ஆல்பிரெட் கேம்பஸின் வெள்ளை பீடி

in கவிதை

நன்றி: Henri Cartier-Bresson

நன்றி: Henri Cartier-Bresson

காலம் கருப்பு-
வெள்ளையாக இருந்தது.
ஆல்பிரெட்1, பிரிய ஆல்பிரெட்,
கண் காணாச்
சுவரொன்றில் சாய்ந்து
கார்த்தியர் பிரெஸ்ஸனின்2
காமிராவைப் பார்க்கிறார்.
வாயில் ஒரு தம்.
வடிகட்டி இல்லாச்
சிகரெட்டில் இன்னும்
3-4 இழுப்புகளே
மிச்சமிருக்கையில்
முடிக்கிறார் வேலையைப்
புகைப்படக் கலைஞ்சர்.
பின்னர் கார் விபத்தில்
மாண்டார் கேம்பஸ்.
பிரிய கேம்பஸ்
புகைப்படத்தில் இருக்கிறார்
பத்திரமாய், கம்பீரமாய்.
வெண் கோல்வாஸ்3
உதட்டைப் பொசுக்கப் படத்தில்
நேரம் இருக்கிறதெனினும்
புகைப்படக் கலைஞ்சர்
படமெடுக்கத் தாமதிப்பின்
கரைந்து விரல்களைச்
சுட்டுவிடக்கூடும்
கேம்பஸின் வெள்ளை பீடி.
தம் கதி அறிந்த நம்மைக்
காமிரா வழி பார்க்கிறார்
பிரிய கேம்பஸ்.
அவருக்கு இன்னும்
தெரியவில்லை ஒன்றும்.

1 பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பிரெட் கேம்பஸ்
2 புகழ்பெற்ற புகைப்படக் கலை மேதை ஹென்றி கார்த்தியர் பிரெஸ்ஸன்
3 பிரெஞ்சு சிகரெட்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar