நோபல் பரிசு: நாடக’மன்றோ’ நடக்குது!

in கட்டுரை

இந்த ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு எனக்குத் தரப்படவில்லை. அல்லது இந்த ஆண்டு எனக்கு பதிலாக ஆலிஸ் மன்றோ என்ற கனேடிய நாட்டவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது எனவும் சொல்லலாம். செய்திகள் ‘ஆலிஸ் மன்றோ என்ற கனடா நாட்டு எழுத்தாளர்’ என்று குறிப்பிடுகின்றன. நோபல் பரிசு பெற்றவர் ‘ஆலிஸ் மன்றோ’ என்று சொன்ன ஒரு நபரா, ‘ஆலிஸ் மன்றோ’ என்று சொன்னதற்காக அவருக்கு அப்பரிசு வழங்கப்பட்டதா, அல்லது பரிசை வென்றவரின் பெயர் ‘ஆலிஸ் மன்றோ’வா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ‘ஆலிஸ் மன்றோ’ என்று சொல்வதாலேயே இலக்கிய நோபல் பரிசு கிடைத்துவிடும் என்று நான் நம்ப விரும்பவில்லை. அப்படி இருந்தால் உலகில் பாதிப்பேர் அந்தப் பரிசைப் பெற்றிருப்பார்கள், என்னையும் சேர்த்து. ஆனால் அதில் எனக்குப் பெருமைப்பட ஒன்றும் இருக்காது.

பொதுவாகச் செய்திகள் வானொலியில் வருவதற்கு முன்பே இணையத்தில் வந்துவிடுகின்றன. அதுவும் கெட்ட செய்திகள் பரவும் வேகம் நாம் அறியாத ஒன்றல்ல. இணையதளங்களில் இச்செய்தியைப் பார்த்து வருத்தம் தெரிவிக்க என்னைத் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழுவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியவும் இங்குள்ள எனது எதிரிகள் விட மாட்டார்கள். பீட்டர் ஹிக்ஸுக்கு இயற்பியல் நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி ஓய்வதற்குள் இலக்கிய உலகத்திற்கு இப்படியோர் இடி விழும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்? நோபல் பரிசை வைப்பதற்காகவே ஒரு அலமாரித் தட்டைச் சுத்தம் செய்துவைத்திருந்தேன். இப்போது பழையபடி அந்தத் தட்டில் மெமன்டோ என்ற பெயரில் வழங்கப்பட்ட தாம்பூலத் தட்டுகளையும் கோல மாவு டப்பாவையும் வைக்க வேண்டியதுதான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நோபல் பரிசு தேர்வுக் குழுவே?

தமிழ்நாட்டில் என் வளர்ச்சிக்கு உள்ள எதிர்ப்பு மற்றும் சதி நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரியும். எனக்கெதிரான சதி, ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்நாட்டில்தான் இந்தத் துரோக வெறியாட்டம் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. மற்ற மாநிலங்களில் ஒரு பயல் என்னைச் சீந்துவதில்லை. யார் யாரெல்லாம் நோபல் பரிசு தேர்வுக் குழுவுடன் 24 மணிநேரத் தொடர்பில் இருந்தார்கள், யாரெல்லாம் மூச்சுக்கு முன்னூறு மின்னஞ்சல் அனுப்பினார்கள், எந்தெந்த நபர்கள் பி.சி.சி.ஐத் தொடர்பு கொண்டு பேசினார்கள், யாருக்கு சச்சின் டெண்டுல்கரின் விளம்பரதாரர்களுடன் தொடர்பு உள்ளது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். என்னை முட்டாள் என்று நோபல் பரிசு தேர்வுக் குழு கருதினால், அதுதான் அப்படிக் கருதப்பட வேண்டிய ஒன்றாகும். நானாவது ஒரு ஆள், என்னோடு போய்விடும். தேர்வுக் குழுவிலோ ஒரு டஜன் முட்டாள்கள் இருப்பார்கள். அப்போது எப்படி வசதி? ஒரு டஜன் என்றால் பன்னிரண்டு பேர். ‘பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலும் போதும்’ மொழிபெயர்த்து மின்னஞ்சலினேனே, நினைவிருக்கிறதா? ஏன் என்று இப்போது புரிகிறதா? வேறு யாராவது செய்வார்களா?

சரி, யாரிந்த ஆலிஸ் மன்றோ? யாரோ எழுத்தாளர். சரி, எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறார்? புத்தக விழாக்களில் எத்தனை பிரதிகள் விற்கும் அல்லது விற்காது? சினிமா வசனம் எழுதியிருக்கிறாரா? பார்த்திருந்தாலே பெரிய விசயம். உலக இலக்கியத்தை, உலக சினிமாவை அறிமுகப்படுத்தியிருக்கிறாரா? மனித வாழ்வின் அற்ப நிகழ்வுகளைக் கொண்டாடியிருக்கிறாரா? குறைந்தபட்சம் இன்னொரு எழுத்தாளரை வம்பிழுத்திருக்கிறாரா? அவதூறு மறுப்பு வெளியிட்டிருக்கிறாரா? அட, அதெல்லாம்கூட வேண்டாம் ஐயா. ‘புயலிலே ஒரு தோணி’ படிச்சிருக்கிறியா? அப்புறம் என்ன மயித்துக்கு நீயெல்லாம் எழுத்தாளன்? எந்த மயிரான் எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு உனக்கு நோபல் ப்ரைஸ் குடுக்குறான்? நான் மிகைப்படுத்துவதாகச் சிலர் எண்ணலாம், ஆனால் நோபல் பரிசு தேர்வுக் குழு மிக மோசமான ஒரு முன்னுதாரணத்தைத் திகழ்வதாகவே இதைக் கூறியாக வேண்டும்.

நோபல் பரிசு எனக்குக் கிடைக்காதது பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. உலக அரசியலுக்கு ஐ.நா. போல், உலக சினிமாவுக்கு பிலிம்பேர் விருது போல், உலக இலக்கியத்திற்கு நோபல் பரிசு தேர்வுக் குழு ஆகிவிடக் கூடாது என்பதே என் கவலை. இந்தக் கவலையில் நியாயம் உள்ளதா இல்லையா என்று தேர்வுக் குழுவினரே சிந்தித்து முடிவுசெய்து அடுத்த ஆண்டு இலக்கிய நோபலை எனக்குத் தந்துகொள்ளட்டும், எனக்கு அது பற்றிக் கவலையில்லை. என் எதிரிகள் தங்கள் மேலிடத் தொடர்புகளைப் பயன்படுத்தி சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு முடிவை அறிவிக்கவைத்து திசைதிருப்ப முயன்றாலும் மதியத்திலிருந்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு வாசகரின் வீடும் சாவு வீடு போல் இருக்கிறது. அதற்கு ஒரு பதில் சொல்லுங்கள்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar