மனசாட்சி கேட்கிறது

in கட்டுரை

நாம் பல நல்ல தமிழக மற்றும் அன்னிய படைப்புகளைப் படிக்கிறோம். நேரடியாக ஆங்கிலத்திலும் ஒருமாதிரியான மொழியாக்கங்களிலும் படிக்கிறோம். படித்துவிட்டு சும்மா இருக்க முடிகிறதா நம்மால்? என் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகக்கூடியவர் என்பது போல் நாம் படித்த வார்த்தைகளைப் போட்டுத் திருகித் திருகி நாமும் ஏதோ எழுதுகிறோம். நாம் படித்த சிறந்த படைப்புகளின் தரம் நாம் எழுதுவதில் எட்டிப் பார்க்கவாவது வருகிறதா? அதெப்படி வரும்?

உங்களை பாதித்த எழுத்தாளர் யார் என்று மார்க்வெஸிடம் கேட்கப்பட்டபோது அதற்கான எதிர்வினையை ஹுவான் ருல்ஃபோ என்று ஆற்றினார் மார்க்வெஸ். அதே கேள்வியை நம்மிடம் கேட்டால் நாமும் மார்க்வெஸ் என்போமோ என்னவோ. எனினும் நாம் யார்? நம் எழுத்துகூடத்தான் பாதிக்கிறது. ஆனால் எப்படி என்கிறீர்கள்? வெளியே சொல்ல முடியுமா? சொன்னால் மரியாதையாக இருக்குமா?

அரசியல்வாதி போல விருது, அழைப்பு, குத்துவிளக்கு, மாலை, பொன்னாடை, போர்வை, கம்பளம், தலையணை, டி.வி., சினிமா, வெளிநாடுகள், பணம் என்று ஏதாவது வந்தபடி உள்ளது. நமக்கிருக்கும் வசதியில் காந்தியை நனைக்காமல் ஆயிரம் ரூபாய் நோட்டில் கப்பல் செய்து பாத்ரூம் பக்கெட்டில் மிதக்க விடலாம். ஆனால் பணமும் புகழும்தானா நமக்கு வேண்டியது? மௌனியையும் புதுமைப்பித்தனையும்விட அம்பானி பெரிய ஆளா? அம்பானியின் பவிஷுக்கு இருவரையும் விலைக்கு வாங்கி அவர்களது படைப்புகள் அனைத்தையும் தமது பெயரில் பதிப்பித்திருக்க முடியும். நாட்டையே வாங்கக்கூடியவருக்கு நாட்டுடமையாக்கமாவது ஒன்றாவது! ஆனால் அப்படியும் அவர்களைவிட அம்பானி பெரிய ஆள் ஆகிவிட முடியுமா? முடியாது. தவிரவும் அவர்கள் இரண்டு பேர். அம்பானி நிறைய பணம் வைத்திருக்கிற ஒற்றை ஆள்.

சரி, நாம் போற்றுகிற படைப்பாளிகள் வரிசையில் நாம் வர வேண்டாம். நாம் ஓரளவு பொருட்படுத்துகிற வரிசையிலாவது வரலாம் அல்லவா? என்ன நான் சொல்வது?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar