கடிதம்: வழிகாட்டல்

in கடிதம்

அன்புள்ள பெ,

தேச மொழி எல்லைகளைக்கடந்து வாசகர்களுக்கு வழிகாட்டுவது என்பது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது?

பிரகாஷ் வெங்கடேசன்

அன்பின் பிரகாஷ்,

வழிகாட்டுதல் என்பது தன்னளவில் எல்லைகளுக்கு எதிரானது. இந்த எதிர்ச் செயல்பாடு ஓர் எழுத்தாளனுக்கு இயல்பாக வருவது, உவப்பானது, மற்றும் நல்லது. எல்லைகளுக்கு ஏறக்குறைய ராணுவத்தனமான முக்கியத்துவம் அளிக்கும் சிறைச்சாலை போன்ற இடங்களில்கூட வரைபடங்களின் வடிவில் வழிகாட்டல் இன்றியமையாததாக இருப்பதைக் கொண்டே அது என் நோக்கங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்று புரிந்துகொள்ளலாம்.

கம்பன், வள்ளுவன் வாழ்ந்த காலத்தில் ஒரு படைப்பாளி தன் படைப்புகளைக் கையெழுத்துப் பிரதிகளாக வீட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அவை மற்றவர்களைச் சென்றடைய வேண்டுமென்றால் அவன் வாய் வழியேதான் அது நடக்க வேண்டியிருந்தது. அச்சு இயந்திரம், பிறகு விமானம், அதற்குப் பின்பு எண்பது பக்க நோட்டு போன்ற கண்டுபிடிப்புகள் இலக்கியப் பரவலில் புரட்சியை ஏற்படுத்தின. இது எனக்கு மிகவும் வசதியாகிப்போனது.

இன்று எனது செய்தி இணையம் வழியே, கூரியர் வழியே, பதிவுத் தபால் வழியே உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை அடைகிறது. சுருக்கமாகச் சொன்னால், அச்சுத் துறையும் தகவல் தொழில்நுட்பமும் உச்சத்தில் இருக்கும் யுகத்தின் குழந்தை நான். அதனாலேயே எல்லைகளைக் கடந்த வழிகாட்டல் பிதுரார்ஜிதமாக எனக்குச் சாத்தியமாகிறது, வேறொன்றுமில்லை. அப்புறம் அது “பே”; “பெ” அல்ல.

வாழ்த்துகளுடன்
பேயோன்

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar