காரட் குழம்பு

in கட்டுரை

நான் சாப்பிட உட்கார்வதற்கும் சோற்றில் குழம்பு ஊற்றப்படுவதற்கும் இடைப்பட்ட சமயத்தில் லபக்குதாஸ் வந்தார். முகத்தில் களையிழந்த புன்னகை. ஏதோ பிரச்சினை. டைனிங் டேபிளின் நான்கு பக்கங்களிலும் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சரிந்துகொண்டார். வழக்கமாக அவர் முன்னறிவிப்பின்றி என்னைப் பார்க்க வர மாட்டார். எங்கே அவர் வரும்போது நான் இல்லாமல் போய்விடுவேனோ என்ற பயம்.

“வாருமய்யா” என்றேன்.

புன்னகைத்த லபக்குதாஸ், சோற்றைப் பார்த்து “என்னய்யா, பாயில்டு ரைஸா?” என்றார் சம்பிரதாயமாக.

“சந்தேகமே வேணாம்” என்று பதிலளிக்க வேண்டியிருந்தது.

மனைவி ஆவி பறக்கும் குழம்புப் பாத்திரத்தைக் கொண்டுவந்து மேஜை மேல் வைத்தார். லபக்குதாஸைப் பார்த்து ‘ஏன் வருகிறாய்?’ என்பது போல் ஒரு அரைப் புன்னகையை சிந்திவிட்டுப் போனார். என் மனைவிக்கு லபக்குதாசைப் பிடிக்காது. அவரிடம் லபக்குதாசைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்.

வெந்த அரிசி பற்றிய கேள்வியில் ஒரு செய்தி இருந்தது என்றால் அது லபக்குதாசின் திடீர் பணத் தேவை தொடர்பானதாக இருக்கலாம். அதைக் கேட்டால் கொடுக்கத் தயாராக இருந்தேன், ஆனால் அது அவர் வாயிலிருந்தே வரட்டும் என்று பேசாதிருந்தேன். லபக்குதாஸ் கடன் கேட்கத் தயங்குபவர் அல்ல. அதையெல்லாம் உரிமையோடு செய்வார். இதில் கூடுதலாக வேறு ஏதோ விவகாரம். நெருங்கிய நண்பரிடம் கடன் கேட்கும்போது அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியிருப்பது சமயத்தில் பெரிய அசௌகரியம்.

லபக்குதாசின் பார்வை காரட் குழம்பில் நிலைகுத்தியிருந்தது. பார்வையில் ஒரே வெறுப்பு. இவனெல்லாம் காரட் குழம்பு சாப்பிடுகிறானே என்று நினைத்தாரா, அல்லது அவர் வீட்டிலும் அன்றைக்கு காரட் குழம்பா என்று புரியவில்லை. காரட் குழம்புடன் எனக்கு முன்பகையே உள்ளது என்றாலும் இவ்வளவு வெறுப்பாக நான் அதைப் பார்த்ததில்லை. என் குறுக்கீடு இல்லை என்றால் அவர் அதைப் பார்வையாலேயே எரித்துவிடுவார் போலிருந்தது.

“என்னய்யா காரட் கொழம்பை லுக் விடுறீரு?” என்றேன்.

சிந்தனையோட்டம் திடுக்கென்று கலைந்தவராக, “ராடிஷ் இல்லியா?” என்றார்.

“ராடிஷ்-னா ஒரு வீச்சம் இருக்குமே” என ஒரு கவளத்தை வாயில் போட்டுக்கொண்டேன். அவரை சாப்பிட அழைக்கவில்லை என்று அப்போதுதான் உறைத்தது.

“சாப்ட்டாச்சா? இன்னொரு ரவுண்டு உக்கார்றீரா?” என்றேன்.

லபக்குதாஸ் பதில் பேசாமல் மறுப்பில் தலையசைக்க, உள்ளறையிலிருந்து பயங்கர சத்தம் எழுந்தது. மனைவியும் மகனும் வாக்குவாதமாய்க் கத்திக்கொண்டிருந்தார்கள். எழுந்து போய்ப் பார்க்கலாமா, இன்னொரு கவளம் போகட்டுமா என்று யோசித்தபோது மகன் (15) பள்ளி மூட்டையுடன் வேகமாக வாசலை நோக்கி வெளியேறினான். மனைவி நேராக சமையலறைக்குச் சென்றார்.

“என்னப்பா, சூடா இருக்கே?” என்று லபக்குதாஸ் மகனை நலம் விசாரித்தார்.

“யோவ், போய்யா வேலையப் பாத்துக்கிட்டு!” என்று திரும்பிப் பார்க்காமல் வெளிப் புயன்றான் வாரிசு. லபக்குதாசின் முகம் வெளிறியது.

நான் எச்சில் கையைத் தட்டில் உதறிவிட்டு வேகமாக அவன் பின்னால் நடந்தேன். ‘அங்கிளை அப்படியெல்லாம் பேசக் கூடாது. அவர் உன்னவிட வயசுல பெரியவர்’ என்று நான் அவனை நிறுத்திவைத்து அறிவுரை அளிப்பதாக லபக்குதாஸ் கற்பனை செய்துகொண்டிருக்கையில் யதார்த்தத்தில் நான் அவன் மென்னியைப் பிடித்து நிறுத்தினேன். என் சட்டைப்பையிலிருந்து எடுக்கப்பட்ட இருநூறு ரூபாயை அவன் பையிலிருந்து மீட்டு அதன் இடத்தில் ஐம்பது ரூபாயை வைத்து “போடா!” என்று தள்ளினேன் சத்தமிட்டு. அவன் ஓடிப் போய்விட்டான்.

“பொறுக்கிப் பய!” என்று உறுமியபடி திரும்பி வந்து சாப்பாட்டுத் தட்டிற்கு முன்பு அமர்ந்தேன்.

“அட, விடுமய்யா. சின்னப் பையன் ஏதோ சொல்லிட்டுப் போறான்” என்றார் லபக்குதாஸ்.

எனக்குக் கோபம் அடங்கவில்லை. “என்னைக் கேக்காம என் சட்டைப்பைலேந்து காசெடுக்குறான்யா. இவனையெல்லாம் என்கவுண்டர்ல போடணும்!” என்றேன். இது டாபிகல் இறையாண்மை விசயம்.

லபக்குதாஸ் சிறிது நேரம் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். “நான் வந்த நேரம் சரியில்லய்யா. அப்புறமா வர்றேன்” என்று எழுந்தார்.

“சாரிய்யா, என்னவோ பேச வந்தீரு. நான் அப்புறமா ஃபோன் பண்ணிக் கேட்டுக்குறேன். சரியா?” என்றேன்.

“ரைட்டு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

நான் இனம்புரியாத மனப்பிசைவுடன் தட்டில் இருந்த காரட் குழம்புச் சோற்றைப் பார்த்தேன். பிறகு அதை சாப்பிடத் தொடங்கினேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar