ஒடிசியில் ஒரு ஈச்சமரம்

in கட்டுரை

(‘திசை காட்டிப் பறவை’ நூலில் இடம்பெற்றது)

பிரபலமாக இருப்பதில் பல சங்கடங்கள் உண்டு. அன்றாட வாழ்க்கையை அன்றாடமும் வாழ முடியாது. கடித வடிவ காகிதக் குப்பை சேரும். ஒரு பொது இடத்திற்குப் போனால் நம் மீது கூட்டம் சேரும். மின்னஞ்சலிலோ, நைஜீரிய பேரங்களைவிட பேஸ்புக் நட்பு அழைப்புகள் குவியும். பொது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மாறுவேடம் கோரும்.

நானும் பிரபலமாகத் தொடங்கிய புதிதில் அடையாளம் தெரியாதிருக்க மத்தியப் பிரதேச பழங்குடியினர் முகமூடி அணிந்திருக்கிறேன், சென்னையின் தெருவீதிச் சாலைகளில் பிளாஸ்டிக் ஈச்சமரத்தை முதுகில் கட்டிக்கொண்டு அலைந்திருக்கிறேன். அப்படியும் கண்டுபிடித்துவிடுகிறார்கள், என்னவோ குறிப்பிட்ட நேரத்தில் ஒடிசி புத்தகக் கடையில் ஒரு ஈச்சமரம் நிற்கும் என யாரோ தகவல் சொல்லிவிட்டது போல.

நியூ புக்லாண்ட்ஸில் ஒரு ஹெமிங்வே நாவலுக்கு முன் நின்று புலிநக செயினைக் கண்ணில் ஒற்றிக்கொண்டிருக்கையில் ஒரு வாசகரிடம் பிடிபட்டபோதுதான் இது வேலைக்கு ஆகாது என முடிவுசெய்தேன். தமிழ்ச் சூழல் புலிநக செயினுக்கே ஏமாறத் தவறினால் வேறு எதற்கு ஏமாறும்? கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைப்பதில் செலவிடும் படைப்பூக்க ஆற்றலில் சிறிதளவையாவது உருப்படியானதும் எளிதானதுமான மாறுவேட உத்திகளுக்குப் பயன்படுத்த வேண்டாமா?

உரக்கச் சிரிக்கும் பழக்கத்தையும் திடீர் திடீரெனக் கோபம் வந்து எதிரில் யாருமில்லாத சமயங்களில்கூடக் கை ஓங்கும் சுபாவத்தையும் மாறுவேடத்திற்காகத்தான் உருவாக்கிக்கொண்டேன். ஆனால் இவை குழப்பத்தையும் காலப்போக்கில் கூடுதல் மரியாதையையும் விளைவித்தனவோடு சரி. இதற்கிடையில், தற்செயல் நிகழ்வுகள் எதற்காக இருக்கின்றன?

நான் கூறப்போகும் நிகழ்வு நடந்த அன்று… மெல்லத் தூக்கத்திலிருந்து மனமின்றி விடுபட்டுக்கொண்டிருந்தது சென்னை. குருவிகளின் கூச்சல் வானை நிறைத்தது. மதியம் 12.30 மணி வாக்கில் ஒரு கடையில் சோடா குடித்துக்கொண்டிருந்தேன். மாறுவேடமாகத்தான். ஏனென்றால் உலகம் என்னை காபி, டீ குடிப்பவனாகவே அறிந்திருந்தது. வழக்கம் போல் ஒரு வாசகர் என்னை அடையாளம் கண்டு சினிமா பாரடைசோ பற்றிப் பேசத் தொடங்கினார். உடனே அனிச்சையாக பட்டர்பிஸ்கட் ஜாடி மீதிருந்த ஒரு சிறு புத்தகத்தை எடுத்துத் திறந்து பார்த்தேன். ‘அரை விநாடி அநியாயம்’. ராஜேஷ்குமார் நாவல்.

இந்நிலையில் தீவிர இலக்கிய ரீங்காரமாக மாறிவிட்டிருந்த வாசகரின் பேச்சை இரு காதுகளாலும் தடுத்தபடியே ராஜேஷ்குமார் நாவலின் வாசகர் கடிதப் பகுதியில் ஆழ்ந்தேன் (என் நண்பர் ஒருவர் அதற்குக் கடிதம் அனுப்பியிருந்தார்). திடீரென வாசகரின் ஒலிப்போக்கு நின்றிருந்தது. என் அருகில் நின்றாற்போல எதையோ அல்லது யாரையோ தவிப்புடன் தேடிக்கொண்டிருந்தார். “பேயோன் சார்! பேயோன் சார்!” என்று அவர் கூவிய பின்புதான் அவர் தேடத் துவங்கிவிட்டிருந்தது என்னை என்றுணர்ந்தேன். கடைக்காரர் உள்கடைக்குள் மூழ்கியிருக்க, அப்படியே ராஜேஷ்குமார் நாவலும் கையுமாய் கொசுறாக ஒரு தேன்மிட்டாயும் எடுத்த கையோடு நடையைக் கட்டினேன்.

தேன்மிட்டாயைக் கடைவாய்ப் பற்களால் மெல்லப் பிளந்து உயர்துழாவலால் அதன் உள்ளுலகை நாக்கிற்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கையில் எனக்கு உண்மை உறைத்தது. பொதுவாக ராஜேஷ்குமார் நாவல்கள் என்னால் படிக்கப்படுவதில்லை. பதினைந்து ஆண்டுகளாகப் பெரும் புனைவுகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பத்திகள் வாயிலாக ஒரு சமகால தனித்துவ தீவிர இலக்கியப் பாரம்பரியத்தை நிறுவிக்கொண்ட எழுத்தாளுமையின் கையில் ராஜேஷ்குமார் நாவல் இருப்பது இயற்கையின் பேரசாத்தியங்களில் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதாக வாசகப் பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. அதனால்தான் நான் நாவலைக் கையிலெடுத்ததும் அந்த வாசகர் என்னை அடையாளம் காண்பது நின்றுவிட்டிருக்கிறது.

அதிர்ஷ்டத்தை நம்பாமல் இதே விதமாக எதிர்ப்பட்ட இன்னொரு வாசகரிடம் இந்த உத்தியை முயன்றேன். அப்பழுக்கில்லாமல் வேலை செய்தது. அவரை உசுப்பி “தெரியுமா, நான்தான் பேயோனாம்” என்றுகூட சொல்லிக்கொண்டேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்ததோடு சரி. அதற்குப் பின்னர் தவறியும் ராஜேஷ்குமார் நாவலைக் கைவிடவில்லை. உங்கள் அபிமான நடிகரால் இதைச் செய்ய முடியுமா?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar