கடிதம்: கூடுதல் குழந்தை

in கடிதம்

அன்புள்ள பேயோன் சார்,

நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உயிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்போது உறவினர்கள் முதல் குழந்தையைத் தனியாக விடாதே, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.

கோபி,
செட்டிப்பாளையம்

பி.கு.: இந்தக் கடிதத்தில் தவறுகள் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்.

* * *

அன்பின் கோபி,

என் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றி. நலமாக இருக்கிறீர்களா?

உங்கள் கேள்வி, முதல் குழந்தை பெற்றுக்கொண்ட எல்லோருக்கும் எழும் கேள்விதான். இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி உயிரோடு இருந்தால் மட்டும் போதாது. உங்கள் இருவருக்கும் இன்னொன்றை மேய்க்கத் திராணி இருக்கிறதா என்று பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே சமூகம் அவர்களிடம் இன்னொரு குழந்தையை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது. சமூகம் என்பது புற்றுநோய் போன்றது. நாம் அதன் உயிரணுக்கள். தனது உயிரணு எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதே புற்றுநோயின் செயல்பாடு. நாம் இதற்கு உடன்பட வேண்டும் என்றில்லை. இரண்டு குழந்தைகளைக் கட்டி மேய்க்கத் திணறும்போது சமூகம் உதவிக்கு வராது. அழுத்தம் கொடுக்கும் உறவினர்கள் கைகொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கும். அதனால்தான் அவர்கள் உங்களையும் தங்களாக மாற்ற முயல்கிறார்கள். எனவே உங்கள் வசதி எப்படி என்று மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில நாடுகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்றுப்போடுவதன் விளைவுகளைச் சட்டங்கள் அங்கீகரிக்கின்றன. யுரேஷியாவில் (சீனாவைத் தாண்டி நேராகச் சென்று ஜப்பான் கடலில் இடப்பக்கம் திரும்பி மீண்டும் ஓர் இடது எடுத்தால் வரும் நாடு) இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பு முதல் குழந்தையின் ஒப்புதலைப் பெற வேண்டும். முதல் குழந்தையின் சம்மதம் இல்லாமல் இன்னொரு குழந்தையைப் பெறுவது அபராதத்திற்குரிய குற்றமாகும். அதே போல தெலுங்கர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் பம்ப்பிஸ்தானில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கடுமையான விதி அமலில் உள்ளது. இங்கே கூடுதல் குழந்தை, தண்டனைக்குரிய குற்றம். இரண்டாம் குழந்தை பிறந்தால் முதல் குழந்தை ஐந்தாண்டுகள் சிறையில் வாழ வேண்டியிருக்கும்.

கூடுதல் குழந்தையின் சிக்கல்களைச் சில பெண்கள் தனியாக சமாளித்ததை மகாபாரதத்தில் காணலாம். சாந்தனுவை மணம் முடிக்கும் கங்கை, இரண்டாம் குழந்தை வேண்டாம் என முடிவெடுக்கிறாள். இந்த நிராகரிப்பை அவள் குக்கர் விசில் எண்ணிக்கை போன்ற ஒரு குழப்பத்தால் முதல் குழந்தையிலிருந்தே தொடங்கிவிடுகிறாள். ஒரு கட்டத்தில் சாந்தனு பொறுமை இழந்து அவளிடம் இப்படிக் கேட்கிறான்: ‘குழந்தைகளை ஆற்றில் குளிப்பாட்டும்போது ஏன் கையை எடுத்துவிடுகிறாய்?’ கங்கைக்குத் தன்னை யாராவது கேள்வி கேட்டாலே பிடிக்காது. பதில் சொல்ல வாயைத் திறந்தால் தண்ணீரும் மீனுமாக வெளியே கொட்டுவதும் ஒரு காரணம். கேள்வி கேட்கப்பட்ட கோபத்தில் கணவனைக் கைவிட்டுச் செல்கிறாள் கங்கை. இப்போது போய்ப் பார்த்தீர்கள் என்றால் வளர்ந்த ஆட்களே கங்கையில் மிதப்பதைக் காணலாம். கங்கையில் விடப்படும் செத்த சாரீரங்களில் எத்தனை இரண்டாவது குழந்தைகள் என்று தெரியவில்லை. இதற்கும் உங்கள் கடிதத்திற்கும் தொடர்பில்லை. ஆனால் எனக்கு இப்படி ஏதாவது சொல்லியாக வேண்டும்.

கிரேக்க புராணம், பாரசீக கதைசொல்லல் என உங்கள் பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாமல் நிறைய எழுதலாம். உங்கள் தற்போதைய குழந்தை அலுத்துவிட்டது, மாறுதலுக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்றால், கர்ப்ப செலவுகள், குழந்தைச் செலவுகள் போன்றவைக்காக சேமிக்கத் தொடங்குங்கள். முதல் குழந்தையை வளர்க்கும் அனுபவம் இரண்டாம் குழந்தையின் வளர்ப்புக்கு ஓரளவு உதவும். கூடுதலாக ஒரு பாக்கெட் பால் வாங்குங்கள். முதல் குழந்தை சற்றுப் பெரியது என்றால் தம்பி/தங்கை பாப்பாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அதனிடமே விடுங்கள். க்ரஷ் வசதியைப் பயன்படுத்துங்கள். இம்மாதிரி விசயங்களைப் பட்டியல் போட்டுத் தீர்வு கண்டால் கூடுதல் குழந்தை ஒரு சுமையே இல்லை. கடைசியாக, நம்பகமான ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள். எல்லோரும் அதை மறந்துவிட்டுப் பின்பு புலம்புகிறார்கள்.

வாழ்த்துகளுடன்
பேயோன்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar