நானும் பாரதியும்

in கட்டுரை

மகாகவி பாரதியின் பெயர் சுப்பிரமணியமாக இருந்தாலும் அவர் ஐயங்கார் என்றே நீண்டகாலம் நினைத்திருந்தேன். அவரது நாமம், கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தொடர்பு ஆகியவை சில காரணங்கள். எனினும் 1906இல் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தபோது அந்த மனத்தகவல் மாறியது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது நானும் எனது நண்பனும் (பெயரெல்லாம் கிடையாது) கோவில் சுவரோவியங்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்க நிதி கிடைப்பது போல் இருந்தது. மாதிரிப் படமாக பார்த்தசாரதி கோவில் சுவரோவியங்களைப் பற்றி ஒரு படம் செய்தோம். பார்த்தசாரதி கோவில் பின்வாசலுக்கு எதிரில் துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் இருந்த பாரதியின் சொகுசான வீட்டுக்கு அவருடன் பேச நானும் எனது பெயரற்ற நண்பனும் சென்றோம்.

சமகாலக் கவிதை குறித்துச் சிறிது நேரம் அளவளாவினோம். பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தபோது ‘சுப்பிரமணி!’ என்று கூப்பிட்டுக்கொண்டே ஒருவர் வீட்டுக்குள் வந்தார். அப்போதுதான் எனக்கு உறைத்தது பாரதியார் வைணவர் அல்ல என்று. உள்ளூர் பாரம்பரியக் கலைகளில் பாரதியின் ஞானம் கேள்விக்குட்படுத்தப்பட முடியாதது என்றாலும் எங்கள் ஆவணப் படத்திற்கு முழுமுற்றான வைணவர் தேவைப்பட்டார். பெரும் சங்கடத்துடன் அவரிடம் விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நண்பருடன் விடைபெற்றேன். நல்லவேளையாக பாரதி அடுத்த கணமே எங்களை மறந்துவிட்டு வந்தவரை உபசரிப்பதில் இறங்கிவிட்டார்.

அடுத்து நான் அவரைச் சந்தித்தது 1910இல் இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில். அது பாரதிக்கு இக்கட்டான தருணம். கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் போல் ரகசியமாகச் செயல்பட வேண்டிய நிலையில் அவர் இருந்தார். பிரிட்டிஷ் அரசு 1909 ஜனவரி 20ஆம் தேதி வெளியிட்ட மகஜர் மூலம் அவரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு நூறு கசையடிகள் இனாம் அறிவித்த பின்பு சென்னை மாகாணத்தின் பல மூலைகளிலிருந்து மக்கள் அவரைத் தேடத் தொடங்கினார்கள். எனவே வேறு வழியின்றி அவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு வீடு மாறினார். அங்கேயும் போய்ச் சும்மா இராமல் சூர்யோதயம் பத்திரிகையை நடத்தினார்.

எனக்குச் சென்னையில் வேலை தேடி அலுத்துப்போனது. புதுச்சேரிக்குச் சென்றால் பாரதியிடம் சூரியோதயத்தில் துணை ஆசிரியராக வேலை பார்க்கலாம் என்று நம்பினேன். அவர் எங்கே தங்கியிருந்தார் என்று எனக்குத் தெரியாது. பாரதிக்குத் தெரிந்த சிலரைத் தொடர்பு கொண்டு அவர் முகவரியைப் பெற முயன்றேன். துரதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி முழுவதும் எனக்கு எப்படியோ பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று பெயர் ஏற்பட்டுவிட்டிருந்தது. எனக்குத் திலகர் மீதுதான் சந்தேகம். திலகர் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தார். நான் சுவரொட்டிகள் மூலமான போராட்டத்தை மட்டுமே ஆதரித்தேன். நான் தமிழிலும் அவர் மராத்தியிலுமாகக் காரசாரமான கடிதங்களைப் பரிமாறிக்கொண்டோம். இதனாலெல்லாம் ஏற்பட்ட விளைவு என்னவென்றால் பாரதியின் இடத்தை எனக்குச் சொல்ல யாரும் தயாராக இல்லை. பத்திரிகை வேலைகளை அவர் வீட்டில் இருந்துகொண்டு செய்தார் என்பதால் சூரியோதயத்தின் காரியாலயத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை.

புதுவையில் ஒருவாரகாலம் அலைந்து திரிந்தேன். என் உண்டியலை உடைத்துப் புதுவைக்கு எடுத்துச்சென்ற சில்லறைக் காசுகளில் எலிசபெத் ராணி உருவம் இருந்ததால் அங்கு அது செல்லவில்லை. அந்த நாணயங்களை எடைக்குப் போட்டுச் சிறிது உள்ளூர்ச் சில்லறை தேற்றிச் சில நாட்கள் அதில் சமாளித்தேன். முதல் வாரத்தின் கடைசியில் ஒரு நாள் காலை கண்ணில் பட்ட ஓர் உணவகத்தில் சாப்பிடச் சென்றேன். வாசலில் பாரதி தமது நண்பர்களோடு தீவிர உரையாடலில் ஈடுபட்டிருந்தார். சுதந்திர இந்தியாவில் எங்கெல்லாம் நல்ல காபி கிடைக்கும் என்பது பேச்சின் மையப் பொருளாக இருந்தது. அப்போதுதான் அவரை முதல்முறையாக தாடியில் பார்த்தேன். “தீர்த்தக் கரையினிலே” பாடலை அந்த ஆண்டில் எழுதினார் என்று நினைவு. எனவே அந்தத் தாடிக்குப் பின்னால் ஒரு ‘கண்ணம்மா’ இருப்பாள் என்று தோன்றியது. ஆனால் தாடி மட்டுமே வைத்திருந்தார், மீசை வளர்க்கவில்லை.

என்னைப் பார்த்ததும் உற்சாகமாக “நீ வா!” என்றார் பாரதி. அவர் சொல்லாதிருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன். நல்ல பசி. உணவகத்தில் நுழைகையில் “பிராமணாள் மட்டும்” என்ற பலகையைப் பார்த்துத் தயங்கி நின்றேன். நான் எந்த ஜென்மத்திலும் பிராமணனாக இருந்ததில்லை. குறிப்பாக நடப்பு ஜென்மத்தில். பிடிக்காது என்றில்லை. அது என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லலாம். பாரதி என் வலது புருவம் போன போக்கைப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தார். “பயப்படாதே. சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை போட வருவதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்” என்றார். உள்ளே நிறைய பிரெஞ்சுக்காரர்களும் இருந்தார்கள்.

சில வாய்கள் சோறு உள்ளே சென்ற பின்பு எனக்குப் புத்துயிர் கிடைத்தது. “என்ன சார், தாடியெல்லாம் பலமாக இருக்கிறதே?” என்று விசாரித்தேன். “நன்றாக இருக்கிறதா?” என்றார் பாரதி. மீசை இல்லாமல் தாடி மட்டும் இருந்தால் இஸ்லாமியர் போலிருப்பதாகச் சொன்னேன். பாரதிக்கு முகம் தொங்கிப்போனது. “அப்படியா சொல்கிறாய்?” என்றார். நண்பர்கள் பக்கம் திரும்பி, “இஸ்லாமியன் போலவா இருக்கிறேன்?” என்று கேட்டார். அவர்கள் ஆமோதிக்க, சில நொடிகளுக்குப் பிறகு, “சென்னையிலிருந்து வரும்போது பழைய மீசை ஒன்று கையோடு எடுத்துவந்தேன். ஒருநாள் இப்படி இருந்த பிறகு அதை அணிந்துகொள்கிறேன்” என்று கோட்டுப் பையிலிருந்து ஒரு முறுக்கு மீசையை வெளியே எடுத்துக் காட்டினார். வெள்ளைக்காரனைத் திட்டாமல் பாரதிக்கு சாப்பாடு செரிக்காது என்று அறிந்துகொண்டேன். சாப்பிடும்போது திட்டிக்கொண்டே இருந்தார். இடையிடையே கையில் இருந்த மீசையை கம்பீரமாக முறுக்கிக்கொண்டிருந்தார். பாரதி மீசை இல்லாமல் தாடி மட்டும் வைத்திருந்த அரிய புகைப்படம் ஒன்று இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு காங்கிரஸ் அதை அழித்துவிட்டது. இருந்தாலும் ருஷ்யாவில் க்ரெம்ளின் ஆவணக் காப்பகத்தில் ஒரு பிரதி இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். பாரதிக்கு அந்த உணவகத்தில் அக்கவுன்ட் இருந்ததால் நான் கைக்காசைத் தர நேரவில்லை.

உணவருந்திவிட்டு வெளியே வந்து வேலை பற்றிப் பேச்செடுத்தேன். தமது நண்பர்களைக் காட்டி, “இவர்கள் வேலைக்கு ஆப்பு வைக்க ஆசையா?” என்றார். அவர்கள் அனைவரும் சூரியோதயத்தின் ஊழியர்கள். எல்லோருக்கும் தர்மசங்கடமாக இருந்தது. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக, “சரி, நீ எழுதியது ஏதாவது வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார் பாரதி. நான் எப்போதும் ஆத்திர அவசரத்திற்கு ஆகுமென்று பத்துப் பக்கமாவது மடித்து ஜேபியில் வைத்திருப்பேன். ‘நம்மை வாசிக்கும் புத்தகங்கள்’ என்ற கட்டுரை கைவசம் இருந்தது. கொடுத்தேன். பாரதி அதை அப்போதே முழுமையாகப் படித்தார். பின்பு என்னைப் பார்த்துப் புன்னகைத்து, “பலே!” என்றார். “நாளை நாங்கள் முட்டுக்காடு போகிறோம். நீயும் வாயேன், மேற்கொண்டு பேசுவோம்” என்றவரிடம் தலையாட்டிய என்னிடம் சிறிதும் பணம் இல்லை. இருந்தாலும் ஒப்புக்கொண்டேன். “முட்டுக்காடு வெள்ளையன் பிராந்தியம். மாறுவேஷத்தில் வா. நாங்களும் மாறுவேஷத்தில்தான் வருவோம்” என்று எச்சரித்தார் பாரதி.

மறுநாள் நாங்கள் பேசிக்கொண்டபடி செங்கல்பட்டு ரெட்டைப்பாலம் அருகே பாரதி வேடத்தில் நின்றிருந்தேன். பத்து வயதில் பள்ளி மாறுவேடப் போட்டியில் பாரதியாக வேடம் தரித்த பின்பு அது இரண்டாம் முறை. பாரதியும் அவரது சக ஊழியர்களும் மாற்றுருவத்தில் இருந்ததாலோ என்னவோ எங்கும் காணப்படவில்லை. நான் மீசையை முறுக்கிக்கொண்டுவிட்டுக் கையை இறக்கும்போது கோடுபோட்ட கூம்புத் தொப்பியில் போலீஸ்காரர்கள் வந்து பிடித்துவிட்டார்கள். ஒரு வாரம் அந்தமான் சிறையில் இருந்தேன். அதற்குப் பின்பு கடைசி வரை பாரதியைப் பார்க்கவே முடியவில்லை. பாரதி எழுதிய ‘புதுச்சேரி கச்சேரி’ பாடலில் குறிப்பிடப்படும் டைகர் ஆச்சாரி எனக்கும் பரிச்சயமானவர். அவர் சொன்ன தகவல்: பாரதி என்னை பிரெஞ்சு ஏஜெண்ட் என்று நினைத்திருக்கிறார். அந்தத் தப்பபிப்பிராயத்துடனே 1921இல் மரித்திருக்கிறார். இது நடந்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இப்போதும் நான் எங்கு போனாலும் பிரிட்டிஷ் கைக்கூலி போலீசார் என்னை நிழலாகப் பின்தொடர்கிறார்கள்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar