கடிதம்: நாவல் எழுதுதல்

in கடிதம்

அன்புள்ள சார்,

நான் பல முன்னணி இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இதுவரை ஒரு நாவல் கூட எழுதியதில்லை. எங்கே தொடங்குவது என்று குழப்பமாக இருக்கிறது. பல நாவல்களை எழுதியுள்ள நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.

ஆனந்தன்,
சென்னை – 15

அன்பின் ஆனந்தன்,

இதழ்கள் என்றால் உதடுகள் என்ற பொருளில் நீங்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அர்த்தம் கூடி வரவில்லை.

நாவல் எழுதுவது ஒன்றும் ஏவுகணை அறிவியல் அல்ல. நாவல் இலக்கணம் எல்லாம் சொல்கிறார்கள். அதையெல்லாம் படித்துக்கொண்டிருந்தால் கடைசி வரை அதை மட்டும்தான் படித்துக்கொண்டிருக்க முடியுமே தவிர நாவல் எழுத வழியைக் காணாது. நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன். திரைப்படம் எடுக்கும்போது முதல் காட்சியை காலக்கிரமப்படி முதலில் எடுக்க மாட்டார்கள். நடுவில் வரும் காட்சி எதையாவது எடுப்பார்கள். ஆனால் நாவலை எங்கே தொடங்குவது என்றால் முதல் அத்தியாயத்தில்தான் தொடங்க வேண்டும்.

என்னைக் கேட்டால் முதல் அத்தியாயம் என்பது முதல் நான்கைந்து அத்தியாயங்களின் தொகுதியாகவும் இருக்கலாம். கதாபாத்திரங்களை உருவாக்கி வீடு, ஓட்டல், கடற்கரை போன்ற ஒரு பௌதிக இடத்தில் அலையவிட்டுப் பேசவைத்து அப்படியே போய்க்கொண்டிருந்தால் போகப்போக கதை உருப்பெறும். உங்களுக்கே தெரியாமல் திட்டமிடல் பின்னணியில் உருவாகிக்கொண்டிருக்கும்.

நாவல் எழுதுவதில் கதையைத் திட்டமிடுவதைவிடப் பெரிய சவால், கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது. அது முதல் அத்தியாயத்தில் செய்ய வேண்டியது. இதற்கே சில நாட்கள் ஆகலாம். முருகன், ராஜா, பாலு, பாலாஜி, செல்வி, திவ்யா, பவித்ரா போன்றவை பலமுறை அச்சில் அடிபட்ட பெயர்கள். இப்பெயர்கள் வாசகர்களுக்கு வேறு புனைவுகளில் வரும் பாத்திரங்களை நினைவூட்டக்கூடும். அதனால்தான் தனித்துவமான, ஆனால் புழக்கத்தில் உள்ள பெயர்களைத் தேர்வு செய்வது அவசியமாகிறது. உதாரணமாக உங்கள் பெயரையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆனந்தன் பரிச்சயமான பெயர், ஆனால் தனித்துவமானது. இதுதான் உங்கள் பெயர்க் காரணம். சில சமயங்களில் புனைவு எழுதுவது பரீட்சை எழுதுவதற்கு இணையானது. கடினமான கேள்விகளுக்கு மூளையைக் கசக்கிக்கொண்டிருக்காமல் எளிய கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு பின்பு கடினமான கேள்விகளுக்குத் திரும்பி வந்து எழுதுகிறோம் அல்லவா, அது போலத்தான் பெயரிடுதலும். நான் சில சமயங்களில் கதாபாத்திரங்களுக்கு வெண்டைக்காய், கத்தரிக்காய், பேரீச்சம்பழம் என்று டம்மியாகப் பெயர் வைத்துவிடுவேன். அதிலும் ஓர் ஒழுங்கு இருக்கும். காய் என்றால் ஆண் கதாபாத்திரம், பழம் என்றால் பெண். நாவலை எழுதி முடித்த பின் ஞாபகமாகப் பெயர்களை யோசித்துக் கதாபாத்திரங்களுக்கு சூட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினை ஏற்படும். என்னுடைய ஒரு நாவல் என் மறதியால் வெண்டைக்காய், கத்தரிக்காயோடு அச்சுக்கு அனுப்பப்பட்டு உருவகக் கதை ஆனது. சல்லி சுற்றுச்சூழல் விருதொன்று கிடைத்தது. ஆனால் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால் தொலைத்துவிடுவார்கள்.

இப்போது நாவல் இலக்கணத்திற்கு வருவோம். பொதுவாக நாம் பார்க்கும் நாவல்களின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் யாவை? முறையாகப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

1. நிறைய பக்கங்கள். குறைந்தது 100.
2. நிறைய அத்தியாயங்கள். குறைந்தது 20.
3. கதாபாத்திரங்கள் எண்ணிக்கை – தேவைக்கேற்ப.

நிறைய கதாபாத்திரங்கள் இருந்தால் நாவலாக உருவாக நல்ல வாய்ப்புள்ளது. பாத்திரங்களை ஒன்றோடொன்று மோத விடலாம், உறவினர்கள் ஆக்கலாம், கடைசியில் மொத்தமாக ஓரிடத்தில் வைத்துக் கொல்லலாம், இத்யாதி. சிலர் ராமாயண மகாபாரதங்களைப் படித்துவிட்டு கதாபாத்திரங்களை அவற்றில் வருவது போல் அமைக்கிறார்கள். என் குருநாதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘தி கேம்ப்ளர்’ நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யப் பின்னணியில் மகாபாரதக் கதையின் மீள்சொல்லல்தான். கேம்ப்ளரில் கதாநாயகன் சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழப்பதுதான் மையக் கரு. பாத்திரப் படைப்பு, சகோதர சண்டை, கிருஷ்ணாவதாரம், புடவை உருவுதல் போன்ற தெலுங்குப் பட விசயங்கள் ஆகியவற்றைக் கழற்றிவிட்டு 100 பக்கங்களில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் தாஸ்தா. இது ஒரு வகை நாவல். உங்களுக்கு சொந்தமாகக் கதை எழுதத் தயக்கமாக இருந்தால் மீள்சொல்லல் உத்தியைக் கையாளலாம். நன்றாக இருக்கும்.

நாவலை எங்கே, எப்போது நிறுத்துவது என்பது நீங்கள் கேட்க விட்டுப்போன இன்னொரு கேள்வி. தொடங்குவதே தகராறு என்பதால் நீங்கள் கேட்கவில்லை என்று புரிகிறது. தொடக்கத்தைத் தாண்டிவிட்டோம். வளர்ப்பது எப்படி என்றும் பார்த்துவிட்டோம். இப்போது முடிப்பதற்கு வருவோம். எங்கே வேண்டுமானாலும் முடிக்கலாம். எங்கே முடிக்கிறீர்களோ, அதற்கேற்ப நாவலின் அர்த்தம் மாறும். மொட்டையாக முடித்தால் ‘உங்கள் நாவலுக்கு என்ன அர்த்தம்?’ என்று உங்களிடமே வந்து கேட்பார்கள். எனவே ஒரு திருமணத்தில், விவாகரத்தில், சாவில், படுகொலையில், பேரழிவில், நாடு கடத்தலில், கைதில், நீதிமன்றத் தீர்ப்பில் முடிக்கலாம். எனக்கு இந்தப் பிரச்சினை கிடையாது. நான் பெரிய நாவலாசிரியன். அதனால் கட்டுரைதான் எழுதுவார்கள். சில சமயம் எனக்கு சலிப்பாக இருப்பதுண்டு. நாவலே கேன்சர் வார்டு போல் இருக்கும். ஐந்தாண்டுகள் ஒரு மருத்துவமனையில் தங்கி தினமும் அதே முகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இந்த சலிப்பு வரும்போது நிறுத்திவிடுவேன். எனது ‘ஆசிரியரின் பிற நூல்கள்’ போன்ற ஓரிரு நாவல்களில் கடைசிப் பக்கத்தில் “முற்றும்”க்கு பதிலாக “டிக்ளேர்” என்று இருக்கும். உங்கள் நாவலை மிகச் சிறிதாகவும் எழுதலாம். “ஆதிகேசவ பட்டருடைய ஒன்று விட்ட வழக்கறிஞரின் நவபாஷாணக் கிருதிகள்” என்ற நாவலில் “Clipboard” என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே இருக்கும். ஆமாம், ஒற்றைச் சொல் நாவல். பயல்கள் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே, நீளமும் பிரச்சினை அல்ல (அது வேறு ஒன்றினுடையதாக இல்லாத பட்சத்தில்!).

அடுத்து எடிட்டிங். பல மூத்த எழுத்தாளர்கள், பிழைதிருத்துநர்கள் நியாயமான கட்டணத்தில் நாவல்களைச் செப்பனிட்டுத் தருகிறார்கள். நீங்கள் உங்கள் நாவலை எழுதி முடித்ததும் நேரடியாகப் பதிப்பாளருக்கு அனுப்பிவிடலாம். அவர் அதை நேரடியாக அச்சுக்கு அனுப்பிவிடுவார். அதற்குப் பிறகு உங்கள் அதிர்ஷ்டம்.

வாழ்த்துகளுடன்
பேயோன்

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar