ஒரு ஊரில் ஒரு கதை

in கட்டுரை, பத்தி

(‘திசை காட்டிப் பறவை’ புத்தகத்தில் இடம்பெற்றது)

கட்டுரை எழுதுவது என்பதே ஒரு சுவாரசியமான செய்கை. குறிப்பாக, கட்டுரை எழுதுவது பற்றிக் கட்டுரை எழுதுவது என்றால் கேட்கவே வேண்டாம். இன்னும் குறிப்பாக, இந்தக் கட்டுரை பற்றிக் கட்டுரை எழுதுவது என்றால் இந்தப் பக்கமே வர வேண்டாம்.

ஆங்கிலத்தில் self-reference எனப்படும் இந்தத் தற்குறிப்பீடு என்ற தனித்துவத்தை இத்தாலோ கால்வினோ போன்ற சமகால உலக எழுத்தாளுமைகள்கூடத் தமது படைப்புகளில் தொழிற்படுத்தியிருக்கிறார்கள். “ஒருவேளை பனிக்கால இரவில் ஒரு பயணி” (If on a winter’s night a traveller) என்கிற ஒரு முழுநீள நாவலையே அவர் தற்குறிப்பீடு உத்தியில் எழுதியதோடு அதற்கு வாசகனை (குறியீட்டுப் பன்மை) உடந்தையாக்க அவனையும் ஒரு கதாபாத்திரமாக்கினார். வாசகனின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள ஒரு கதாநாயகியைப் புனைவில் நுழைத்தார் (வாசகியை நுழைத்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும்; ஆனால் புனைவு மரபில் ஆசிரியன் ஒரு தனிநபரையோ தெள்ளிய அடையாளம் அற்ற மொத்த வாசக சமூகத்தையோ மட்டும்தான் விளித்து எழுதியிருக்கிறான், குறிப்பிட்ட இருவரை அல்ல. புனைகடிதங்கள் அப்படி எழுதப்படுவதுண்டு, முழுப் படைப்புகளும் அல்ல). எலும்புத் துண்டாகத் தன்னையும் நுழைத்து வாசகருடன் ஊடாடவைத்தார். இது ஒரு வகை இலஞ்சமாகத் தெரிந்தாலும் இலாபம் இலக்கியத்திற்கே என்பது வேறு விஷயம்.

கால்வினோவைத் தவிர்த்து, வேறு எந்த எழுத்தாளர்கள் இந்த உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள்? பலரும். உம்பர்ட்டோ ஈக்கோ, மிலன் குந்தேரா, தாமஸ் பிஞ்சன் போன்றவர்கள் இம்மாதிரியாக எழுதாமல் இருந்தால்தான் ஆச்சரியம். இவர்களைத் தவிர்த்து, பொதுவாகத் தற்குறிப்பீட்டு உத்தியின் மைய இலக்கு நகைச்சுவை என்பதாகவே இருக்கிறது. மையத்தை விலக்கிப் பார்த்தால் ஒரு அறிவுஜீவி உரையாடல் நிகழ்த்துவதான பாவனைக்குத் தற்குறிப்பீடு உத்தி உதவுகிறது.

தமிழில் பேயோன் இவ்வகையான படைப்புகளைத் தொழிலாகச் செய்துவருகிறார். ‘இடைநிலை’ ஏப்ரல் 2010 இதழில் வெளியான ‘ஒரு ஊரில் ஒரு கதை’ என்கிற அவரது சிறுகதை தமிழில் தற்குறிப்பீட்டு எழுத்திற்கு ஓர் உதாரணம்:-

ஒரு ஊரில் ஒரு கதை இருந்தது. அந்த இக்கதை எந்த இலக்குமின்றி ஒவ்வொரு சொல்லாக வளர்ந்து நீண்டு பெருத்துப் பயணித்து அதே தடங்கலற்ற போக்கில் அடுத்த வரிக்கு வந்தது. இன்னும் சில சொற்களை அநாயாசமாகப் பிறப்பித்து முதல் பத்திக்கு சதை சேர்த்துக்கொண்டது. யாரையுமோ எதையுமோ பற்றியற்றுத் தன்னிறைவாகத் தனக்குள் எல்லாத் திசைகளிலும் விரிவடைந்து அடுத்தப் பத்திக்குத் தொடர்ந்தது அதன் பயணம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்தக் கட்டுரையின் இரண்டாவது பத்தியின் நீளம் எனது சமீபகாலக் கட்டுரை இலக்கியம் கண்டிராத ஒன்று. பத்திகள் சுருக்கசுருக்கமாக இருந்தால்தான் வாசிக்க எளிதாக இருக்கும். இது என் சக எழுத்தாளர்களால் ஒருபக்கம் தூற்றப்பட்டு இன்னொரு பக்கம் அவர்களுக்குக் காசோலை அனுப்பும் வெகுஜன இதழ்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது.

இந்தக் கட்டுரையை மொட்டையாக முடிக்க வேண்டாமே என்று பார்த்தால் – தற்குறிப்பீட்டுக் கட்டுரை எழுதுவது எளிதல்ல – கடைசிப் பத்தியை எப்படியாவது தர்க்கபூர்வமாக முடிக்க வேண்டியிருக்கிறது. வேறு எதைப் பற்றியும் எழுத முடியாமல் தற்குறிப்பீடு என்று என் வார்த்தைகளாலேயே வேலி போட்டுக்கொண்டாயிற்று. இனி கட்டுரையை முடித்த மாதிரிதான்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar