வெயில்: இரு கடிதங்கள்

in கடிதம்

அன்பினிய சார்,

சமீபத்தில் எனக்குக் கிட்டிய ஓர் அனுபவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். வழமையாகத் தேநீர் அருந்தும் பழக்கமுள்ளவனாகிய நான், வெயிலின் கொடுமை தாங்காது ஒரு தேநீர்க் கடையில் மோர் குடித்தேன். மோரின் விலை ஆறு ரூபாய் என்பதை மோரினைப் பருகிய பின்னரே அறிந்துகொண்டேன். அம்மோரில் கருவேப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவையில் ஏதேனும் ஒன்று இருந்திருந்தாலும் என் மனமானது சமாதானம் அடைந்திருக்கும். சிரம காலத்திலும் மக்கள் உழைத்து ஈட்டிய பணம் அறமற்ற வியாபாரிகளால் இவ்வாறு உறிஞ்சப்படுவது வேதனையைக் கிளப்பி விடுகிறது. இதைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக ஏதாவது எழுத வேண்டும்.

இவண்
சந்திரன் திருவேற்காடு
சென்னை

அன்பின் திருவேற்காடு,

இதே ஓர் அனுபவம் எனக்கும் சமீபத்தில் கிடைத்தது. நானும் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதுகிறேன்.

மோர் விற்பன்னர்களின் இந்தச் செய்கை போர்க்கால லாபங்காணல் (war profiteering) வகைப்பட்டது. இதில் பெரிய அளவில் அறத்தை எதிர்பார்ப்பது முழுமுற்றான அறிவுகெட்டத்தனம் அல்லது கற்பனாவாதம். நீங்கள் குறிப்பிடும் மோரானது ஐஸ்மோர் இலக்கணங்களைப் பின்பற்றாமல் உப்பின்றி, புளிப்பாக, சற்று கெட்டியாக இருக்கும் என நீங்கள் சொல்லாமலே ஊகிக்கிறேன். இதன் பொருளாதார மதிப்பு அதிகபட்சம் மூன்று ரூபாயைக் கடக்க வாய்ப்பில்லை. எங்கள் வீட்டில் மோர் இப்படித்தான் இருக்கும். இதைச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம், ஆனால் வேனில் நிவாரண பானமாகக் குடிக்கத் தகுதியற்றது. அதனால்தான் என் வீட்டில் நான் மோர் குடிப்பதில்லை. அப்படியே குடித்தாலும் இரண்டு ரூபாய்க்கு மேல் என்னிடமிருந்து பெயராது.

எல்லா கடைகளிலுமே மோர் என்றால் தரக்கேடாகத்தான் இருக்கும் என்று நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை என்றாலும் இன்றைய நிலவரம் அதுதான். அக்னி நட்சத்திர காலத்தின் வரவையொட்டி மோரின் நுகர்வும் அதற்கிணையாக அதன் தேவையும் அதிகரித்துள்ளன. ஏற்கனவே விலையேற்றங்கள், மின்வெட்டுகள், மதுக் கடைகள் போன்ற காரணிகளால் திணறிக்கொண்டிருக்கும் தேநீர்க் கடை உரிமையாளர் சமூகம், கூடுதல் பாலைக் கொள்முதல் செய்து மோர் தயாரிப்புக்கென தனி மாஸ்டரை நியமிப்பதில்லை. தேநீர் தயாரிக்கும் மாஸ்டரே மோரையும் தயாரிப்பதால் சில சமயங்களில் மோரில் சர்க்கரை தூக்கலாக இருக்கிறது; இன்னும் சில சமயங்களில் சுத்தமாக சர்க்கரை இருப்பதில்லை. உயர்ந்த சர்க்கரை விலையும் இதற்கு ஒரு காரணம். அதே போல காய்கறிக் கடைகளில் ஒரு ரூபாய்க்குக் கருவேப்பிலை-கொத்துமல்லி கேட்டால் பத்து ரூபாய்க்குக் குறையாமல் தருவதில்லை. முன்பெல்லாம் சும்மா கொடுப்பான். இதனால் தேநீர்க் கடை உரிமையாளர் சமூகத்தினர் தரக்குறைவான மோரை நுகர்வோரிடம் தள்ளி விடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் விலையையும் அதற்கேற்பக் குறைவாக நிர்ணயிக்காததுதான் இப்போது பிரச்சினை ஆகிவிட்டிருக்கிறது.

மோர் குடிப்பவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டால் அல்லது ஏற்படுத்தப்பட்டால் ஒழிய இந்த நிலைக்குத் தீர்வு இல்லை. வெப்பம் மிக மோசமாக இருப்பதால் ஜில்லென்று இருந்தால் பெனாயிலையும் குடித்துவிடும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். சரியாகக் கழுவாத கண்ணாடி கிளாஸில் தளும்பத் தளும்பத் தரப்படும் மோரின் தோற்றமும் குளிர்ச்சியும் அவர்களுக்குப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த உளவியலைத் தேநீர்க் கடைக்காரர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தாகம் தணித்தல் என்பது உயிர் பிழைத்திருத்தலின் (survival) ஓர் அங்கம். வெயிலின் கடுமை தணிந்தால் மக்களுக்கு மோரின் தரம் சார்ந்த அறம் குறித்த எதிர்பார்ப்புகள் மேம்படலாம். அது வரை நாமே யூட்யூபில் பார்த்து ஐஸ்மோர் தயாரிப்பு கற்றுக்கொள்வதுதான் வழி.

வாழ்த்துகளுடன்
பேயோன்
சென்னை

* * *

வணக்கம் ஐயா,

என்ன சார் வெயில் இப்படிக் கொளுத்துகிறது?

இப்படிக்கு
வியர்த்தன்
சேலம்

அன்பின் வியர்த்தன்,

முதலில் தொழிற்புரட்சி, அடுத்து பசுமைப் புரட்சி, பின்பு தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் என இரு புரட்சிகளும் இரு ஆக்கங்களும் கரங்கோத்து உலகைப் புதிதாக்கின; பல நல்ல, கெட்ட, மற்றும் நடுவாந்தரமான விளைவுகளுக்கு வித்திட்டன. இந்தக் கெட்ட விளைவுகளில் உங்கள் கடிதம் தொடர்பாகக் குறிப்பிடத்தக்கது குளோபல் வார்மிங் எனப்படும் குவலய சூடேற்றம். மேலே குறிப்பிட்ட நான்கின் நன்மைகளை அனுபவித்துவரும் அதே வேளையில் குவலய சூடேற்றம் என்கிற தீமையையும் இன்றைய தேதியில் (19-05-2013) நாம் அனுபவித்தாக வேண்டியுள்ளது. இது விஷயமாக வானிலை ஆராய்ச்சி மையமே கைவிரிக்கும்போது நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நைசில் மாதிரி ஏதாவது தடவிக்கொள்ளுங்கள்.

வாழ்த்துகளுடன்
பேயோன்
சென்னை

Tags: , , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar