அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு நிரல்

in புனைவு

இனிமேல் வாசகர்கள் எனது அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு நிரலான “ThePayon”ஐத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். ஓர் இலவச சேவையைப் பயன்படுத்தி இதனை உருவாக்கியிருப்பதனால் சகித்துக்கொள்ள விளம்பரங்கள் இருக்கின்றன. அடுத்த ஆண்டில் விளம்பரங்களிலிருந்து விடுபடத் திட்டமுள்ளது.

முதலில் ஐஓஎஸ் இயக்கதளத்திற்காகவே இந்நிரலை உருவாக்க விரும்பினாலும் கொடுப்பினைப் பற்றாக்குறையால் அது நிறைவேறவில்லை. ThePayonஇல் எனது துண்டிலக்கியங்களையும் சுட்டிகளையும் பார்க்கலாம். தரவிறக்க எண்ணிக்கையைப் பொறுத்து அறிவிப்புகள் மற்றும் புதிய படைப்புகளை முதலில் இதில் வெளியிட உத்தேசித்திருக்கிறேன். இதன் விளைவாக ட்விட்டரில் நபர்களுக்கு பதிலளிப்பதும் குறையக்கூடும்.

இந்நிரல் கூகுள் பிளேயில் காணப்படாது. கீழ்க்காணும் வலை முகவரியினின்றுதான் இதனைத் தரவிறக்க வேண்டும். நிரலின் எடை சுமார் 8 எம்.பி. இதை நிறுவும் முறையை இங்கே காணலாம். ஆண்ட்ராய்டு பயனர் அல்லாதோர் அதன் HTML5 பக்கத்தை புக்மார்க் செய்துகொள்ளலாம்.

தரவிறக்க

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே. தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளரின் இந்த ஆண்ட்ராய்டு நிரலைத் தரவிறக்கிப் பயன்படுத்த விலை என்ன?

ப. இது இலவச மென்பொருளாகும். ஆனால் விளம்பரங்களுடன் கூடியது. நிரலின் உள்ளடக்கம் இணையத்தில் இருப்பதால் இணையப் பயன்பாட்டுக் கட்டணத்தை நீங்கள் ஏற்பீர்கள்.

கே. சமகாலத் தமிழ் இலக்கிய மேதை ஒருவரின் நிரலாகிய ThePayonஐ கூகுள் பிளேயிலிருந்து அல்லாமல் வேறு எங்கிருந்தோ தரவிறக்குவது பாதுகாப்பானதா?

ப. ஆமாம், அப்படித்தான். ஆண்ட்ராய்டு நிரல்களைத் தரவிறக்க கூகுள் பிளே தவிர அமேஸான், சோனி செலக்ட் போன்ற பல சந்தைக்கடைகள் உள்ளன. Infinite Monkeys நம்பகமான சந்தைக்கடை. SoundCloud, Akamai போன்ற பெரிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்திருக்கிறது. Mashable, Wired போன்ற வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் அது பற்றி எழுதப்பட்டுள்ளது. முன்பே இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல் அந்த வலைத்தளத்தில் ஆண்ட்ராய்டு நிரலை உருவாக்க நான் ஒன்றும் மடையன் அல்ல. எப்போதுமே அடுத்தவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கக் கூடாது.

கே. தமிழ் இலக்கியத்தின் போக்கை அடியோடு மாற்றியவரான உங்கள் ஆண்ட்ராய்டு நிரலில் வரும் விளம்பரங்களில் சம்பாதிக்கிறீர்களா?

ப. இந்த நிரலை உருவாக்கும் சேவையை இலவசமாக அளிக்கும் நிறுவனம்தான் இந்த விளம்பரங்களால் பணம் ஈட்டுகிறதே தவிர நான் அல்ல.

எச்சரிக்கை: இந்த நிரலில் வெளிவரும் விளம்பரங்களின் உள்ளடக்கத்திற்கும் அவற்றில் உள்ள சுட்டிகளுக்கும் நான் பொறுப்பல்ல. விளம்பரங்களை க்ளிக் செய்வது, தரவிறக்குவது ஆகியவற்றை உங்கள் சொந்த அபாயத்தில் செய்ய வேண்டும்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar