மூட்டம்

in சிறுகதை

ஞாயிற்றுக்கிழமை காலை பதினொன்றரை மணி இருக்கும். மழை பெய்யப்போகிறோம் என்பது போல் மேகங்கள் மூண்டிருந்தன. வீட்டு வாசலில் நின்றிருந்த பாலு மேகத் திரளைக் கண்ணால் எடை போட்டான். குடையை எடுத்துக்கொள்ள வேண்டுமா வேண்டாமா? மழை வராவிட்டால் வெட்டிச் சுமையாய்க் கையில் வைத்துக்கொண்டு திரிய வேண்டுமே என்று நினைத்து வெறுங்கையோடு பாலு கிளம்புகையில் வீட்டுக்குள்ளிருந்து மனைவியின் குரல் எழுந்தது. “குடை எடுத்துக்கிட்டுப் போங்க.” பாலு குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

பாலுவின் குடை, மடக்கிய நிலையில் முக்கால் அடி நீளம் இருந்தது. அதன் கைப்பிடி வாடிக்கையான ஒரு குடையைவிட அதிக தடிமனாய், பிடித்துக்கொள்ள பாலுவுக்கு அசௌகரியமானதாய் இருந்தது. குடையின் பளபளப்பான மெல்லிய கருப்புத் துணி நைலான் அல்லது சாட்டின் என்று நினைத்தான் பாலு. அதற்குக் கீழே இரண்டு பேர் பிடிப்பார்கள். குடும்பம் முழுக்க ஒண்டிக்கொண்டு போக முடியாது. கைப்பிடியில் உள்ள சிவப்பு சதுரப் பொத்தானை அழுத்தினால் மென்மையான துணியோசையுடன் படக்கென்று விரியும். சிங்கப்பூரில் அது போன்ற குடைகளைத்தான் பயன்படுத்துவதாக அலுவலக சகா ஒருவன் சொல்ல பாலு கேட்டிருக்கிறான். அது உண்மையாகவே இருக்கக்கூடும். அந்தக் குடையில் ஒரு சிங்கப்பூர் ஷோக்கு இருந்தது.

தெருவில் பாலுவைத் தவிர வேறு யாரும் மழையைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. யார் கையிலும் குடை இல்லை. குடையை வைத்திருந்த வலதுகையை ஆட்டாமல் இடதுகையை மட்டும் ஆட்டிக்கொண்டு நடந்தவன் தனது தெருவைத் தாண்டி வலதுபக்கம் திரும்பிச் சற்றுப் பெரியதான ஒரு தெருவில் புகுந்தான். எதிர் மருங்கில் ஒரு முதியவர் கையில் விரித்த குடையுடன் போய்க்கொண்டிருந்தார். அவர் இவனைக் கவனிக்கவில்லை. அவருக்கு இவனைத் தெரியாது. ஆனால் அந்த இடத்தில் குடை வைத்திருந்த ஒரே இன்னொரு ஆள் பாலுதான்.

அவனுக்கு எரிச்சலாக இருந்தது; முதியோரும் பெண்களுமே மழையைப் பற்றி மிதமிஞ்சிக் கவலைப்படுகிறார்கள் என்று தோன்றியது. அவனுடைய வயது வரம்பில் அவன் மட்டும்தான் அங்கே கையில் குடை வைத்திருந்தான். கைப்பிடியின் நுனியில் ஒரு கருப்பு நாடா கட்டப்பட்டிருந்தது. குடையை மெல்ல நழுவ விட்டு ஆள்காட்டி விரலை மடக்கி அதில் நாடாவை மாட்டிக்கொண்டான். அதாவது குடை அவனது ஒற்றை ஆள்காட்டி விரலில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. “மழைக்காகப் பெரிதாகக் கவலைப்பட்டெல்லாம் நான் குடையைக் கொண்டுவரவில்லை. ஏதோ கொண்டுவந்தேன், அது எதற்கு இப்போது?” என்று கேட்பது போல் இருந்தது பாலு புதிதாகக் குடையைப் பிடித்திருந்த விதம்.

ரெட்டியின் வீடு இருந்த திசையை தூரத்திலிருந்து பார்த்தவாறு தெருவைக் கடந்தான் பாலு. நான்கு வீடுகள் குறுகலான வாசல்களை முன்வைத்து ஒரே மாதிரி இருந்தன. அதில் ஒன்று ரெட்டி வீடு. ரெட்டியின் தாயார் எப்போதும் வாசற்படிக்கட்டில் உட்கார்ந்திருப்பார். அதுதான் ரெட்டி வீட்டிற்கு அடையாளம். அவரை மதிக்காமல் உள்ளே செல்ல வேண்டாம் என்ற மரியாதைக்காக “ரெட்டிகாரு உன்னாரா?” என்று விசாரித்தான். அவருக்குத் தமிழ் தெரியாது. ரெட்டிக்கே அந்த மொழி தகராறுதான். ரெட்டியின் தாயார் ஒரு தினுசாகத் தலையாட்டி ஆமோதித்தார். பாலு அந்த வீட்டின் இருட்டுச் சந்திற்குள் ஒரு ஃபர்லாங் நடந்து போய் அரை இருளில் கையில் தெலுங்கு பேப்பர் சகிதம் தொலைக்காட்சியில் தெலுங்கு நடனம் பார்த்துக்கொண்டிருந்த ரெட்டியிடம் எச்சில் காபியை மறுத்துவிட்டு ஒரு மூட்டை அரிசி சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

பாலு தெருவைக் கடந்து மீண்டும் இந்தப் பக்கம் நடந்தான். மழை இன்னும் வரவில்லை, ஆனால் மேகங்களின் நிலவரம் அப்படியே இருந்தது. ரீகன் ஸ்டோர்ஸின் இரண்டு படிகளில் ஏறினான். “வாங்க சார்” என்றார் பாய். பாலு பையிலிருந்து லிஸ்ட்டையும் நோட்டுப் புத்தகத்தையும் சட்டைப்பையிலிருந்து எடுத்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்ட பாய், “போங்க, அனுப்புறேன்” என்றார். பாலு முதலில் ஒரு படி இறங்கிவிட்டு, “இன்னிக்குக் கண்டிப்பா மழைதான்” என்றான். “ஆ, அதெல்லாம் சும்மா சார். கொஞ்ச நேரத்துல கொளுத்தப்போவுது பாருங்க” என்றார் பாய். பாலு அசடு வழியச் சிரித்தான். குடை அவமானமாகக் கனத்தது. பாலு படியிறங்கி நேராக நடந்தான்.

இரண்டு வீடு தள்ளி டீக்கடைக்கு வெளியே மாஸ்டர் சிகரெட்டுடன் நின்றிருந்தார். பாலு கடைக்குள் போய் ஒரு மின்விசிறிக்குக் கிட்டத்தட்ட நேர்கீழே இருந்த கைவைத்த பெஞ்சில் அமர்ந்தான். குடையை இருக்கையின் பக்கவாட்டில் சாய்த்து வைத்து, “ஒரு சாயா!” என்றான். சாயா என்று மலையாள சங்கேத வார்த்தையில் கேட்டால் நல்ல தேநீர் கிடைப்பதாக அவனுக்கு ஒரு நம்பிக்கை. மாஸ்டர் சிகரெட்டைக் காது மடலில் செருகிக்கொண்டு பாலுவுக்குத் தேநீர் தயாரித்தார். உரிமையாளர் வேலைக்காரப் பையனைத் திட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்தபடி அமைதியாகத் தேநீரைக் குடித்து முடித்த பாலு, காசைக் கொடுத்துவிட்டு வீடுகிளம்பினான்.

வேலைகள் முடிந்ததால் வீடு வேகமாக வந்தடைந்தது. பாலு தொலைக்காட்சிக்கு எதிரே ஈஸி சேரில் உட்கார்ந்துகொண்டான். “லிஸ்ட்டு குடுத்துட்டேன்” என்று தொலைக்காட்சித் திரையைப் பார்த்துக் கத்தினான்.

டீக்கடையில் பையன் ஒரு குடையைக் காட்டி, “ஈ கொடா ஆருதாணு?” என்றான். “இவிடெதரு” என உரிமையாளர் அதை வாங்கிக் கல்லாப்பெட்டிக்கு அடியில் எடுத்துவைத்தார்.

சடசடவென மழை பெய்யத் தொடங்கியது. உடனே பாலுவுக்குக் குடையை டீக்கடையில் வைத்தது நினைவிற்கு வந்தது. “கதவை சாத்திக்கோ, வெளிய போயிட்டு வர்றேன்” என்று சமையலறையை நோக்கிக் கத்திவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டான். “எதுக்கு மழைல?” என்றாள் மனைவி உள்ளிருந்து. “குடையை எடுத்துக்கிட்டுத்தானே போறேன்” என்றான் பாலு.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar