அழகிய மாற்றுப் பெண்கள்

in கவிதை

மனைவியுடன் வெளியே செல்லும்போது
அழகிய மாற்றுப் பெண்களை எதிர்கொள்ளும் ஆண்,
அன்பின் விதிகளையும் இல்லற நியாயங்களையும்
எப்படிச் சமாளிக்கலாம்?

அழகு ஒரு கருத்தாக்கம்.
அதன் எல்லைகளைச் சாத்தியங்களைத் தரிசிப்பது
அழகியல் ரீதியானதோர்த் தேடல்.
பூராவும் தத்துவ ரீதியானதோர்ச் செயல்பாடு.

எப்படி ஓர் ஓவிய மாணவனொரு
நிர்வாணப் பெண்ணைக் கண்ணால் பார்த்துக்
கையால் படமாகத் தீட்டுகிறானோ,

எப்படி ஓர் அறுவைச் சிகிச்சைக்காரன்
கத்தி, கத்தரிக்கோலால் செதுக்கி
வைத்தியம் புரிகிறானோ,

எப்படி ஒரு கணிதவியலாளன்
புதிய கணித சூத்திரத்தை உருவாக்கும்போது
மனித உறவுகளை இழுக்காமல் சிந்திக்கிறானோ,
அது போன்ற திது.

மனைவியுடன் வெளியே செல்லும்போது
அழகிய மாற்றுப் பெண்களை எதிர்கொள்ளும் ஆண்,
அன்பின் விதிகளையும் இல்லற நியாயங்களையும்
எதற்குச் சமாளிக்க வேண்டும்?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar