தாராபுரம் சீனிவாசனின் ‘கல் பாறை’

in கட்டுரை

இது ஒரு மதிப்புரையின் தொடக்க வரி என்பதால், கடந்த பதின்சொச்ச ஆண்டுகளில் தமிழ் நாவலுக்குப் பல தலைகள் முளைத்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. இதை மதிப்புரையின் நடுவில் எங்காவது சொன்னாலும் உண்மையாகவே இருக்கும். கு.ப.ரா., தி.ஜா., அசோகமித்திரன், ஜி. நாகராஜன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் போன்ற நாவலாசிரியர்கள் கையாண்ட கதைக் களன்கள் வேறு, நவீன வசதிகள் பெருகி எளிய சிக்கல்களின் இடத்தைச் சிக்கலான சிக்கல்கள் இட்டுநிரப்பிவிட்ட இன்றைய எழுத்துலகில் விரியும் களன்கள் வேறு. ‘பாக்யா’ வார இதழுக்குப் பிந்தைய இந்த எழுத்துச் சூழலில்தான் தாராபுரம் சீனிவாசனின் புதிய நாவலான ‘கல் பாறை’ வெளிவந்திருக்கிறது.

சீனிவாசனின் நாவலில் கண்டுள்ள பல அம்சங்கள் என்னைக் கவர்கின்றன. சீனிவாசன் யாருடைய வம்புக்கும் போகாமல் 250 பக்கங்களுக்குள் புத்தகத்தை அடக்கிவிட்டார். ஒரு புத்தகம் நானூறு பக்கங்களைத் தாண்டிவிட்டால் சிறு இலக்கிய அமைப்புகள்கூட அதற்குப் பரிசு/விருது அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றன. இத்தகைய அங்கீகாரத்தை அளிக்காவிடில் அது இலக்கிய அரசியல் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. அதனால்தான் பக்க எண்ணிக்கை நமக்கு முக்கியமாகிறது. இந்த நூல் இடைநிலை பதிப்பகத்தால் நல்ல தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டு பைண்ட் செய்யப்பட்டுள்ளது. விலையை நிர்ணயித்ததில் தன்னம்பிக்கை தெரிகிறது.

நகரத்தில் பிறந்து நகர வாழ்க்கையின் உளைச்சல்களுக்கு ஆளாகும் இளைஞன் நரேந்திரன், இனி நகரத்தைப் பொறுக்க முடியாது என்று தீர்மானித்து கிராமப்புற வாழ்க்கைக்கு மாறுகிறான். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் படித்தவன் ஒரு மாந்தோப்பில் கடைநிலைப் பராமரிப்பு வேலையாளனாகச் சேர்கிறான். கிராமப்புற வாழ்விற்கே உரிய இன்னல்கள் தமது கோர முகத்தைக் காட்டும்போது அவன் தனக்குச் சம்பளம் கொடுக்கும் முதலாளியைத் தவிர மனிதர்களை முழுவதுமாகத் தவிர்த்து ஹென்றி டேவிட் தோரோவைப் போல் மரங்களுடன் ஊடாடத் தொடங்குகிறான். மரங்களுக்கிடையே ஒரு மரமாகவே ஆகிவிடுகிறான் நரேந்திரன். பின்னர் அவனுக்கு கிராமத்துப் பெண் சுமதியுடன் பழக்கம் ஏற்படுகிறது. சுமதியை அவன் நேசித்தாலும் சீர்கெட்ட சமகால வாழ்க்கைக்குத் திரும்ப அவன் விரும்பவில்லை. அவளுடன் உடலுறவு கொள்வதில் பிரச்சினை இல்லையே தவிர இயல்பு வாழ்க்கைக்கு அவனை இழுக்கும் எந்த பந்தத்திலும் தான் ஈடுபட முடியாது என்று அவளிடம் சொல்கிறான் நரேந்திரன். சுமதி மனமுடைந்து அந்தத் தோப்பிலேயே பெரியதான மாமரம் ஒன்றில் ஏறி உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாள். சுமதி தற்கொலை செய்துகொண்டதாக அவளது பெற்றோர் நம்ப மறுத்து நரேந்திரன்தான் அவளைக் கொன்றதாகப் புகார் செய்கிறார்கள். சுமதியின் சாவுக்குக் காரணமான குற்ற உணர்வில் எதிர்ப்பு தெரிவிக்காமல் சரணடையும் நரேந்திரன், பின்னர் மனம் மாறி சிறையிலிருந்து தப்பி வெளிநாடு செல்கிறான். தமிழகக் காவல் துறையும் அமெரிக்க எஃப்.பி.ஐ. காவல் துறையும் இணைந்து நரேந்திரனைத் தேடுவது திரில்லருக்குரிய விறுவிறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையிடமிருந்து தப்பிக்க நரேந்திரன் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடுகிறான். மந்திரவாதி, அவனை மன்னராட்சி, டிராகன்கள், ஆயுதம் ஏந்திய அழகிகள் என்று இருக்கும் ஓர் இணைப் பிரபஞ்சத்தில் ஒளித்துவைக்கிறான். ஆனால் அதற்கு நரேந்திரன் கொடுக்கும் விலை, நம்மை திடுக்கிட வைக்கிறது: மாதம் ரூ. 10,000. தான் நம்பிய அந்த மந்திரவாதி, இணைப் பிரபஞ்சத்தில் கொடுங்கோல் ஆட்சி புரியும் சர்வாதிகாரி என்றும், வேலைவாய்ப்பு ஆசை காட்டித் தன்னைப் போன்றவர்களை அடிமையாக்குபவன் என்றும் நரேந்திரன் உணர்கிறான். இணைப் பிரபஞ்சத்தை மந்திரவாதியிடமிருந்து விடுவிக்கும் பொறுப்பு நரேந்திரன் தோளில் விழுகிறது. இதில் அவனுக்கு ஒரு மர்மப் பெண் உதவுகிறாள். அவளிடம் ஈர்க்கப்படும் நரேந்திரன், அந்தப் பெண்தான் தன்னுடைய பிறந்த பிரபஞ்சத்தில் சுமதியாக இருந்தாள் என்று புரிந்துகொள்கிறான். இருவரும் இன்னும் சிலரும் இணைந்து மந்திரவாதியைக் கொன்று அந்தப் பிரபஞ்சத்தை மீட்கிறார்கள். அதை ஆள வேண்டும் என்று பிரஜைகள் கெஞ்சினாலும் நரேந்திரன் தன்னுடைய இடம் சென்னை மத்திய சிறைச்சாலைதான் என்று பேசி நாம் வாழும் பிரபஞ்சத்திற்குத் திரும்பி வருகிறான். இங்கே அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை என்பதோடு நாவல் முடிகிறது.

நேர்த்தியாக வடிக்கப்பட்ட நாவலிது. புதிய நாவல் என்ற அடைமொழிக்கேற்பப் புதிய கதை மற்றும் கதாபாத்திரங்களை இது கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களை வாசகர்கள் குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதற்காக ஆசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பெயரை வைத்திருக்கிறார். தவறிப்போய்க்கூட எந்தக் கதாபாத்திரத்திற்கும் தன்னுடைய பெயரை அவர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம வயதுள்ள கதாபாத்திரங்களைக்கூட வெவ்வேறு மாதங்களில் பிறந்தவர்கள் என்று உரையாடல் துண்டுகளால் நுட்பமாகப் பிரித்துக்காட்டுகிறார் ஆசிரியர் (“ஜூலை பதிமூணுக்குப் பொறந்தவனே”). ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விஷயத்திற்குக் குறியீடாக இயங்குகிறது. நரேந்திரனாக வருபவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். தோப்பு முதலாளியாக வரும் காளிமுத்து, தாளில் தோன்றும்போதெல்லாம் பண்ணையார்த்தனம் இன்னும் மறைந்துவிடவில்லை என உணர்த்துகிறார். சுமதி, நகரத்திற்குப் போய் ‘நல்ல வாழ்க்கை’ வாழ ஆசைப்படும் சராசரி கிராமத்துப் பெண்ணை நமக்குக் காட்டுகிறாள். மாந்தோப்பில் நரேந்திரனுக்கு நண்பர்களாகும் கமல், எம்.ஜி.ஆர்., ராஜேந்திரன், சகுந்தலா, கணேசன், வைஜெயந்திமாலா ஆகிய மரங்கள், மனித முயற்சியால் பாதிக்கப்படும் தாவர ஜீவிதத்தின் காற்றிலசையும் குரல்கள்.

இருநூற்று சொச்சம் பக்கங்களில் ஓர் உலகையே படைத்துவிடுகிறார் சீனிவாசன். இது தமிழ்ப் புனைவுக்குப் புதிது. அந்த அளவில் இது முக்கியமான நாவல். ஆனால் இதில் குறைகளே இல்லையா? உண்டு. இந்த நாவல் ஒரு குப்பையாகும். எவ்வளவு மோசமான குப்பை என்றால் சீனிவாசன் ஆண் இனத்திற்கே அவமானத்தைத் தேடித் தந்துவிட்டார் என்று சொல்லக்கூடிய அளவு குப்பை. சீனிவாசனின் உரைநடை அலங்காரம் இல்லாதது. ஆனால் இந்த எளிமை, ஆசிரியருடைய மொழியறிவின் போதாமையால் நிகழ்வது என்பதற்கான தடயங்கள் நாவல் முழுவதும் உள்ளன. கதாபாத்திரங்கள் தட்டையானவை, தர்க்கத்தின் இலக்கணங்களை மீறியவை. உதாரணமாக, பட்டமரமாக வரும் எல். விஜயலட்சுமி, நரேந்திரனுக்குத் தாய் போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் எந்தத் தோப்பில் பட்டமரத்தை அப்புறப்படுத்தாமல் விட்டுவைப்பார்கள்? இது போன்ற பிழைகள் நிறைய உள்ளன. இது ஆசிரியர் தமது வாசகர்களை முட்டாளாகக் கருதுவதன் விளைவா, அல்லது ஆசிரியரே முட்டாளா என்பதை விமர்சகர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறேன். தலையணை எழுத்தாளர்களுக்குப் போட்டியாக எழுதக் கூடாது என்று நாவலைச் சிறிதாக எழுதுவதில் ஆசிரியர் காட்டியுள்ள கவனம், விவாதத்துக்குரிய நரேந்திரனின் அரசியலில் செலுத்தப்பட்டிருக்கலாம். பொதுவாக ஒரு கதையின் மையப் பாத்திரம், ஆசிரியர் போன்றது. அதற்குப் பொறுப்பு இருக்க வேண்டும். நரேந்திரன் இந்தப் பொறுப்பு இல்லாமல் மரமாகித் துறவு நிலையை அடைகிறான். கிராமத்தில் காணும் பிரச்சினைகளை அவன் தீர்க்கவில்லை. தப்பித்தலே இங்கு துறவு நிலையாக முன்வைக்கப்படுகிறது. இந்த பூர்ஷ்வா தப்பிதலியம்தான் ‘கல் பாறை’யில் எனக்கு மிகப் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது. மற்றபடி இது தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாகும்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar