பாரதியின் சந்தானமும் சந்தானத்தின் பாரதியும்

in கட்டுரை

தேசியகவி சுப்பிரமணிய பாரதி தனியாகவே பட்டையைக் கிளப்பக்கூடியவர் ஆவார். சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் போன்ற ஒரு மகத்தான பாடகரும் ஜமா சேர்ந்துகொண்டால் விளைவுகள் யாருடைய ஊகத்திற்கும் உரியவை. Bharathiyar Songs – Maharajapuram Santhanam என்ற பாடல் தொகுதியைச் சமீபத்தில் கேட்டேன். சந்தேகமேயில்லாமல் இது கர்நாடக இசை. கர்நாடக இசையைப் பொதுவாக நான் அதன் கடினத்தன்மை காரணமாக மற்றவர்களே கேட்டுக்கொள்ளட்டும் என்று தவிர்த்துவிடுவது. ஆலாபனை கேட்கும்போது எனக்கு ரத்த அழுத்தம் எகிறும். சினிமாவில் வரும் கர்நாடகம் எனக்குப் போதும் என்று இருந்துவிட்டேன். நண்பர் ஒருவர் இந்தத் தொகுதி அப்படியெல்லாம் இல்லை, நன்றாக இருக்கும் கேட்டுப் பாருங்கள் என்று அனுப்பிக் கொடுத்தார். என்ன ஒரு நல்ல முடிவு! ‘பாரதியார் சாங்ஸ்’ பாரம்பரியமிக்க கர்நாடக இசையையும் பாரதியார் பாடல்களையும் ஒருசேரக் கேட்கும் பாக்கியத்தை அளித்தது.

சாங்ஸில் எட்டுப் பாடல்கள் உள்ளன. அனைத்தும் நாம் படித்துப் பழகியவை. ஆனால் சந்தானம் தமது பாணியின் வாயிலாக அப்பாடல்களுக்குப் புதிய அர்த்தங்களைத் தருகிறார். முதல் பாடலான “ஆசை முகம் மறந்து போச்சே” சோகமான கருப்பொருளைக் கொண்டது. சோகம் என்றால் சோம்பல். மெதுவாக நகர வேண்டிய இந்தப் பாடலை சந்தானம் வீரமுகாரி ராகத்தில் வேகமாகப் பாடிவிடுகிறார். “ஆஷை முகம் மறன்ந்து போட்ச்சே இதைய்ங், ஆரிடம் ஷொல்வேனடி தோழி” என்று நிறுத்தாமல் தவிப்பை வெளிப்படுத்தியபடி பாடிக்கொண்டே போகும்போது எல்விஸ் ப்ரெஸ்லியின் ‘ஜெயில்ஹவுஸ் ராக்’ நினைவுக்கு வரலாம். பாடலின் ஒலிகளைத் தம் குரலின் திறனால் இழுத்தும் வளைத்தும் நுட்பமாக அவர் பாடும்போது, ஹொகுசாயின் கனகவா பேரலையில் தத்தளிக்கும் படகில் நாம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இது பரவசமூட்டும் ரோலர் கோஸ்டர் பயணம். சோகமான பாடலை இவ்வளவு ரசித்துப் பாடி சோகத்தை அவமதிப்பானேன் என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் உணர்ச்சியைக் கழற்றிவைத்துவிட்டு உன்னதங்களை சிருஷ்டிப்பது கலையின் இயல்புகளில் ஒன்று அல்லவா? அது மட்டுமின்றி, அடுத்த பாட்டிற்குப் போவோமா?

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்”-இல் கழிவிரக்கம் தொனிக்க நான்கு முறை கேட்கும்போது மணிபல்லவி கமகத்தின் மகிமையை உணர்கிறோம். அறிவுதான் தெய்வம் என்கிற இந்தப் பாடலின் முதல் வரி நம்மை உலுக்கவில்லை என்றால் அடுத்த வரி உலுக்கத் தவறாது: “ஷுத்த அறிவே ஷிவமென்று கூறும் ஷுருதிகள் கேளீரோ?” சந்தானத்தின் குரலில் பாரதி நம்மிடம் கருணை கொள்கிறார், கடிந்துகொள்கிறார், திட்டுகிறார், போதிக்கிறார். நெக்குருக்குவதை மட்டும் சந்தானத்திற்கு விட்டுவைக்கிறார். சந்தானமும் ஏமாற்றவில்லை. ருத்ரபட்சிணியை இவ்வளவு லாவகமாகவோ லாகவமாகவோ வேறு யாரும் பாடி நான் கேட்டதில்லை. என் தப்பு.

அடுத்து “சின்னஞ்சிறு கிளியே”. வழக்கமான மெட்டில் தொடங்கிப் பாடலை மெல்ல நகர்த்தும் சந்தானத்தின் “என்னைப் பழி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்” என்ற வரியில் பாரதி கம்சனாகிறார், கண்ணன் கண்ணம்மா ஆகிறான். கம்சன் கண்ணனை “பில்லைக் கனியமுதே கழ்ணம்மா, பேஷும் பொற்சித்திரமே” என்று கொஞ்சுவதன் தர்க்கம் புரியவில்லை. எனினும் ஷுத்தமான இசை என்பது “லாஜிக் இல்லா மேஜிக்” என்று இளையராஜா குறிப்பிட்டதை நினைவுகூர வேண்டும். “ஓடி வருகையிலே கழ்ணம்மா, உள்ளம் குளிருதடி” என்பதில் ஒரு பாலியல் குறிப்பு இருப்பதாகப் படுகிறது. பாடல் முழுவதுமே முத்தம், கள்வெறி, தழுவுதல் என்கிற ரீதியில் இருப்பதால் இதில் வியப்பில்லை. மேலே சுட்டப்பட்ட வரியில் உள்ளம்தான் குளிர்கிறது, அதே போல கன்னத்தில் முத்தமிட்டாலும் உள்ளம்தான் கள்வெறி கொள்கிறது. உடல் தேமே என்று இருக்கிறது. தழுவுதல் தரும் உன்மத்தமும் உள்ளத்தின் ஒரு நிலையையே குறிப்பதை கவனிக்க வேண்டும். புன்னாகவராளியின் கிளை ராகமான ஆபேரிமூக்கனில் பட்டையைக் கிளப்பப்பட்டுள்ளது.

“மோகத்தைக் கொன்றுவிடு, அல்லா எந்தன் மூச்சை நிறுத்திவிடு”வில் பாரதி இறைவனிடம் கையேந்துகிறார். சந்தானம் மோகத்தைக் கொல்ல அவசரம் இல்லை என்று நினைத்தாரோ என்னவோ, ஒரு அரிசி மண்டிக்காரரிடம் அந்த காலத்து அரிசி விலை பற்றி ஏக்கத்துடன் பேசுவது போன்ற தொனியில் பாடுகிறார். “தேகத்தை ஷாய்த்துவிட்டு, அல்லா எந்தன் ஷிந்தனை மாய்த்துவிடு” எனப் பாடும்போதுதான் சந்தானம் உரையாடலிலிருந்து விடுபட்டு பாரதியின் இரைஞ்சுதலில் அவசரமாகச் சேர்ந்துகொள்கிறார். ஆனால் அடுத்து அனுசரணம் வரும்போது  மீண்டும் வைதேகி முருங்க விருட்சத்தில் ஏறி உதாசீன ஸ்திதி சாந்நித்யமாகிவிடுகிறது. “இந்தப் பதர்களையே எல்லாம் என எண்ணியிருப்பேனோ” என்ற வரியில் “தேடிச் சோறு நிதம் தின்று” புகழ் பாரதி வெளிப்படுகிறார். இன்னும் இரண்டு வரி (எட்டு வரி) நீளாதா என்று ஏங்கவைக்கும் இந்தப் பாடலில் இருவரும் இணைந்து மிரட்டுவதில் வெற்றியடைந்துள்ளனர்.

நெஞ்சில் உரமுமின்றி” தலை ஆட்டித் தொடை தட்ட வைக்கிறது. இது அப்படியே “ஏனுங்க மாப்பிள்ள, என்ன நெனப்பு” மெட்டில் அமைந்துள்ளது. அதே சமயத்தில் இந்தப் பாடல் வரிகளுக்கு பதிலாக ஐயப்பன் புகழ் பாடும் வரிகளை வைத்துவிட்டால் இது பக்திப் பாடலாகிவிடும். அடிப்படையில் சமூகத்தின் மேல் கோபம் கொண்டு வெறுப்பையும் அவநம்பிக்கையையும் கக்கி வசைபாடும் இந்தப் பாடலுக்குத் தேவையான ஆக்ரோஷம் இல்லை. ‘கலி முற்றித்தான் கிடக்கிறது. நம்மால் ஆகாது சாமி’ என்ற தொனியே இதில் உள்ளது. காரணம், ராகத் தேர்வில் தவறு நிகழ்ந்திருக்கிறது. சந்தானம் பாடியிருப்பது புத்த சன்யாசி ராகத்தில். பாடலுக்குத் தேவையானதோ கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி ராகம்.

“சுற்றும் விழிச் சுடர்தான்”, “வெள்ளைக் கமலத்திலே”, “வெள்ளைத் தாமரை” ஆகிய மூன்றையும் நான் கேட்கவில்லை. ஆனால் எழுதியவர் பாரதியார், பாடியவர் மகாராஜபுரம் சந்தானம். எனவே தாராளமாகக் கேட்கலாம்.

மேற்கண்ட எட்டு பாரதிப் பாடல்களையும் நினைவில் நிறுத்தச் சிறந்த வழி, சந்தானத்தின் இந்தத் தொகுதியைக் கேட்பதுதான். ஏனென்றால் அவர் ஒவ்வொரு வரியையும் நான்கு முறை பாடுகிறார். போதும் என்று தோன்றும்போதுதான் அடுத்த வரிக்குத் தாவுகிறார். ஆனால் அடுத்த வரியையும் நான்கு முறை கேட்கிறோம். ஆக, பாரதி ஒவ்வொரு பாடலுக்கும் நான்கு வரிகள் எழுதியிருந்தாலே போதுமாக இருந்திருக்கும். பிரச்சினை என்னவென்றால், சந்தானம் 1928இல் பிறந்தபோது பாரதிக்கு ஏழு திவசம் ஆகியிருந்தது. இந்தத் தொகுதி பற்றிச் சொல்வதற்குத் திரும்பி வந்தால், எந்த நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு. இந்தத் தொகுதி, கர்நாடக இசை எளிதில் செரிமானமாகும் பக்கம்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar