கவிதை அகராதி

in கட்டுரை, கவிதை

(‘திசை காட்டிப் பறவை’ புத்தகத்தில் இடம்பெற்றது)

kavidhai_agaraadhi

உயிரெழுத்து, மெய்யெழுத்து கற்று முடித்து அடுத்த கட்டமாகக் கவிதை எழுத வரும் ஆர்வலர்களின் உதவியுடன் கவிதையை தேசிய பொழுதுபோக்காகக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இந்த அகராதி உருவாக்கப்பட்டுள்ளது.

அறை:

வெளியுலகம் கவிதைசொல்லியிடமிருந்து பாதுகாக்கப்படும் இடம். சுவாரசியம் இல்லாத நிகழ்வுகள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் இடம்.

இசை:

குறிப்பிட்ட ஒழுங்கைக் கொண்ட சத்தம். பாடல். தெரியாத இடத்திலிருந்து வரும் ஓசை. வெறுமை. சிந்தனையின் குரலுக்கு மாற்று.

இரவு:

அந்திக்குப் பிறகு வரும் நேரம். பொதுவாக 21:00 மணி முதல் 02:00 மணி வரை நீடிக்கும். நிசப்தம், மழை, தனிமை, நிழல் ஆகியவற்றின் கலவை. கவியச் செய்வதற்காகக் கவிதைசொல்லியால் உருவாக்கப்பட்டது.

உதடு:

உதடுகளில் ஒன்று. கவிதைசொல்லி அல்லது அவரது காதலி/காதலனுக்கு சக உதட்டுடன் சேர்த்து முத்தமிடுவதற்குப் பயன்படுத்தப்படுவது. இரு உதடுகளும் சேர்ந்து உதடுகள் அல்லது இதழ்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கவிதல்:

மேலிருந்து இறங்கி மூடுதல். இரவு, மௌனம், நிசப்தம், வெறுமை, தனிமை போன்றவை இதைத் தொழில்முறையாகச் செய்கின்றன.

கவிதை:

கருத்துப் பிழை.

கனவு:

தூக்கத்தில் தோன்றும் படிமம். கவிதைசொல்லியினுடைய அற்ப ஆசைகளின் கொள்கலன்.

காத்திருப்பு:

சும்மா இருத்தல். கவிதை தொடங்கும் நேரத்திலிருந்து முடியும் நேரம் வரை நிகழ்வது.

காற்று:

பிராணவாயு உள்ளிட்ட வாயுக்களின் கலவை. கவிதைசொல்லியின் தேவையைப் பொறுத்து வலுவாக அசைந்து பொருட்களை அசைக்கக்கூடியது அல்லது உடல் மீது படக்கூடியது. கவிதைசொல்லியின் எடுபிடியாகப் பயன்படுகிறது.

குழந்தை:

மனிதனின் வயது குறைந்த வடிவம். மனித அரசியலில் பாதகமான தாக்கம் எதையும் நேரடியாக ஏற்படுத்தாமையால் பார்வைக்குகந்த தோற்றம், இனிய ஒலி எழுப்பும் திறன், முதிர்ச்சியின்மை போன்ற காரணங்களுக்காகக் கொண்டாடப்படுவது. கவிதைக் கருவி.

குறிப்புகள்:

சும்மா. ஒன்றுமில்லை. கவிதை என அடையாளம் காட்டத் தலைப்பில் மட்டும் பயன்படுத்தப்படும் சொல்.

கொலை:

உயிரை நிறுத்துதல். உயிர் என்பது காதலனின், காதலியின் அல்லது வாசகனின் உயிரை, அல்லது பூனை, குருவி, புறா போன்ற மென்மையான ஜீவராசிகளின் உயிரை, அல்லது டினோசார், கப்பல், காண்டாமிருகம் என வாழ்க்கையுடன் தொடர்பில்லாதவையின் உயிரைக் குறிக்கிறது.

சிறுமி:

பார்க்க: குழந்தை. கவிதைசொல்லி ஆணாக இருக்கும் பட்சத்தில் குழந்தை சிறுமியால் மாற்றீடு செய்யப்படுகிறது. அப்பாவித்தன்மையின் குறியீடாக நீண்டகாலமாகப் பயன்படுவது.

சுயம்:

இனிப்பு வகை. ‘நான்’ என்பதன் மேம்படுத்திய வடிவம். தத்துவார்த்த சிந்தனைகளையும் உறவுச் சோகங்கள் குறித்தான எண்ண ஓட்டங்களையும் பதிவுசெய்யப் பயன்படுகிறது. இழத்தல், தொலைதல் என்பவற்றுடன் இணைத்து எழுதப்படுகிறது.

தனிமை:

பிறர் உடனில்லாமல் ‘நான்’ தனியாக உள்ள நிலை. ‘நீ’ போல, இல்லாதபோதும் இருப்பதாகக் கவிதையில் எழுதப்படுவது. பெரும்பாலும் சுயசுபாவ காரணங்களால் ஏற்படுவது. பல சமயங்களில் கவிதையில் “யாருமற்ற” என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதற்காகக் கற்பனை செய்யப்படுவது.

தேடல்:

பார்க்க: தேடுதல்.

தேடுதல்:

தேடாமை.

தேவதை:

கவிதைசொல்லியின் காதலி. கவிதைசொல்லி ஒருதலையாய்க் காமுறும் பெண். சிறுமி. கற்பனை உயிரினம்.

தொலைதல்:

முன்னறிவிப்பின்றி தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மறைந்துபோதல். உட்கார்ந்த இடத்திலிருந்து நகராதிருத்தல். சுயம், முகவரி, கனவு உள்ளிட்ட சொற்களுடன் இணைத்து எழுதப்படுவது.

தோழி:

‘காதலி’ என்பதன் இடக்கரடக்கல். நீ, நான், சுயம், மழை, தொலைதல், முகவரி, இசை, கனவு ஆகியவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.

நதி:

பெரிய நிலப் பரப்பில் நிறைய ஓடும் நீர். சுவை குன்றிய விஷயங்களின் குறியீடாகப் பயன்படுகிறது.

நான்:

கவிதைசொல்லி. எல்லாம் அறிந்த நுண்ணுணர்வாளர். ஆகப்பெரிய மனிதநேயர். ஒரு கவிதையைச் சிந்திக்கத் தொடங்கினால் அன்னியமாதலுக்கு உட்படுபவர். சுயம் அறிந்ததைப் பகிர்ந்துகொள்பவர். அசப்பில் ‘நீ’ போன்றவர், ஆனால் இந்தப் பக்கமாக அமர்ந்திருப்பவர்.

நிசப்தம்:

ஒலியின்மை. ஊடுருவப்படுவதற்காக எழுதப்படுகிறது. இரவு, தனிமை போன்றவற்றுடன் இணைத்து எழுதப்படுகிறது. வெறுமை. பார்க்க: நிழல்.

நிழல்:

ஒளி ஒரு பொருளின் மீது படும்போது அப்பொருளின் ஒளிபடாத பகுதியின் மீது விழும் இருண்மையானது ஒளி கிளம்பும் இடத்திற்கு எதிர்த் திசையில் பிரதிபலித்தல். ஒளியைக் குறிக்கும் இருள். கவிதைசொல்லிக்குப் புரியாத ஒன்றைக் குறிப்பிடவும் கவிதையில் ஆழம் இருப்பதான எண்ணத்தை விளைவிக்கவும் பயன்படுகிறது.

நீ:

நாம் அல்லாதவர்களில் நம்முடன் உரையாடிக்கொண்டிருப்பவர் அல்லது நம்மால் உரையாடப்படுபவர். எழுதுவதற்காக உருவாக்கப்படும் இல்லாத நபர், எ.கா., காதலி அல்லது காதலன்.

பயணம்:

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்லும்போது நிகழ்வது. சும்மா இருத்தல். புட்டத்தை இருக்கையிலிருந்து பிரிக்கவியலாத நிலை.

புன்னகை:

கணநேர மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வாயசைவு. கவிதைசொல்லியின் காதலி அல்லது அறியாத இளம்பெண் அல்லது குழந்தையால்/சிறுமியால் செய்யப்படுகிறது.

பெயர்:

அழைப்பதற்கும் சான்றிதழ்களில் அடையாளம் குறிப்பதற்கும் பயன்படுவது. பெரும்பாலும் கவிதைசொல்லியினுடையது. கவிதையில் உரிமையாளர் மறந்துபோவதற்காகப் புகுத்தப்படுகிறது.

மரணம்:

மனிதர்கள் அல்லது பறவைகள் அல்லது பூனையின் உயிர் நின்றுபோதல். உயிர் நிறுத்தப்படுவதன் விளைவு. பார்க்க: கொலை.

மரணித்தல்:

மனிதனுக்கு அல்லது பிற உயிரினங்களுக்கு மரணம் சம்பவித்தல். ரம்மியமான வர்ணனைக்குட்படும் கெட்ட சாவு. கவிதைசொல்லி நிகழ்த்தும் காரியச் சாவு.

மழை:

வானில் நீர்தாரி மேகங்கள் மோதுவதால் நிலத்தின் மீது நீர்த்துளிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் விழுதல். மந்தமான சூழலை விவரிக்க உதவுகிறது. தோழி, தேவதை, சிறுமி முதலான சொற்களுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

முகம்:

கண்கள், காதுகள், மூக்கு, வாய் முதலானவை அமைந்திருக்கும உடலுறுப்பு. தொலைதல் என்ற வார்த்தையுடன் இணைத்து எழுதப்படுகிறது. சுய அன்னியமாதல் மற்றும் சுய மேன்மை வெளிப்படும் கணங்களில் முகங்கள் எனப் பன்மையில் குறிப்பிடப்படுகிறது.

முகவரி:

கவிதைசொல்லி இருக்குமிடம் குறித்த முழு விவரம். பெரும்பாலும் அவர் இல்லாத இடம். உரைநடையில் மறப்பதற்காகவும் கவிதையில் தொலைப்பதற்காகவும் உருவாக்கப்படுகிறது.

முத்தம்:

ஒரு வாயால் இன்னொரு வாயை அல்லது உடலின் பிற பாகங்களை மூடிய நிலையில் அழுந்தத் தொடுதல். பெரும்பாலும் தன்மை, முன்னிலை பயன்படுத்தப்படும் கவிதைகளில் கவிதைசொல்லியால் ஏற்படுத்தப்படும் உடல் சாராத, உணர்ச்சி சார்ந்த ஓர் உளவியல் அரசியல் நிகழ்வு. கவிதைசொல்லிக்குக் கிடைக்காத காரணத்தால் எழுதப்படுகிறது.

மொழி:

கவிதைசொல்லியின் காதலியும் பேச்சு வராத உயிரினங்களும் பேசும் வார்த்தைகள். பெரும்பாலும் பொருள் அறிய முடியாததாகக் கூறப்படுகிறது.

வனம்:

மரத் தொகுப்பு. கவிதையில் அடர்த்தியானது. எதையுமோ யாரையுமோ காணாமல்போக வைக்கப் பயன்படுகிறது.

வெளி:

மளிகை சாமான்கள் கிடைக்காத இடம்.

வெறுமை:

ஒன்றுமின்மை. கவிதைசொல்லியின் படைப்பூக்க இழப்பு சார்ந்து கவியும் சோகத்தைக் குறிக்கிறது.

…!:

…!!!

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar