பலியாடு ஆக்கப்படுகிறதா மின்விசிறி?

in கட்டுரை, பத்தி

எங்கள் பகுதியில் பத்திலிருந்து பன்னிரண்டு வரை மின்வெட்டு. மின்விசிறி ஓடாமல் வீடு நிசப்தம் காக்கிறது. பெண்கள், குழந்தைகள், மின்னணுச் சாதனங்கள், சமையல் கருவிகள், தெருவிலிருந்து வரும் பல்வேறு வகை ஒலிகள் எல்லாம் மின்விசிறி மட்டுமே அத்தனை நாராசத்தையும் செய்வது போல் தெரியவைக்கும் நாடகம். மின்விசிறி அணைந்தால் எல்லாம் அடங்கி என்னவோ மின்விசிறியில்தான் சுற்றுப்புற சத்தங்கள் அனைத்திற்கும் சாவி இருப்பது போல் ஒரு தோற்றம். மேலும், எல்லா சத்தங்களையும் மின்விசிறிச் சத்தம் ஊதிப் பெரிதாக்குவது போலும் ஒரு மாயை. இரு ஓசைகளும் ஒன்றாகக் காணாமல் போவதற்குத் தற்செயலைக் காரணங்காட்ட முடியாதவண்ணம் இரண்டும் முன்னேற்பாட்டின்படி இணைந்து செயல்படுவதான ஒரு மயக்கம்.

மஞ்சள் வெளிச்சமான தனிமை அமைதியில் நான் மூக்குறியும் ஒலி மட்டும் என்னோடு அவ்வப்போது உரையாடிக்கொண்டிருக்கிறது. தொலைபேசி மாநாட்டு அழைப்புப் போல எனது கனைப்பொலி இடையிடையே சேர்ந்துகொள்கிறது. ஆச்சரியப்பட ஏதுமற்ற விதமாக, நாங்கள் பேசுவது எனது ஆரோக்கியத்தைப் பற்றி. ஆங்கிலக் களிம்புகளின் காட்டமான நிவாரண நெடி கவனத்தைச் சிதைப்பது என்பதால் பகற்பொழுதில் தூங்கி விழவைக்கும் மாத்திரைகளோடு நிறுத்திக்கொண்டு பழக்கம் (ஜலதோஷ மாத்திரைகளால் எல்லோருக்கும் தூக்கம் வருமென்று சொல்ல முடியாது; ஒரு மருந்திற்கு ஒருவரின் உடல் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை அவருடைய மரபணுத் தொடரின் தன்மைகளே தீர்மானிக்கின்றன).

தஸ்தயெவ்ஸ்கியின் நிலத்தடி மனிதனைப் போல, மருத்துவத்தில் நம்பிக்கை கொள்ளுமளவு எனக்கு மூட நம்பிக்கை இல்லை. ஆங்கில மருத்துவத்தால் உடல் உபாதைகளிலிருந்து நிவாரணமடைவது ஒரு உபாதையைக் கொடுத்து இன்னொரு உபாதையைப் பெறுமோர் ‘எக்ஸ்சேஞ்ச் பாலிசி டிரேட் ஆஃப்’ பரிமாற்றம். ஆயுர்வேத. சித்த மருத்துவங்களை நம்பலாமா என்று தெரியாது. நவீன நோய்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாத இம்மருத்துவங்களில் பிராணவாயுக் குழாய் கிடையாது. ஆனால் மத்தியகாலங்களில் நோயாளிகளைக் குணப்படுத்த அவர்களின் உடலிலிருந்து ரத்தம் முழுவதையும் வடிய விட்டார்கள். மரணம்தான் நோயைக் குணப்படுத்தியது என்று சொல்ல வேண்டும். நோய்வாய்ப்பட்டவர் இப்படிக் குணமடைந்த பின்பு வாழ்க்கையை விட்ட இடத்திலிருந்து தொடர முடியாததால் ரத்த வடிசல் சிகிச்சைமுறை தோல்வியடைந்தது. இன்று அதே ரத்த வடிசல் சிகிச்சைமுறையை மருத்துவக் கட்டண ரசீதுகளில் பிரதிபலிக்கக் காண்கிறோம்.

வந்தது மின்சாரம். மின்விசிறி சுதாரிப்பதற்குள் ஊருக்கு முன்பு குழல்விளக்கு கண் திறந்தாயிற்று. இதில் ஒரு தர்க்கபூர்வ நியாயம் உள்ளது. மின்விசிறியைப் பின்னணியொலி உற்பத்திக் கருவியாகச் சித்தரித்தாயிற்று. ஒலியைவிட வேகமானதல்லவா ஒளி? மாடி வீட்டில் உடனடியாகத் தொலைக்காட்சி ஓசை. அவ்வளவு அவசரம். மின்சாரம் வந்துவிட்டதாகத் தெருவில் பொதுமக்கள் கத்துகிறார்கள். குப்பை வண்டிக்காரர் விசில் ஊதிக்கொண்டு எங்கள் தெருவில் நுழைகிறார். எதிர்வீட்டு வாசலில் மூன்று பெண்கள் மத்தியில் பேச்சு உரக்கிறது. யாரோ ஏதோ கத்திக்கொண்டே ஓட, அவர் பின்னே ஆறு பேர் அரிவாளுடன் ஓடுகிறார்கள். நவீன நடுத்தர மக்களின் வாழ்க்கையின் பின்னணி இசையாகவே ஆகிவிட்டிருந்த மின்விசிறிச் சுற்றோசை இத்தனை சத்தங்களுக்கிடையே அமைதியாகித் தன் இடத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டிருக்கிறது.

(பிப்ரவரி 2013 ‘தமிழ் ஆழி’ மாத இதழில் வெளிவந்த பத்தி)

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar