மீண்டும் குமார்

in சிறுகதை, புனைவு

ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை

“வாங்கோ!” என்று மேல் துண்டின் நுனியால் அழுகையைப் பொத்திக்கொண்டு வரவேற்றவரை (48) கண்டுகொள்ளாமல் அந்த இரண்டு படுக்கையறை வீட்டிற்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் குமார். அவர் நேராகச் சென்ற சமையலறையின் நடுவில் ஓர் எரிந்த பெண்மணி (44) படுத்த நிலையிலேயே ஓட முயல்வது போல் கிடந்தார். ஆள் போய் மூன்று-நான்கு மணிநேரம் ஆகியிருக்கலாம். எரிந்து முடிகையில் நீரூற்றி அணைக்கப்பட்ட தடயம் இருந்தது. அவரைச் சுற்றி சாக்பீஸால் கோட்டோவிய அவுட்லைன் வரைந்திருந்தார்கள். கலரிங் கொடுப்பதற்குள் போலீஸ் ஓவியர் தீயணைப்புப் படையினருடன் தேநீர் குடிக்கப் போய்விட்டதால் சம்பவ நபர் இன்னும் கோட்டோவியத்திற்குள்ளேயே சிறைபட்டிருந்தார்.

சமையல் மேடை மற்றும் அதன் பின்னணி, தாமும் அவிந்த அடையாளங்களைக் கன்னங்கரேலெனப் பறைசாற்றின. சுவரில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய ஓட்டை வழியே எதிர்வீட்டுப் பார்வையாளர்கள் தெரிந்தார்கள். குமாருக்குக் கண்கள் பனித்தன – அந்த இடத்தில் அபரிமித வெங்காய வீச்சம். தரையில் எங்கேயும் வெங்காயத்தின் அடையாளங்கள் காணப்படவில்லை. இன்ஸ்பெக்டர் அதை மனத்தில் குறித்துக்கொண்டார்.

இறந்தவர் முகம் சிறிது சிதைந்திருந்தது. மேற்சருமம் முழுமையாகப் பொசுங்கி அடியில் இருந்த சருமத்தைத் தன்னையறியாமல் காட்டியது. வெளிறிப்போய், புருவங்கள் இன்றி, மிகையான கெய்ஷா ஒப்பனையில் இருந்த ஜப்பானியப் பெண் போல் தெரிந்தார் அந்தப் பெண்மணி. குமாரைப் புதிராக்கியது என்னவென்றால் பிணத்தின் முகத்தையும் வயிற்றில் கொஞ்சத்தையும் தவிர உடலில் சுமார் 40% தீக்காயங்களே இருந்தன. சிலிண்டர் வெடித்துவிட்டது என்றார்கள். சிலிண்டர் உருப்பிளந்து கிடந்தது உண்மை. ஆனால் முகம் மட்டும் அதிகமாகச் சேதமடைந்தது எப்படி? விபத்து அந்தப் பெண்மணியின் முகத்தில் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஊகித்தார் குமார்.

“இன்னிக்குக் காலைலகூட நல்லா இருந்தா. மதியத்துக்குள்ள சிலிண்டர் இப்படி ஆயிடுத்து. புதூ சிலிண்டர். பக்கத்துத் தெரு வரைக்கும் போயிருந்தேன். வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றார் கணவர் கேவி.

குமார் பதிலளிக்காமல் கூடத்திற்குச் சென்று போலீஸ் முறைப்படி நோட்டம் விட்டார். சுவர்களில் இலைப் பிள்ளையார் படம், பத்து நிமிடம் தாமதமான சுவர்க் கடிகாரம், கணவன்-மனைவி-இரு குழந்தைகள் அடங்கிய குழுப் புகைப்படம், மாத நாள்காட்டி என ஒரு சாதாரணக் குடும்பச் சித்திரம் விரிந்தது. பொருட்கள் அடைத்திருந்த ஓர் அலமாரியில் எண்ணெய்ப் புட்டி, பல வகை மருந்துகள், பழைய மருந்துச் சீட்டுகள், ஒப்பனைப் பொருட்கள் நிரம்பியிருந்தன. குமார் ஒவ்வொரு மருந்தையும் மருந்துச் சீட்டையும் எடுத்துப் பார்த்தார். அருகே தொலைக்காட்சிப் பெட்டி. அதன் மேல் மீண்டும் ஒரு பிள்ளையார் பொம்மை, ஒரு விக்ஸ் டப்பா. குமார் கையுறைக் கையால் விக்ஸ் டப்பாவை அடிப்பகுதியில் பிடித்து எடுத்து எல்லா பக்கமும் திருப்பியும் முகர்ந்தும் பார்த்துவிட்டுத் தடயவியல் நிபுணரிடம் கொடுத்தார். நாள்காட்டியில் ஒரு தேதி பால்பாயின்ட் பேனாவால் இருமுறை வட்டமிடப்பட்டிருந்தது. குமார் அருகில் சென்று பார்த்தார். அது முந்தைய நாளின் தேதி. “நேத்துத் தேதிய எதுக்கு மார்க் பண்ணிருக்கீங்க?” என்றார் குமார். “நேத்து ஏகாதசி, அதான்” என்றார் கணவர்.

அடுத்து பாத்ரூமைக் கண்டுபிடித்தார் குமார். சமீபத்தில் சுத்தப்படுத்தப்பட்ட இடம். ஒரு மூலையில் அமிலம், கழுவும் ஹாக்கி பிரஷ், முழுவதும் காலியான ஒரு ஃபெனாயில் புட்டி ஆகியவை இருந்தன. குமார் அந்தப் புட்டியை எடுத்து மூடி அருகே முகர்ந்து பார்த்தார். புட்டியின் உடல் துடைத்தது போல் உலர்ந்து இருந்தது. அதையும் எடுத்துத் தடயவியல் ஆளிடம் கொடுத்தார். குமாரின் தேடல் முடிந்தது போல் தெரிந்தது. கூடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

“இன்னிக்கு என்ன சமையல்?” என்றார் குமார் அந்தக் கணவரிடம்.

கணவர் இதை எதிர்பார்க்கவில்லை. “சமையலா?” என்றார் விழித்து.

“ஆமா. குக்கிங்” என்றார் குமார்.

“வெண்டைக்காய் குழம்பு, தக்காளி ரசம் அவரைக்காய் பொரியல், வெள்ளரிக்காய் பச்சடி…”

“வெங்காய பூரணம் மாதிரி எதுவும் பண்லியா?”

“இன்னிக்கு துவாதசி சார். வெங்காயம் பண்ண மாட்டோம்” என்றவரின் முகம் உடனே வெளிறியது. குமார் எதிர்பார்த்தது அதைத்தான்.

“தெரியும்” என்றார் குமார். “குழந்தைங்க எங்க?” என்றார்.

“பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க.”

“குழந்தைங்களுக்கு சொல்லியாச்சா?”

“சொல்லியாச்சு சார். ஃப்ளைட்ல வந்துக்கிட்டிருக்காங்க டெல்லிலேந்து.”

“நீங்கதான் கொன்னீங்கன்னு சொல்லிட்டீங்களா?”

“சார்! என்ன பேசறீங்க?”

“உன் மனைவிக்கு ஜலதோஷம். அதனால அவங்களுக்கு வாசனை தெரியாதுன்றத யூஸ் பண்ணிக்கிட்டு பால் பாத்திரத்துல இருந்த பாலைக் கொட்டிட்டு பெனாயில ஊத்தியிருக்கே. அவங்களுக்கு இருந்த சளில வெளுத்ததெல்லாம் பால்னு நம்பி பெனாயில அடுப்புல வெச்சிருக்காங்க. பெனாயில் பொங்குறப்ப வெடிச்சு அந்த அதிர்ச்சில ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட்டா இருக்குற உன் சம்சாரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. சிலிண்டரும் வெடிச்சிருச்சு. பெனாயில் வாசனை தெரியாம இருக்குறதுக்கு பொண்டாட்டி எரியிற நெருப்புல நிறைய வெங்காயத்த அள்ளிப் போட்டிருக்க. ஆனா நிறைய தடயங்கள எங்களுக்கு விட்டு வெச்சிருக்க” என்றார் குமார்.

“என்ன சார் அநியாயமா கதை சொல்றீங்க! என் பொண்டாட்டிய நான் எதுக்கு சார் கொல்லணும்?”

“அத ஸ்டேஷன்ல வந்து டீட்டெய்லா எஸ்பிளைன் பண்ணுவியாம்.”

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar