என் வீட்டில் சிலர்

in கட்டுரை

என் வீட்டில் சில பேர் இருக்கிறார்கள். வந்து நான்கு நாட்களாயிற்று. இன்னும் இங்கேயே தொடர்கிறார்கள். எப்போது போவார்கள் என்று தெரியவில்லை. என் வீட்டை விட்டு வெளியே போனால் – குறிப்பாக மூட்டை முடிச்சுகளுடன் நான்கைந்து பேராகப் போனால் – கண்டதும் சுடும் துணை ராணுவ உத்தரவு ஏதும் இல்லை. அமைதிப் பூங்கா நான் வசிக்கும் இடம். அது இவர்களுக்கு சாதகமாகிவிட்டது. இவர்கள் நகர்வதாக இல்லை. இவர்களுக்கு இங்கேயே எல்லாம் கிடைக்கிறது. துணிமணி, பற்பசை, சோப்பு, இத்யாதிகளைக் கைவசம் வைத்திருக்கிறார்கள். தீர்ந்துபோனாலும் மீண்டும் கடைக்குச் சென்று வாங்கிக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

அதுதான் பிரச்சினை. இங்கே கடைகள் இருக்கின்றன. கடைகள் மட்டுமல்ல, என் வீட்டைக் கடைகளுடன் இணைக்கும் சாலைகள் இருக்கின்றன. குண்டும் குழியும் என்னவோ நிதசர்னங்கள்தாம். ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயும் அப்படித்தானாம். அதனால் அவை பரவாயில்லையாம். அதாவது இப்போதைக்குப் போக மாட்டார்களாம். இங்கேயேதான் இருப்பார்களாம். எங்கள் வீட்டு சாப்பாடு அருமையாக இருக்கிறதாம். அவர்கள் ஊரில் கத்தரிக்காய் இவ்வளவு ருசி இல்லையாம். ஒருநாள் பயணத்திற்கு ஆகும் சாப்பாட்டைச் சமைத்து சுளையாக ஐந்து ஹாட்பேக்குகளில் கட்டிக்கொடுத்து நான் வழியனுப்பத் தயாராக இருந்தால்கூடக் கிளம்பும் அறிகுறி இருக்காது.

இந்த ஊரில் குழந்தைகள் விளையாடப் பல இடங்கள் இருக்கிறதாம். அவர்கள் ஊரில் சினிமா பார்க்க வண்டி கட்டிக்கொண்டெல்லாம் போக வேண்டாமாம். அரை மணிநேர பேருந்துப் பயணத்தில் திரையரங்கு வந்துவிடுமாம். திரைப்படக் கட்டணங்கள் இங்கு போல் அதிகமில்லையாம். பாப்கார்ன் வகைவகையான சுவைகளில் கிடைக்காது என்றாலும் அங்கே தலைக்குப் பத்து ரூபாயில் முடிந்துவிடுமாம். பீட்ஸா பிடிக்காதாம். முதலை மாதிரி வாயைத் திறந்துகொண்டு பர்கர் சாப்பிடுவதும் பிடிக்காதாம். அவர்கள் ஊரிலும் இண்டர்நெட் புக்கிங் இருக்கிறதாம். ஆனால் அதை யாரும் பயன்படுத்துவது இல்லையாம்.

இன்னொன்று, இவ்வளவு போக்குவரத்து நெரிசல் அவர்கள் ஊரில் இல்லை. இங்கே ஒவ்வொன்றுக்கும் நீண்ட வரிசை. எங்கு பார்த்தாலும் ஜனம். இந்த ஜனமெல்லாம்கூட உங்களைப் போல விருந்தாளிகள்தானே. எல்லாம் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள். இந்த ஊர்க்காரர்கள் என்ன ஒரு முப்பது சதவீதம் இருப்பார்கள். தெருக்கள் துப்புரவாக இல்லையாம். மற்றபடி இது நல்ல ஊராம். அதனால் இப்போதைக்குப் போக மாட்டார்களாம். இந்த ஊரில் நிறைய வசதிகள் இருக்கிறதாம். இங்கே பெண் எடுப்பதில் பிரச்சினை இல்லையாம்…

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar