பாம்பும் புழுக்களும்

in புனைவு

(உருவகக் கதை)

ஒரு காட்டில் நிறைய பாம்புகள் இருந்தன. அதில் ஒரு பாம்பு மற்ற பாம்புகளைப் போல் சட்டையை உரிப்பதும் படமெடுப்பதும் செடி கொடிகளுக்குள் புகுந்து மறைவதுமாக வாழ்க்கை நெளித்துவந்தது. அதே காட்டில் புழுக்களும் இருந்தன. ஒரு புழுவுக்கு இந்தப் பாம்பிடம் பொறாமையாக இருந்தது. ‘இவனும் அச்சு அசலாக நம்மைப் போலத்தானே இருக்கிறான், இவனுக்கு மட்டும் கொம்பா முளைத்திருக்கிறது? இவனுக்கு ஏன் விலங்குகளிடையே இவ்வளவு மரியாதை?’ என எரிச்சலடைந்தது. தனக்கும் ஒரு காலம் வரும் என்று கறுவிக்கொண்டது. ஒருநாள் பாம்பு தன் சட்டையைக் கழற்றிக் குப்பையாகப் போட்டுச் சென்றது. ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த புழு, அந்தச் சட்டைக்குள் புகுந்துகொண்டது. சட்டையோ புழுவுக்கு மிகப் பெரிதாக இருந்தது. ஆளில்லாத ரயிலுக்குள் எலி ஓடுவது போல் அந்தச் சட்டையின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு அலைந்துகொண்டிருந்தது புழு. சட்டையை மாட்டிக்கொண்டு பாம்பாக நடமாடப் புழுவால் முடியவில்லை. எனவே சட்டைக்குள் இருந்தபடியே சன்னக் குரலில் ‘நான் பாம்பு, நான் பாம்பு’ என்று கத்தியது. பாம்புக்கு மணி கட்டப் புழு வந்துவிட்டது என்று சகபுழுக்கள் சட்டைக்குள் குழுமி ஆரவாரித்தன. ஒரு புதரோரத்தில் கிடந்த பாம்புச் சட்டை ஒன்றிற்குள் ஒரு புழுக் கூட்டம் நிகழ்த்திய இந்த வனப் புரட்சி பற்றிக் கடைசியில் அந்தப் பெரிய காட்டில் யாருக்கும் தெரியாமல்போனது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar