ஏழு கவிதைகள்

in கவிதை

சுவரொட்டி கிழித்தெடுத்த
வரைபடக் காரை காட்டும்
சுவரில் சும்மாப் போகிற
எறும்பை நசுக்கக் குழந்தாய்
ஏன் காலைத் தூக்குகிறாய்?
யாராவ துன்னை மிதித்தால்
உனக்கும் வலிக்கும் தானே?
யாராவ தென்னை மிதிக்க
நானென்ன எறும்பா டாடி?

*

விடிகாலைச் சைக்கிள் மிதியின்
சோம்பலுடன் வாழ்வைக் கடக்க
ஆசை என்றாலும் காலில் சக்கரங்கள்
இரும்புக் குண்டுகளாய்.

*

காலைகளின் புதுமை அழகு
மதியங்களின் அமைதி அழகு
இரவின் ஓய்வு அழகு
இடைப்பட்ட காலங்களோ
கோராமை கோராமை!

*

விலங்குகளுக்கு இல்லையா
பரிணாம வளர்ச்சி?
பாருங்கள் நடுரோட்டில்
மாடுகளின் அழிச்சாட்டியம்.

*

பிறந்தபோது குளித்தாய்
இறந்தபோது குளித்தாய்
நடுவில் குளித்ததெல்லாம்
காந்தி கணக்கு.

கோபயாஷி இஸ்ஸாவுக்கு

*

பெடல்களை மெல்ல மிதி
சரிவுகளில் சும்மா விடு
சறுக்கிச் செல்லட்டும் வண்டி
நமக்கென்ன அவசரம்?

*

அழகான பெண்ணைத்
திரும்பிப் பார்த்துக்கொண்டே
நடக்கிறேன் ஏதோ தூணில்
கவனியாமல் மோதிக்கொள்ள
பார்த்துக்கொண்டே நடக்கிறேன் அவளை
இன்னும் தூணை வரக் காணோம்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar