கடிதம்: அடித்தல், திருத்தல்

in கடிதம்

எழுத்தாளர் பேயோன் அவர்களுக்கு

நான் உங்கள் தீவிர வாசக அடிமை. எனக்குத் திருமணமாகி 14, 8 ஆகிய அகவைகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதுநாள்வரை மழலையாக இருந்த இரண்டாவது குழந்தை இப்போதெல்லாம் பெரிய இம்சையாக மாறிக்கொண்டிருக்கிறான். அவன் முன்கோபத்தில் கத்தும்போது, வரம்பு மீறிப் பேசும்போது நாலு அறை விட்டு அடக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் உங்களைக் கலந்தாலோசிக்காமல் அதைச் செய்வது குறித்துத் தயக்கமாக உள்ளது. குழந்தைகளை அடித்து வளர்ப்பது சரியா?

இப்படிக்கு
ஸ்ரீனி விக்டர்
தாம்பரம் (தென்மேற்கு)

அன்பின் ஸ்ரீனி விக்டர்,

இந்தக் கேள்வியை தினமும் நான்கு பேர் என்னைக் கேட்கிறார்கள். நான் அவர்களைக் கடிதமாக எழுதி அனுப்பும்படி சொல்லிவிடுகிறேன்.

உண்மையில் உங்கள் கேள்வி என்னை அதிர்ச்சியில் தள்ளுகிறது. முதல் குழந்தையை எப்படி வளர்த்தீர்கள்? உங்கள் மூத்த மகன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தால் குறிப்பிட்டிருப்பீர்கள் என்பதால் அவன் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை எனப் புரிந்துகொள்கிறேன். அவன் குற்றங்களில் ஈடுபடாததை வைத்து நீங்கள் அவனை அடித்துத்தான் வளர்த்தீர்கள் என்பதும் புரிகிறது. இரண்டாம் மகனை அடிக்க மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? அவனும் குழந்தைதானே?

அடித்து வளர்ப்பது சரியா என்று கேட்கிறீர்கள். குழந்தை வளர்ப்பு அன்போடு செய்யப்படும் கடமையாகும். அன்பு என வரும்போது சரி தவறு பற்றி யோசிப்பது நடைமுறையாகாது. எல்லா குழந்தைகளும் சமமாகப் பிறப்பதில்லையே. சில குழந்தைகள் ஒழுங்காக வளர்கின்றன. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும்போதே தறுதலையாக இருக்கின்றன. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா, அடியாத மாடு படியுமா என்றெல்லாம் நமது முன்னோர்கள் கேட்டிருக்கிறார்கள். வளையாது, படியாது என்பதே நமது பதிலாக இருக்க வேண்டும்.

பெற்றோர் என்ற மிகப்பெரிய வாக்கு வங்கிக்காகப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்துதல் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள சமகாலச் சூழலில் அந்தப் பணி பெற்றோரின் தலையில் வந்து விழுந்திருக்கிறது. எனவே பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் சேர்த்துத் தங்கள் குழந்தைகளை நையப் புடைக்க வேண்டுமே தவிர சரியா தவறா என்று விநாடி வினா ஜல்லி அடிக்கக் கூடாது. அத்தகைய செய்கை எதிர்காலத்தில் மேலும் அதிக அரசியல்வாதிகளுக்கே வழிவகுக்கும்.

அன்புடன்
பேயோன்

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar