக்கும் மரியாதையாகவே தெரிகிறது. ஏனென்றால் சோகங்களைக் கவித்துவ நடையில் தத்துவ விரிவுரையாற்றப் பயன்படுத்தலாம். ஆசை ஆசையாகப் பல விஷயங்களைப் பொதுமைப்படுத்தலாம் (“இந்தா பிடி மேற்கோள். ஃபேஸ்புக்கில் போடு, போ” என்கிற மாதிரி). ஆனால் சுகா அதைச் செய்யவில்லை. அவர் தனது உணர்வைப் பதிவுசெய்து தத்துவ விசாரத்தை நம்மிடம் விட்டுவிட்டு அடுத்த அத்தியாயத்திற்கு நகர்ந்துவிடுகிறார். துன்பத்தைச் சிறுமைப்படுத்தாத, மரியாதையான அணுகுமுறை இவருக்கு. இந்த நூலில் அனைவரையும் அரவணைக்கும், அரவணைக்கப்பட விரும்பும் மனிதாபிமானியாக வெளிப்படுகிறார் சுகா. உண்மையில் அவர் அப்படித்தானா அல்லது இரட்டை வேடம் போடுகிறாரா என்பதை அவருடன் நேர்ப் பழக்கம் கொண்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.

ஆசிரியரின் இசைப் பிரியம் இந்தப் புத்தகத்தின் அடிச்சரடு. இசைக் கலைஞர்களை, இசை சார்ந்த விஷயங்களை, நுட்பங்களை தானே ஒரு நல்ல இசைக் கலைஞராக நிறைய பகிர்ந்துகொள்கிறார். எனக்குத்தான் இசை பற்றி எதுவும் தெரியாது. யாரையாவது கேட்டு எழுத நேரம் இல்லை. எனவே எனக்கு இசை பற்றி நிறைய தெரிந்திருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்பதை படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். சினிமா பற்றியும் வாஞ்சையுடன் எழுதியிருக்கிறார். அது அவரது இன்னொரு கண்.

அப்புறம் ஒன்று: சுகாவின் எழுத்துகளில் ஊர்ப் பெருமை தாங்கவில்லை. எப்படி என்றால், “ஊரு மேல அம்பூட்டு பிரேமையின்னா அங்கியே இருந்துக்கிடுயேன்? எதுக்கு அசலூருக்கு வந்து குப்பைய நொட்டணும்?” என்று நம்மைக் கேட்கவைக்கும் பெருமை. அதற்கு அவரைக் குறை சொல்ல முடியாது. அந்த ஊர் அப்படி. தட்டு நிறைய ஜிலேபி வைத்து ஆசையாய் சாப்பிட்டுக்கொண்டிருப்பவன் ‘சீச்சீ ஜிலேபி!’ என்று அதில் ஒன்றைத் தூக்கி எறிவானா? சொந்த காரணங்களுக்காகச் சென்னைக்கு வந்துவிட்ட சுகா, திருநெல்வேலியை விட்டு அசலூருக்கு ஏன் செல்லக் கூடாது என்பதற்கான காரணங்களைப் புத்தகம் முழுதும் சொல்கிறார். லேஸ் சிப்ஸ் தூரத்திலுள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில்தான் கிடைக்கும் என்று கிளம்பி அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரிலேயே வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை அவருக்கு. ஆனால் இந்த இடமாற்றம் அவரிடம் வலுவான கசப்புணர்வு எதையும் ஏற்படுத்தாததை கவனிக்க வேண்டும். உண்மையில் அவர் சொல்லும் காரணங்களுக்காகத்தான் நான் ‘ஐ லவ்’ புகழ் சென்னையை விட்டு வெளியேற விரும்புகிறேன். ஏனென்றால் சென்னைமயமாக்கம் விஷமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பெயர் நினைவில் நிற்காத குக்கிராமங்களின் பெட்டிக் கடைகளில்கூட பெப்சியைப் பார்க்கும்போது ஆத்திரத்தில் பகீரென்கிறது.

கடைசி பத்தியாக, ‘தாயார் சன்னதி’ சற்று கனமான புத்தகம். சரளமாக எழுதுகிறாரே என்று ஒரே அமர்வில் இதைப் படிப்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல (நானே முழுமையாகப் படிக்கவில்லை). இந்த நூலை அப்படிப் படிக்கவும் கூடாது. ஏனென்றால் கதைகளில் அவர் சொல்லிப் போகும் விவரங்கள் சமூகவியல், உளவியல், மரபியல் என்று பல ரீதிகளில் சிந்திக்க வேண்டியவை. முக்கியமாக இந்தப் புத்தகத்தைக் குழந்தைகள் படிக்க முடியாது. நிறைய கெட்ட வார்த்தைகள் வருகின்றன. எல்லாமே அந்த காலத்தில் பாவிக்கப்பட்டவை. எனவே குழந்தைகள் அவற்றைக் கற்றுக்கொள்வதில் பயனிருக்காது. பள்ளிக்கூடம்தான் அதற்குச் சரியான இடம். மொத்தத்தில் புத்தகம் நன்றாக இருக்கிறது.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar