இன்னுமிரு கடிதங்கள்

in கடிதம்

அன்பின் நூருதீன்,

உங்கள் கையெழுத்து சுத்தமாகப் புரியவில்லை. இப்படிக் கையால் எழுதி ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புவதற்கு பதிலாக நேரடியாக மின்னஞ்சலிலேயே தட்டச்சு செய்யலாமே? உங்கள் அனுப்புநர் பெயரும் மலையாளத்தில் இருக்கிறது. நான் மலையாளம் படிப்பேன், ஆனால் என்ன எழுத்துகளைப் படிக்கிறோம் என்று தெரியாது. “நூருதீன்” என்ற உங்கள் பெயரையே நீங்கள் சற்றுத் தெளிவாக எழுதியிருக்கும் ‘சென்னை-103’ என்ற அஞ்சல் குறியீட்டெண்ணை வைத்துத்தான் ஊகித்தேன்.

சரி, வந்த கடிதத்தை வீணாக்குவானேன்? பாக்டீரியாக்களைப் பற்றிச் சில தவறான கருத்துகள் உலவுகின்றன. எல்லா பாக்டீரியாக்களும் தீங்கானவை அல்ல. நம் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவுச் செரிமானத்தில் உதவுகின்றன. அவைகளுக்கு ஒன்று என்றால் நாம் பாக்டீரிய மருத்துவரிடம் செல்ல வேண்டும். பாக்டீரிய மருத்துவம் இப்போது வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறையாகும். ஆனால் மிகையான சுகாதார நடவடிக்கைகளால் நம் வீட்டிலுள்ள நல்ல பாக்டீரியாக்களையும் வீரியமான கிருமி நாசினிகளால் கொன்றுகொண்டிருக்கிறோம். இதனால் நமக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய நன்மைகளை நாம் இழக்கிறோம். பாக்டீரியாக்களின் அழிவால் பாக்டீரிய மருத்துவம் வேகமாக நசிந்துவரும் ஒரு துறை ஆகிவருகிறது. இது போதும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துகளுடன்
பேயோன்

*

அன்புள்ள பேயோன்,

எழுதுவியா? இனிமே எழுதுவியா?

இப்படிக்கு
பிரம்பு
பழநி/திருப்பதி

அன்புள்ள பிரம்பு,

உங்கள் அக்கறைக்கு நன்றி. நான் பத்து நிமிடம் எழுதாமல் இருந்தால் தொலைபேசி அழைப்புகள் குவியும் நிலை மாறும் வரை எழுதுவேன் என்றே நினைக்கிறேன். எனக்கு வேறு தொழில் தெரியாது. அறிவார்த்தத் தேடல் உள்ள என் போன்ற ஒருவன் வங்கியில் வேலை பார்க்க முடியுமா? ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்துவிடுவேன். வேலை நடக்காது. அப்புறம் உங்கள் பெயர் – வித்யாசமாக இருக்கிறது. பழநி, திருப்பதி பக்கம் இப்படியொரு பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. மதுரை பக்கம் இப்படிச் சிலர் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு மதுரையில் பிறந்து பழநிக்கு மாறிய புலம்பெயர்ந்த தமிழரா?

நீங்கள் என்னை ஒருமையில் அழைப்பதை வைத்து உங்களுக்கு தொண்ணூறு வயதாவது இருக்கும் என்று எண்ணுகிறேன். என் தாத்தா உயிரோடு இருந்திருந்தால் அவருக்கும் உங்கள் வயதுதான் இருக்கும். ஆனால் அவர் எனக்குக் கடிதம் எழுத மாட்டார். ஏனென்றால் நாங்கள் ஒரே வீட்டில் இருப்போம். உங்கள் கடிதம் அவரைப் பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டது. அவரும் இப்படித்தான் என்னை ஒருமையில் அழைப்பார். ஆனால் உங்களைப் போல் எனக்குக் கடிதம் எழுத மாட்டார். காரணம், நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தோம்.

வாழ்த்துகளுடன்
பேயோன்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar