ஃபவுல் பிளே

in சிறுகதை, புனைவு

ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை

ஒரு வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அந்த அழுது வடிந்துகொண்டிருந்த வசதியான சாவு வீட்டுக்குள் வலது காலை எடுத்துவைத்தார் இன்ஸ்பெக்டர் குமார். கான்ஸ்டபிள் 114 பின்தொடர்ந்தார். வீட்டினுள் நுழைந்ததும் ஸ்பிளிட் ஏ.சி. குளிர் அவர்களை அணைத்துக்கொண்டது.

அந்தப் பெரிய கூடத்தில் தோராயமாக எழுபது பேருக்கு அப்பால் சுமார் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவரை சுவரோரத்தில் ஐஸ் பாளங்களின் மேல் கிடத்தியிருந்தார்கள். மெல்லிய விசும்பல்கள், கிசுகிசுப்புகள் தவிர அந்த இடம் அமைதியாக இருந்தது. குமார் நுழைந்த மறுகணம் எல்லோர் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது, புருவங்கள் மொத்தமாக உயர்ந்தன. குமார் நெருங்கிச் சென்று பார்வையால் சடலத்தை மேய்ந்தார். அவர் பார்வைக்கு உள்காயமோ வெளிக் காயமோ எதுவும் தென்படவில்லை. க்ஷீணக் கிழம். காதில் சத்தமாகக் கத்தினாலே மாரடைப்பை ஏற்படுத்திவிடலாம். கைரேகை, விஷம் என்று ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை.

மூதாட்டியின் ஐம்பது வயது மகன் போல் தெரிந்த ஒருவர் எழுந்து குமாரிடம் கேட்டார்: “என்ன சார் வேணும்?”

“இங்க தனசிங்கம் யாரு?”

“நான்தான். என்ன வேணும்?”

“இறந்துபோன லேடி பத்தி கொஞ்சம் கொஸ்டின்ஸ் கேக்கணும்” என்றார் குமார்.

“அவங்க எங்கம்மா சார். காலைல ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க. அது பத்தி என்ன கேக்கப்போறீங்க?”

“இந்த சந்தர்ப்பத்துல உங்களத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும். ஆனா இது அர்ஜன்ட் போலீஸ் மேட்டர்…”

“சாரி சார், ரெண்டு நாள் கழிச்சு வாங்க. ரெண்டு மணிக்கு எடுக்குறோம். வேலை நிறைய இருக்கு,” தனசிங்கம் எரிச்சலாகச் சொன்னார்.

“பக்கத்துல ஏதாவது ரூம்ல வெச்சிப் பேசலாமா, ஸ்டேஷனுக்கு வரீங்களா?” என்றார் குமார் அழுத்தமாக.

திடுக்கிட்ட தனசிங்கம், வலதுகையால் ஒரு திசையைக் காட்டினார். பெரும்பாலானவர்களைப் போல் இவருக்கும் வலதுகைப் பழக்கம்தான் என்று மனதில் குறித்துக்கொண்டார் குமார். இருவரும் தனியாக ஓர் ஆளில்லாத அறைக்குச் சென்றார்கள்.

குமாரும் தனசிங்கமும் அங்கிருந்த 90களின் பாணியிலான குஷன் நாற்காலிகளில் அமர்ந்ததும் தனசிங்கத்தைக் குமார் உள்வாங்கினார். ஐம்பது வயதுக்கு மீறிய நரை. ஆனால் முதுமை நெருங்கினாலும் வழுக்கை விழ அனுமதிக்காத மரபணு. இழப்பின் அழுகை அவரது கண்களைச் சிவப்பாக்கியிருந்தது. சமீபத்தில் முடிதிருத்தம் செய்துகொண்டதன் அடையாளமாக கழுத்திலும் போலோ டி-ஷர்ட் காலரிலும் மில்லிமீட்டர் நீள முடித் துண்டுகள் விடாப்பிடி விசுவாசம் காட்டிக்கொண்டிருந்தன.

“ஓ.கே. மிஸ்டர் தனசிங்கம்,” என்றார் குமார். “உங்கம்மா எத்தனை மணிக்கு இறந்தாங்க?”

“காலைல எட்டு மணி இருக்கும். அவங்களுக்குத் தொண்ணூறு வயசு சார். ஹார்ட் பேஷண்ட். அப்படித்தான் சாவாங்க. இதுல கேள்வி கேக்க என்ன இருக்கு?” என்றார் தனசிங்கம் வேதனையுடன்.

“உங்கம்மா சாவுல ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்குறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. அது சம்மந்தமா கேள்வி கேக்கணும்.”

“என்ன டீடெய்ல்ஸ் வேணுமோ கேளுங்க, சொல்றேன்” என்றார் அமைதியாக தனசிங்கம்.

“அவங்க சாகுறப்ப என்ன பண்ணிக்கிட்டிருந்தாங்க?”

“பேப்பர் படிச்சிட்டிருந்தாங்க.”

“அந்த டைம்ல நீங்க எங்க இருந்தீங்க?”

“முடி வெட்டிக்கப் போயிருந்தேன்.”

“உங்கம்மாவுக்கு சொத்து எதுனா இருக்கா?”

“நாங்கல்லாம்தான் அவங்களோட சொத்து” தனசிங்கம் உருக்கமாகச் சொன்னார்.

குமார் எரிச்சலடைந்தார். “உங்கம்மா பேர்ல என்னென்ன சொத்து இருக்கு? டீடெய்லா சொல்லுங்க.”

“இந்த வீடு, ராயபுரத்துல ரெண்டு வீடு, ஊர்ல அறுவது ஏக்கர் நிலம், பேங்க்ல ஒரு பதினஞ்சு கோடி பணம், அப்புறம் நாங்க, அவ்வளவுதான்.”

“உயில் ஏதாவது இருக்கா?”

“இருக்கு, ஆனா வக்கீல்ட்ட இருக்கு.”

“சொத்தெல்லாம் யார் பேருக்கு எழுதி வெச்சிருக்காங்க?”

“என் பேர்லயும் என் பொண்ணு பேர்லயும்.”

“பியூட்டிஃபுல். கடைசியா எப்ப முடி வெட்டிக்கிட்டீங்க?”

“சார்?”

குமார் கேள்வியை மீண்டும் கேட்டார்.

“ரெண்டு மாசம் இருக்கும்.”

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நீங்க முடி வெட்டிக்கிட்ட அன்னிக்கு என்ன கிழமை?”

தனசிங்கம் விழித்தார். “அதெல்லாம் எப்படி சார் ஞாபகம் இருக்கும்? சண்டேன்னு நினைக்கிறேன்.”

“ரைட். நீங்க போய் உங்க மிசஸை அனுப்புங்க.”

“உங்களுக்கு யாரோ எங்களப் பத்தி தப்பா தகவல் குடுத்திருக்காங்க சார்.”

“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீங்க போய் உங்க மிசஸை அனுப்புங்க.”

தனசிங்கம் குழப்பம் குறையாமல் எழுந்து போனார். சில நொடிகளில் புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு ஒரு பெண்மணி வந்தார்.

“உங்க ஹஸ்பண்ட் கடைசியா எப்ப முடி வெட்டிக்கிட்டாருன்னு நியாபகம் இருக்கா மேடம்?” என்றார் குமார்.

“எதுக்குக் கேக்குறீங்க சார்?”

“அது எங்க பிரச்சனை. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.”

“ரெண்டு மாசம் இருக்கும் சார்.”

“அன்னிக்கு என்ன கிழமை?”

“ஞாயித்துக்கிழமை சார்.”

“நல்லா தெரியுமா?”

“தெரியும் சார். காலண்டர்ல குறிச்சி வெச்சிருக்காரு.”

“உங்க ஹஸ்பண்ட் என்னிக்காவது வெள்ளிக்கிழமை முடி வெட்டிருக்காரா?”

“இல்ல சார். எனக்குத் தெரிஞ்சு இதுதான் முதல் தடவை.”

“நீங்கதான் காலைல கன்ட்ரோல் ரூமுக்கு ஃபோன் பண்ணீங்களா?”

“இல்லியே சார்” என்றார் அந்தப் பெண் பதற்றமாக.

குமார் புன்னகைத்தார். “பயப்படாதீங்க. உங்க பேர் வெளிய வராது.”

“நான் இல்ல சார்!”

“உங்களுக்கும் உங்க புருஷனுக்கும் ஏதாவது பிராப்ளம்?”

“ஒரு பிராப்ளமும் இல்ல. நாங்க சந்தோஷமாத்தான் இருக்கோம்” என்றார் அந்தப் பெண்மணி பட்டென்று.

குமார் மீண்டும் புன்னகைத்து, “நீங்க போய் உங்க புருஷனை அனுப்புங்க” என்றார்.

சிறிது நேரத்தில் தனசிங்கம் பொறுமையெல்லாம் இழந்து புயலாக அறைக்குள் வந்தார்.

“என்ன சார் வேணும் உங்களுக்கு?” என்றார் புலம்பலாக.

“உங்க அம்மாவைத் திட்டம் போட்டுக் கொலை பண்ணதுக்காக உங்களைக் கைது செய்றேன்” என்ற குமார், இடுப்பில் மாட்டியிருந்த விலங்கை எடுத்தார்.

“வாட் நான்சென்ஸ்! முதல்ல வெளிய போங்க!” என்று எழுந்து நின்று கத்தினார் தனசிங்கம்.

“வெள்ளிக்கிழமை முடி வெட்டிக்கிட்டா அம்மாவுக்கு ஆகாதுன்றது போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்கும் தெரியும் தனசிங்கம்” என்றார் குமார் சிரித்துக்கொண்டே.

தனசிங்கம் விருட்டென எழுந்து எல்லோரும் பார்க்க வீட்டுக்கு வெளியே ஓடினார். துக்க விசாரிப்புக் கும்பல் வேடிக்கை பார்க்கப் பரபரவென்று வெளியே வந்தது. சட்டைப் பையிலிருந்து கார் சாவியைக் கையில் வைத்துக்கொண்டார் தனசிங்கம். அதற்காகவே காத்திருந்த 114, தயாராகப் பிடித்துவைத்திருந்த ஒரு பூனையைக் குறுக்கே ஓட விட்டார். தனசிங்கம் விதிர்விதிர்த்து சிலையாக நின்றார். குமார் சாவகாசமாக வெளியே வந்து அவருக்கு விலங்கு மாட்டினார். “உன்னையெல்லாம் நூத்தியெட்டு வருஷம் உள்ள வெக்கணும்” என்றார்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar