கத்தியின்றி ரத்தமின்றி

in சிறுகதை, புனைவு

(ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை)

புறநகரில் இருந்த அந்தத் தனி வீட்டை இன்ஸ்பெக்டர் குமார் அடைந்தபோது வாசலில் சிறு கூட்டம் கூடியிருந்தது. கான்ஸ்டபிள் 114 அவருக்காக வெளியில் காத்திருந்தார்.

“என்ன விசேஷம்?” என்று கான்ஸ்டபிளிடம் கேட்டுக்கொண்டே படியேறினார் குமார். “மர்டர் கேஸ் சார்” என அவரைப் பின்தொடர்ந்தார் 114.

போலீஸ் புகைப்படக்காரர் பெரிய கூடத்தின் சோபாவில் கிடந்த கொலைப் பிணத்திடமிருந்து தூர விலகி நின்று படமெடுத்துக்கொண்டிருந்தார். குமாரைப் பார்த்ததும் சல்யூட் வைத்தார்.

இடதுகால் லுங்கியிலிருந்து வெளிப்பட்டுச் சரிந்து தரையில் புரள, கைதாங்கும் கட்டை மீது வலதுகால் கிடக்க, தலைக்கு அடியில் தலையணையுடன் சோபாவில் கிடந்தது ஆண் பிணம். இன்ஸ்பெக்டர் அருகில் சென்று பார்த்தார். வயது முப்பத்தைந்திலிருந்து நாற்பது இருக்கும். திருமணமானதற்கு அடையாளமாகக் கழுத்தில் தாலி. நெற்றியில் சன்னஞ்சரியாகப் பொட்டு வைக்கும் இடத்தில் ஆணி அடித்திருந்தது. அந்த இடத்தைச் சுற்றி வேறு கீறல்கள், காயங்கள் இல்லை. எனவே ஓங்கி அடித்த ஒரே அடியில் ஆணியைப் புகுத்தியிருப்பார்கள் போல. குறுக்கும் நெடுக்கும் சிறு கோடுகள் பாய்ந்த வட்ட முனை மட்டுமே தெரியும்படி ஆழமாக இறங்கியிருந்தது ஆணி. அதைச் சுற்றி மண்டையோட்டில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மண்டைக்கு வெளியிலிருந்து பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான கச்சிதம். குமார் தம் சட்டைப்பையிலிருந்து ஒரு குச்சியை எடுத்துப் பிணத்தின் தலையை இருபக்கமும் திருப்பிப் பார்த்தார். பின்னந்தலை வீக்கத்தை கான்ஸ்டபிளிடம் காட்டினார்.

“விஸ்வநாதன நெத்தீல ஆணியடிச்சிக் கொன்னுருக்காங்க சார்” என்றார் 114.

“யாரு விஸ்வநாதன்?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“இவுருதான் சார்” என்று பிணத்தைக் காட்டிச் சொன்னார் கான்ஸ்டபிள். குமார் யோசனையாகத் தலையாட்டி ஆமோதித்துவிட்டு விஸ்வநாதனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்.

பக்கத்து அறையில் அழுது அடங்கி அடுத்த பாட்டத்தைத் தொடங்கும் பெண் கேவல் கேட்டது. ஒரு பெண், சந்தேகத்திற்கிடமின்றி விஸ்வநாதனின் மனைவி ரேணுகா (சுமார் 30 வயது), இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு சுவரோரத்தில் உட்கார்ந்திருந்தார். அருகே அவரை சமாதானப்படுத்திக்கொண்டு சற்று மூத்த இன்னொரு பெண்மணி.

“என்னம்மா ஆச்சு?” என்றார் குமார் குரலை இளக்கிக்கொண்டு.

“காலைல எழுந்து பாத்தா என் புருஷன் பொணமா கெடக்குறாரு சார். மண்டைல ஆணி அடிச்சிருக்கு. அவருக்கு இதெல்லாம் புடிக்கவே புடிக்காது!” கேவல் தொடர்ந்தது.

“காலைல எப்ப எழுந்தீங்க?”

“அஞ்சரை மணி இருக்கும் சார்.”

“ராத்திரி ஏதாச்சும் சத்தம் கேட்டுச்சா?”

“இல்ல சார்.”

“உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? அவருக்கு எதிரிங்க யாராவது…”

“அதெல்லாம் இல்லைங்க சார். அவரு யார் வம்புக்கும் போக மாட்டாரு.”

“நல்லா யோசிச்சு சொல்லுங்கம்மா. கதவைத் தொறந்துக்கிட்டு உள்ள வந்திருக்காங்க. அவருக்குத் தெரிஞ்ச யாரோ ஒரு ஆள்தான் இப்படி பிஹேவ் பண்ணிருக்கான். அநேகமா அவர்தான் கதவைத் தொறந்து விட்டுருப்பாரு…”

“அப்படி நடந்திருந்தா சத்தம் கேட்டு நான் எழுந்திருப்பேனே சார்! சத்தமில்லாம முடிஞ்சுபோச்சே!” மனைவி மீண்டும் அழத் தொடங்கினார்.

வீட்டிலிருந்து சல்லிக் காசுகூடத் திருடு போகவில்லை. நகைகளும் ஒரு திருகாணி விடாமல் பத்திரமாக இருந்தன. பீரோ பூட்டிய கோலத்தில் கிடந்தது. புருவம் சுருங்கிய குமார், பிள்ளையார் பொம்மை பதித்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். தலத்திற்கு வந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியும் குற்றவாளி யார் என்று ஊகிக்க முடியாததில் குமாருக்கு எரிச்சலாக இருந்தது. ‘அவ்வளவு பெரிய ஆளா நீ?’ என்று நினைத்துக்கொண்டார்.

க்ரைம் சீனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டார் இன்ஸ்பெக்டர். விஸ்வநாதன் பிரேதப் பரிசோதனைக்கு மூட்டை கட்டப்பட்டார். அவரது மனைவி, அருகில் அமர்ந்து தேற்றிக்கொண்டிருந்த பக்கத்துவீட்டுப் பெண்மணியின் வீட்டில் தங்க ஏற்பாடானது. வீட்டிற்குள் ஆயுதபூஜைத் தோரணங்கள் போல் மஞ்சள் ரிப்பன்களைக் கட்டிப் பூட்டுப் போட்டார்கள். குமார் ஸ்டேஷனுக்கு புல்லட்டைச் செலுத்தினார்.

இன்ஸ்பெக்டர் அவசரப்படுத்தியும் போஸ்ட்மார்ட்ட அறிக்கை கைக்கு வர இரண்டு நாள் ஆனது. குமாருக்கு முன்பே தெரிந்த இரு விஷயங்களை அறிக்கை உறுதிப்படுத்தியது. மொண்ணை ஆயுதத்தால் – அநேகமாகக் கட்டையால் – பின்மண்டையில் அடித்து நெற்றிப்பொட்டில் ஆணி அடித்திருக்கிறார்கள். ஆணி அடித்ததால்தான் ஆசாமிக்கு இதயம் நின்றுவிட்டிருக்கிறது. முதலில் பின்மண்டையில் அடித்து மயக்கமூட்டி சோபாவில் கிடத்திய பின்பு ஆணியை இறக்கியிருப்பார்கள் என்று ஊகித்தார் குமார். எவ்வளவு தெரிந்த ஆளாக இருந்தாலும் மண்டையில் ஆணி அடிக்க ஒப்புக்கொண்டிருக்க முடியாது. அந்த மாதிரி ஓர் உறவை குமார் இன்னும் பார்க்கவில்லை. இது ஏதோ ஒருவித அனஸ்தீஷியாவைக் கொடுத்த பின்பு செய்ய வேண்டிய காரியம். கொலை நடந்த நேரம், நள்ளிரவைத் தாண்டி 1.00-2.00 மணி என்றது ரிப்போர்ட்.

ஆணி, சோபா, கதவு எதிலும் கைரேகை இல்லை. அவை சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தன. மேஜை, நாற்காலி தவிர கனமான மரச் சாமான்கள் எவையும் இல்லை. வேலைக்கு ஆகாத வகையில் வீட்டைச் சுற்றி ஏராளமான கால் தடங்கள் இருந்தன. வங்கி அதிகாரி விஸ்வநாதனும் இல்லத்தரசி ரேணுகாவும் அதிக சண்டை சச்சரவில்லாமல் வாழ்ந்ததாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். சலிப்பூட்டும் வாழ்க்கை போல் தெரிந்தது. மனைவி குற்றவாளியாக இருக்க முடியாது என்று குமார் அப்போதைக்கு முடிவு செய்தார். ஆனால் நெற்றிப்பொட்டில் கச்சிதமாக ஆணி அடிக்கப்பட்டதில் ஏதோ துப்பு இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஆனால் அது என்ன? சுத்தமாகத் தெரியவில்லை.

மூன்றாம் நாள் கொலை வீட்டிற்கு இன்னொரு வருகையடித்தார் குமார். தமிழில் அவருக்குப் பிடிக்காத வார்த்தை பூதக்கண்ணாடி. ஆனால் இப்போது வேறு வழியின்றி அதைத்தான் கையில் வைத்துக்கொண்டு சோபாவுக்கு அருகே தரையை ஆராய்ந்துகொண்டிருந்தார். வாசலிலிருந்து சோபா வரை ஆங்காங்கே இறைந்து கிடந்த நூலிழைகள் போன்ற சில பொருட்கள் குமாரின் காவல் துறைக் கண்களில் பட்டன. அவற்றைத் தமது ஆஸ்தான குச்சியால் மெல்ல எடுத்து ஒரு பாலிதீன் பைக்குள் போட்டுக்கொண்டார்.

ரேணுகா விஸ்வநாதன் இப்போது நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்த தமது தூரத்து உறவினர் வீட்டிற்கு இடமாற்றல் ஆகியிருந்தார். குமார் அங்கே போய் இன்னும் சில கேள்விகள் கேட்டதில் சில தகவல்கள் கிடைத்தன. வீட்டில் இரண்டு பேர் இருந்தும் டூப்ளிகேட் சாவி வைத்துக்கொள்ளவில்லை. முன்பெல்லாம் இருவரில் ஒருவர் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே போனால் சாவியைப் பக்கத்துவீட்டில் கொடுத்தார்கள். இப்போது ஜன்னலுக்கு உள்பக்கம் ஒளித்துவைத்து ஜன்னல் கதவை மூடும் பழக்கம் வந்திருந்தது. அதைத்தான் யாரோ பார்த்து எடுத்து நகல் எடுத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் புழங்குபவர்களில் ஒருவரின் கைவேலையாக இருக்கலாமோ என்று நினைக்கலாம் என்றால் உருப்படியான உள்நோக்கம் எதுவும் அகப்படவில்லை.

கொலை நடந்த நான்காம் நாள் தடயவியல் ஆய்வகத்திலிருந்து ஓர் அறிக்கை வந்தது. இன்ஸ்பெக்டர் அள்ளி வந்த நூலிழைகள் அவர் முன்பே எதிர்பார்த்தது போல் அடிப்படையில் சணல் இழைகள். சணல் என்றால் கோணிப்பை செய்யப் பயன்படும் ரகம். குமாரின் அனுபவமிக்க புருவங்கள் இம்முறை தீர்க்கமாகச் சுருங்கின.

அடுத்த நான்கு மணிநேரத்தில் (போக்குவரத்து நெரிசல்) குமாரின் கார் ரேணுகாவின் உறவினர் வீட்டுப் பார்க்கிங்கில் நின்றது.

ரேணுகா இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தார். குமாரை மௌனமாக வரவேற்றார். குமார் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நேரடியாகக் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார்.

“உங்க வீட்ல கோணிப்பை இருக்கா?”

“இருக்குமே. எடுத்துத் தரவா?” என்று குழப்பம் காட்டி எழுந்தார் ரேணுகா.

“இந்த வீட்ல இல்ல. உங்க வீட்ல.”

“நாங்க கோணிப்பை எல்லாம் யூஸ் பண்றதில்ல சார்.”

“ஓ.கே. சாவிய முதல்ல பக்கத்துவீட்டுல குடுத்துக்கிட்டிருந்த நீங்க, அப்புறம் ஏன் அதை உங்க வீட்டு ஜன்னல்ல ஒளிச்சு வெச்சீங்க?”

“அவர்தான் அவங்க வீட்ல குடுக்க வேணாம்னாரு.”

“அப்படியா? ஏன்?”

“பக்கத்துவீட்டு ஆன்ட்டி எங்க வீட்டுக்கு சீரியல் பாக்க வருவாங்க. அது என் ஹஸ்பெண்டுக்குப் புடிக்கல. எங்களுக்குள்ள சண்டை ஆயிடுச்சு. அவங்க வர்றத நிறுத்திட்டாங்க. என்னோட பேசறதையும் நிப்பாட்டிட்டாங்க. அப்பதான் சாவி குடுக்குறத நிறுத்துனேன்.”

“அவங்க ஏன் உங்க வீட்ல டி.வி. பாக்கணும்? அவங்க வீட்ல இல்லியா?”

“இருக்கு. ஆனா அவங்க புருஷன் வீட்ல சீரியல் பாக்க விடமாட்டாரு. பசங்க ரொம்ப கார்ட்டூன் பாப்பாங்க.”

“ஐ ஸீ” என்ற குமார், “தேங்க் யூ ஃபார் த இன்ஃபர்மேஷன்” என்றார்.

இதைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்று மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், “இந்த சாவியக் காட்டி ஏரியால இருக்குற டூப்ளிகேட் சாவிக் கடை எல்லாத்தையும் விசாரி” என்றார், “ஓகே சார்” என்று பதிலளித்த கான்ஸ்டபிளிடம்.

குமார் 114ஐ அனுப்பிவிட்டு விஸ்வநாதனின் பக்கத்துவீட்டிற்குப் பறந்துகொண்டிருந்தபோது கான்ஸ்டபிளிடமிருந்து தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தந்த சாவியை இரு வாரங்களுக்கு முன்பு ஒரு சிறுவன் டூப்ளிகேட் செய்திருக்கிறான். மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற எவ்வளவு வலுவான நம்பிக்கை இருந்திருந்தால் கொலையாளி தன் மகனையே பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட்டார் குமார்.

விஸ்வநாதனின் பக்கத்து வீட்டை வி.ஆர்.எஸ். கொடுத்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். அவர் பெயர் சுப்பிரமணி. குமார் வீட்டுக்குள் நுழைந்ததும் சுப்பிரமணி தொலைக்காட்சி எதிரிலான குஷன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தார். குமாருக்குப் புன்னகைத்து இன்னொரு இருக்கையைக் காட்டினார். அவர் வலதுகை இதிலெல்லாம் கலந்துகொள்ளாமல் ரிமோட்டின் சானல் பொத்தானைப் பரபரவென்று அழுத்திக்கொண்டே இருந்தது.

“விஸ்வநாதன் கொலை சம்மந்தமா உங்ககிட்ட சில கேள்விகள் கேக்கணும்.”

சுப்பிரமணியின் மனைவி மகாலட்சுமி, குமாரைப் பார்க்கக் கூடத்திற்கு வந்தார். விஸ்வநாதன் கொலையுண்ட பிறகு ரேணுகாவுக்குப் பக்கத் துணையாக இருந்த ‘சற்று மூத்த பெண்மணி’ இவர்தான்.

“நீங்க என்ன பண்றீங்க மேடம்?” என்றார் குமார்.

“நான் இங்க பக்கத்துல சாய் மெட்ரிகுலேஷன்ல டீச்சரா இருக்கேன்.”

“எந்த க்ளாஸுக்கு எடுக்குறீங்க?”

“நர்சரிதான் சார்” என்றார் அடக்கமாக.

கான்ஸ்டபிள் 114 உள்ளே நுழைந்தார்.

“கண்டுபுடிச்சிட்டீங்களா சார் யார் பண்ணாங்கன்னு?” என்றார் மகாலட்சுமி.

“கண்டுபுடிச்ச மாதிரிதான்” என்றார் குமார் புன்னகைத்து.

மகாலட்சுமி திகைத்து நின்றார்.

“எப்படி சார் கண்டுபுடிச்சீங்க? ஹூ இஸ் த கல்ப்ரிட்?” என்று கேட்டார் சுப்பிரமணி. எங்கே அதைக் கேட்காமல் போய்விடுவார்களோ என்ற மெல்லிய கவலையில் இருந்த குமார், விளக்கத்திற்கான தயார்ப்படுத்திக்கொள்ளுதலாகக் கனைத்தார்.

“ரொம்ப ஈஸி. கொலை பண்ணவங்களுக்கு விஸ்வநாதன் வீட்டு சாவி கிடைச்சிருக்கு. அத டூப்ளிகேட் எடுத்திருக்காங்க. நைட்டு ஒரு மணி இருக்குறப்ப சுலபமா கதவத் தொறந்து உள்ள போயிருக்காங்க. நடக்கற சத்தம் கேக்காம இருக்க கோணிப்பைக்குள்ள நின்னுக்கிட்டு குதிச்சு குதிச்சுப் போயிருக்காங்க. அன்னிக்குன்னு பாத்து விஸ்வநாதன் வாசலுக்கு முதுகைக் காட்டிக்கிட்டு சோபால தூங்கிட்டிருந்திருக்காரு. இவங்க முன்னெச்சரிக்கையா ஒரு கட்டையால விஸ்வநாதன் மண்டைல ஒங்கி ஒரு போடு போட்டு அவரை மயக்கிட்டாங்க. அப்புறம் உடம்பைத் திருப்பி வெச்சு அதே கட்டையால கரெக்டா நெத்திப் பொட்டுல ஆணி அடிச்சுக் குரூரமா கொன்னுருக்காங்க. கொன்னப்புறம் சைலண்டா வந்த வழில திரும்பிப் போயிட்டாங்க.”

“அதெப்படி அவ்ளோ துல்லியமா சொல்ல முடியும்?” என்றார் மகாலட்சுமி மூச்சிரைக்க.

“நெத்தில இம்மி பிசகாம கரெக்டா பொட்டு வெக்கிற இடத்துல ஆணியப் பாத்தப்பவே இது லேடீஸ் வேலையாத்தான் இருக்கும்னு தோணிச்சு. அதுவும் அந்த பெர்ஃபெக்‍ஷன் – அதுக்குப் பின்னால இருக்குற மன உறுதி, அனுபவம், கண்டிப்பா மிடில் ஏஜ்னு சொல்லுது. சாக்குப்பைய கால்ல மாட்டிக்கிட்டு தவ்வித் தவ்விப் போற ஐடியா ஒரு நர்சரி ஸ்கூல் டீச்சருக்குத்தான் தோணும். நீங்க வீட்லேர்ந்தே பூரிக்கட்டையோ சம்திங் லைக் தட் எடுத்துட்டுப் போயிருக்கீங்க. வெப்பன்ஸை உங்க வீட்ல சீக்கிரமா தேடிக் கண்டுபுடிச்சிடுவோம். ஸர்ச் வாரன்ட்டும் அரஸ்ட் வாரன்ட்டும் வந்துட்டிருக்கு. பாவம், உங்க பையன வேற இன்வால்வ் பண்ணிருக்கீங்க. நல்லா கொன்னீங்க போங்க!”

“நானா?” மகாலட்சுமி வீறிட்டார்.

“பின்ன நானா?” என்றார் குமார். “சீரியல் பாக்க விடாத ஆத்திரத்துல விஸ்வநாதனை திட்டமிட்டுக் கொன்னதுக்காக உன்னைக் கைது பண்றேன்!”

“ஹலோ!” என்று மகாலட்சுமி அலறினார் கணவனைப் பார்த்து. “இவங்க என்னை இழுத்துட்டுப் போறாங்க, நீங்க பாட்டுக்கு சானல் மாத்திட்டு இருக்கீங்களே!”

“மகா, இன்ஸ்பெக்டர் பக்கமும் நியாயம் இருக்கு. எப்பவுமே சட்டத்தை நம்ம கைல எடுத்துக்கிட்டா பிரச்சனைதான். பசங்க விளையாடிட்டு வர்றதுக்குள்ள கெளம்பிடு. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றார் சுப்பிரமணி.

குமார் விலங்கு மாட்டி மகாலட்சுமியைக் கட்டிய புடவையுடன் ஜீப்பிற்கு அழைத்துச் செல்லும்போது கேட்டார், “ஏம்மா, நீயுந்தானே சம்பாதிக்கிறே? உன் காசுல ஒரு டி.வி. வாங்கி சீரியல் பாத்திருக்கலாம்ல?”

“என்னவோ தோணவேயில்ல சார்!”

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar