மோடஸ் ஆப்பரண்டி

in புனைவு

எனது அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு விவேகானந்தன் இருந்தார். நாற்பத்தி சொச்ச வயதுக்காரர். அவர் மனைவியும் அவ்வாறே. இருவருக்கும் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். வீட்டில் நிறைய குழந்தைப் படங்களை ஒட்டிவைத்திருப்பார்கள். மேற்படி பிரியத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் அவர்களது மூன்று வயதுக் குழந்தை மேல் அவர்களுக்கு அளவு கடந்த பிரியம் நிலவியது. மூன்று மூன்று வயதுக் குழந்தைகள் விளையாடுமளவிற்கு பொம்மைகள் நிரம்பியிருக்கும் அவர்கள் வீட்டில்.

அந்தக் குழந்தை பார்க்கவே கொஞ்சத்தக்கதாக இருக்கும். மூன்று வயதில் என் மகனும் இப்படித்தான் இருப்பான் என்று சொல்ல ஆசைப்படவைக்கும் அழகு. நாள்பட்ட நிமிண்டலால் சிவந்துபோன இரு கன்னங்களும் அந்தக் குழந்தையை இன்னும் அழகாக்கின. அத்தம்பதிக்குத் தங்கள் குழந்தையின் தோற்றம் பற்றி ஏகப் பெருமை. தினமும் வாசலில் குழந்தையோடு உட்கார்ந்துவிடுவார்கள். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எல்லாம் அறிந்த புன்னகையுடன் உட்கார்ந்திருப்பார் தாயார். தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதைப் பார்த்தால் அதன் குண்டுக் கன்னங்களைக் கிள்ளாமல் நகர மாட்டார்கள். (எனக்கும் சூட்டிகையான குழந்தைகளைப் பிடிக்கும். ஆனால் குழந்தைகளுக்குத் தரப்படுமளவு முக்கியத்துவம் அவர்களின் அன்னையருக்குத் தரப்படுவதில்லை என்பது என் கருத்து.) அந்தக் குழந்தை பேசியோ அழுதோ உலகம் பார்த்ததில்லை. அதனாலேயே எனக்கு அதன் மேல் ஒரு மரியாதை இருந்தது. இப்போதெல்லாம் இந்த மாதிரிக் குழந்தைகளை யாரும் பெற்றுப்போடுவதில்லை. பொதுவாகவே குழந்தைகள் பிறவி அழுமூஞ்சிகள்.

கோகுலாஷ்டமி, நவராத்திரி என்று ஏதாவது வந்தால் மாட்டுப் பொங்கலன்று அலங்கரிக்கப்பட்ட மாடு போல் குழந்தையைக் கிருஷ்ணன் வேடத்தில் தெரு முழுக்கப் பார்க்கலாம். எங்கள் வீட்டில் ஏதாவது விசேடம் என்றால் மனைவி தவறாமல் அந்தக் குழந்தைக் குடும்பத்தை அழைத்துவிடுவார். சுமார் ஓர் ஆண்டு இப்படி இருந்தது. பிறகு ஒரு நாள் அந்தத் தம்பதி வீட்டைக் காலி செய்துகொண்டு போவதாக என் மனைவி சொன்னார். மூன்று வயதுக் குழந்தையை இங்கேயே தனியாக விட்டுச் செல்லப் பெற்றோருக்கு எப்படி மனம் வருகிறது என்று எனக்கு ஆச்சரியம். அவர்கள் குழந்தையையும் சேர்த்துத்தான் காலி செய்வதாக மனைவி தெளிவுபடுத்தினார். ஆக, ஒரு நாள் மொத்தமாகக் காலி செய்துகொண்டு நினைவுகளை மட்டும் விட்டுச் சென்றார்கள். நான் கடைசியாக விவேகானந்தனுடன் பேசியபோது அவர் இரட்டைக் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருப்பதாகக் கூறினார். ‘நான்காக முயற்சிக்கலாமே’ என்று நான் நகைச்சுவையாகச் சொல்ல, ‘வயிற்றில் அவ்வளவு இடம் இல்லை சார்’ என்றார் அப்பாவியாக.

இத்தனையும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. நாங்கள் அவர்களை மறந்துவிட்டோம். அதற்குப் பின்பு பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. பல நெடுந்தொடர்கள் முடிந்து புதிய நெடுந்தொடர்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அந்தத் தம்பதி எங்கள் குடும்பப் புகைப்படத் தொகுப்புகளில் மங்கிய உருவங்களாக மிஞ்சினார்கள். பிறகு இன்னொரு நாள் செய்தித்தாளில் அந்தக் குடும்பத்தின் குழுப் புகைப்படத்தைப் பார்த்தேன். சிறந்த குடும்பத்திற்கான சாகித்ய அகாதமி விருது ஏதாவது கிடைத்திருக்கிறதா என்று செய்தியைப் படித்தால் விஷயமே வேறு.

கணவன், மனைவி, ஒரு மருத்துவர் என மூவரைக் கைது செய்திருந்தார்கள். இந்தத் தம்பதி தங்கள் குழந்தைக்குப் பதினைந்து ஆண்டுகளாக ஹார்மோன் ஒடுக்க மருந்துகளைக் கொடுத்து வளராமல் வைத்திருந்தார்கள். இது மருத்துவ ரீதியாக சாத்தியமா என்று எனக்குத் தெரியாது. எழுதிவிட்டேன், அவ்வளவுதான். எனவே அந்தக் குழந்தையின் நிஜ வயது சுளையாகப் பத்தொன்பது. எனக்கு மூன்று ஆண்டுகள் முன்கூட்டியே திருமணம் ஆகியிருந்தால் இந்நேரம் இவன் வயதில் எனக்கொரு மகன் இருந்திருப்பான். எனது சொந்த மகன் இவனுக்குத் தம்பியாக இருந்திருப்பான். எனக்கு இரு மகன்கள் இருந்திருப்பார்கள். இருவரின் சண்டைகளைச் சமாதானம் செய்துவைக்கவே நேரம் சரியாக இருக்கும். இருக்கட்டும். இந்தப் பையன் எங்கள் வீட்டு விழாக்களுக்கு வரும் பெண்களை நோட்டம் விடுவதை கவனித்திருக்கிறேன். என்னவோ அப்போது சந்தேகப்படத் தோன்றவில்லை. இப்போது சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் விஷயம் அதுவல்ல. தங்கள் செல்லக் குழந்தை முதுமை அடையாமல் இருப்பது பிறரின் சந்தேகத்தைக் கவரக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் வேறு மாவட்டத்திற்கு வீடு மாறுவது அந்தத் தம்பதியின் ‘மோடஸ் ஆப்பரண்டி’யாக இருந்தது. எந்தப் பெற்றோருக்குத்தான் தங்கள் குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது? அதுதான் அவர்கள் செய்த தவறு. அவர்கள் இன்னொரு குழந்தை பெற்றிருக்கலாம், தத்தெடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை என்பது காவல் துறைக்குத்தான் வெளிச்சம். இயற்கையின் போக்கில் குறுக்கிட்டதற்காக ஐந்து ஆண்டுகள், குழந்தை மீதான குரூரத்திற்காக ஐந்து ஆண்டுகள் என்று மொத்தம் பத்தாண்டு சிறைத் தண்டனை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. பையனுக்கு ஹார்மோன் மருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இப்போது யாரோ உறவினர் வீட்டில் மெதுவாக வளர்ந்துகொண்டிருக்கிறான். வேறு மாதிரி முடித்தால் நன்றாக இருக்காது.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar