தாழ்மையான கனவு

in கட்டுரை

நானும் மனைவி-மகனும் வெவ்வேறு வெளியூர்களுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தோம். நான் போன பின்பு அவர்கள் போவதாகத் திட்டம். உண்மையில் வெளியூர் அவர்களுக்குத்தான். அவர்கள் தலை மறைந்ததும் வீட்டுக்குத் திரும்பி வந்து நிம்மதியாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான கனவு.

நான்கு நாட்களுக்குத் தேவையான லக்கேஜுடன் கோயம்பேடு போனேன். பயணத்திற்கு அரை மணிநேரம், காத்திருப்பில் அரை மணிநேரம் கழிந்தன. தஞ்சை செல்லும் பேருந்து ஆரம்பித்து ஊர்ந்து சைதாப்பேட்டையை அடைய சுமார் ஒரு மணிநேரம் ஆனது. அங்கேயே இறங்கிக்கொண்டேன். ஒரு ஆட்டோ பிடித்து மெதுவாக ஓட்டச் சொல்லி வீடு திரும்பினேன். குறிப்பாக எந்தப் பாட்டும் இல்லாமல் ஹம்மிங் செய்தபடி பூட்டுக்கருகே சாவியைக் கொண்டுபோனால் இதயம் எகிறியது. வீடு திறந்திருந்தது! வீடு பேறுகள் இன்னும் கிளம்பித் தொலைக்கவில்லை.

மூளை மின்னலாய் வேலைசெய்ய சட்டென வாட்ச்சைக் கழற்றி பேண்ட் பைக்குள் நழுவ விட்டேன். கதவு திறந்து மனைவி முகம் காட்டினார். “என்னாச்சு?” என்றார் அதிர்ச்சியுடன். “வாட்ச்சை மறந்திட்டேன். நீ கிளம்பலியா?” என்றேன். “உங்க மவன் குளிச்சிட்டிருக்கான். வந்தப்புறம் சாப்ட்டு கெளம்பிருவோம். வாட்ச்சுக்காகவா இவ்ளோ தூரம் வந்தீங்க?” என்றார். “இது என்னோட லக்கி வாட்ச் ஆச்சே!” என் அறைக்குப் போய் வாட்ச்சை வெளியே எடுத்து அவர் இரண்டு கண்ணாலும் பார்க்கும்படியாக அதைக் கையில் கட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.

அடுத்து தாம்பரத்திற்குப் பேருந்து பிடித்தேன். அங்கே கிடைத்த ஒரு லாட்ஜில் ஓரிரவுக்கு மட்டும் ரூம் எடுத்தேன். ரெய்டு எல்லாம் நடந்தது. நான் பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருந்தேன். ஓர் இரவு வீணானால் பரவாயில்லை. வீட்டினர் திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.

(முதலில் எனது ஆண்ட்ராய்டு நிரலில் வெளிவந்தது)

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar