ஏழு காதல் கவிதைகள்

in கவிதை

1

உன்னை 24 மணிநேரமும்
வீட்டுக்குள்ளேயே
பூட்டிவைக்கச் சொல்கிறது
என் காதல்.

2

காதலர்களாகும் முன்
நீயறிந்து உன்னைப்
பின்தொடர்ந்தேன்
இப்போது நீயறியாமல்.

3

என்னைக் கண்டு நாணி
நீ கால் கட்டைவிரலால்
தீட்டும் பெயர் –
யாரது, தெரிந்த ஆளா?

4

நாம் பேசியதைவிட
நம் கண்கள் பேசியதே அதிகம்
அவை பேசத்தான் முடியும்
நாம் எவ்வளவோ செய்யலாம்.

5

நீ உட்கார இடமின்றி
என் மடியில் அமரவைத்த
பேருந்தின் நடத்துநரே,
எங்கேயும் நிற்காமல் செல்வீராக.

6

உன் பாத ஸ்பரிசம் பெற்ற
வாழைப்பழத் தோலிடம்
பொறாமைப்படும்
நிலைமை எனக்கு.

7

உன்னைச் சிரிக்கவைக்க
எனக்குச் செலவாகும்
கற்பனை சக்தி
என்னை அழவைப்பதில்
உனக்குச் செலவாகிறது.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar