தில்லி பாபு

in சிறுகதை, புனைவு

புதுதில்லியின் கன்னாட் பிளேசிலிருந்து இரு ஃபர்லாங்குகள் தொலைவில் வேதகிரீஷ்வர் கோவிலின் பின்வாசலுக்கு அருகிலுள்ள ராயல் தியேட்டர்ஸில் (நியூ ராயல் தியேட்டர்ஸுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது; நியூ ராயல் தியேட்டர்ஸ் அக்பர் ரோட்டில் இருக்கிறது; இது நிஜ ராயல் தியேட்டர்ஸின் மோசமான காப்பி; ஆறாம் பத்தியில் கூடுதல் விவரங்கள்) ஷ்யாம் பெனகல் படங்களின் ஒருவாரநீள நினைவுத் திரையிடல் விழா ஒன்றில் கடும் அலுவலகப் பணிகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் இடையிலான அல்லாட்டத்தில் முதல் நாளைத் தவற விட்டு இரண்டாம் நாளுக்கு வந்தபோது சட்டைப்பையில் கையை விட்டு அன்றைய தினத்திற்கான இலவச டிக்கெட்டை எடுத்தால் பேருந்துப் பயணச் சீட்டு, ரூபாய் நோட்டுகள், தொலைபேசி எண்ணெய் எழுதிக்கொண்ட கிழிந்த துண்டுச் சீட்டு என்று டிக்கெட்டைத் தவிர எல்லாம் கையில் சிக்க, மறந்துவிட்டு வந்த தியேட்டர் பாஸை எடுத்துவர வீட்டுக்குப் போய்த் திரும்பி வந்து முதல் படத்தைக் கோட்டைவிட்டு அடுத்த படத்திற்கு வரிசையில் நின்றிருந்தபோதுதான் படேலை முதன்முதலில் பார்த்தேன். அவனிடம் டிக்கெட் இல்லை. யாராவது கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தானும் வரிசையில் நின்றிருந்தான். எனக்கு டிக்கெட் கொடுத்தீர்கள் என்றால் வரிசையில் முன்னே விடுகிறேன் எனப் பின்னாலிருந்த ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பார்த்து மறுப்பு வாங்கிக்கொண்டிருந்தான்.

என்னிடம் எனது அந்நாளைய தில்லி பாணி பஞ்சாபி சல்வார் அணிந்த காதலி பிம்லாவுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த இரண்டு டிக்கெட்டுகள் இருந்தன. அவள் வருபவளாக இருந்தால் எப்போதோ வந்திருப்பாள். வழக்கமாக சொன்ன நேரத்தில் வந்துவிடும் அவள் வருவதற்கு அரை மணிநேரம் தாமதமானால் அதன் பின்பு வர மாட்டாள் என்பதற்கே அதிக உத்தரவாதம். அவள் இன்னும் வராதமைக்குக் காரணம் தெரியவில்லை. தொண்ணூறுகளில் செல்போன் இல்லை. அதுவும் தலைநகரத்திலேயே. ஆனால் இது எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் இதை நினைவுகூர்வது தொண்ணூறுகளில். அந்த சமயத்தில் எனக்குத் தெரியாத ஒரு படேலுக்கு டிக்கெட்டை அள்ளிக்கொடுக்க எனக்கு முதலில் விருப்பமில்லை. படேல் அடிப்படையில் சிறுகதை எழுத்தாளன். அந்தக் கதைகளை வைத்துத் தீவிர சினிமாக்கள் எடுப்பது தன்னுடைய லட்சியம் என்று என்னிடம் அவன் சொன்னபோது காதலிக்கு டிக்கெட் வைத்திருந்த சட்டைப்பையின் பக்கம் கை போய்த் துறுதுறுக்காமல் இல்லை. நான் தீவிர சினிமாவுக்குப் பங்களிக்க அதுதான் ஒரே வழி போல் தெரிந்தது.

கதைக்கு வருவோம். அறுபதுகளின் தில்லியில் சுற்றுலா வழிகாட்டியாக வேலை பார்க்கும் ஒருவனுக்கு ஒரு ஜெர்மானியப் பெண் சுற்றுலாப் பயணியுடன் உறவு ஏற்படுகிறது. அவள் காதலனோ அடிக்க வந்துவிடுகிறான். சிறிய கதைதான். ஆனால் படேலின் மனதில் உருப்பெற்றிருந்தப் படம் இந்திய, ஜெர்மானிய கலாச்சாரங்களிடையேயான முரணியக்கங்களை உருவகப்படுத்தும் குறியீடுகளாகக் கதையின் மையப் பாத்திரங்களை உருட்டியது. நான் அவன் வாய் வழியாக அறுபதுகளின் தில்லிக்கே பயணப்பட்டுப்போனேன். இது படமாக வர வேண்டிய கதை என்று நினைத்துக்கொண்டேன். வரிசையில் அடுத்து அவன் முறை. நான் பேசாமல் காதலியின் டிக்கெட்டை எடுத்து அவன் கையில் மௌனமாக வைத்தேன். எப்படியும் நான் அதைக் காசு கொடுத்து வாங்கவில்லை. இலவசமாக வந்தது இலவசமாகவே மாற்று இந்திய சினிமாவிற்கு என்னுடைய எளியதொரு காணிக்கையாகக் கைவிட்டுப் போகட்டும் என்று அவனுக்குத் தந்துவிட்டேன்.

எனக்கு பிம்லா காதலியே தவிர அவளுக்கு நான் யார் என அப்போது வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெண்கள் விஷயத்தில் எனக்குத் தொண்ணூறுகள் முழுவதுமே மர்மமாகத்தான் இருந்தது. 1994ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாள் என் காதலியிடம் என் இதயக் கிடக்கையைச் சொன்னேன். அவளுக்கு சிரிப்புக்கூட வரவில்லை. அவளுடனான உறவை நட்பாகத் தொடருமளவு எனக்கு மனநேர்மை கிடையாது. அவளுக்கும் நான் வேண்டாம் என்று தோன்றிவிட்டதோ என்னவோ, நான் காதலைச் சொன்ன பின்பு 1998 நவம்பர் வரை அவளைப் பார்க்கவில்லை. தில்லி ஒரு விசாலமான ஊர். ஒருவரை ஒருமுறை பார்த்துவிட்டால் பிறகு அவரை வாழ்நாள் காலம் வரை மீண்டும் தற்செயலாகக்கூட சந்திக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.

படேலை மட்டும் எப்போதாவது மாற்று சினிமா திரையிடல்களில் சந்தித்தேன். இரண்டாம் முறையாக அவனைப் பார்த்தபோது சுற்றுலா வழிகாட்டி கதையை என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டதை மறந்து மீண்டும் சொல்லத் தொடங்கினான். கதையில் பல மாற்றங்கள் செய்து வழிகாட்டி கல்லூரி மாணவன் ஆகியிருந்தான். ஜெர்மன்காரி மலையாளினி ஆனாள். தில்லி இப்போது ஹரியானாவில் ஒரு கிராமம். இருவரும் காதலித்தார்கள். பெற்றோர் சம்மதத்தை மீறி எப்படி இருவரும் பிரிகிறார்கள் என்பது கதை. அவனோ என்னிடம் தயங்கித் தயங்கிப் பேசிப் பணம் எதிர்பார்த்தது போல் தோன்றியது. அவனைத் தவிர்க்கலாம் போல் இருந்தது.

ராயல் தியேட்டர்ஸின் பெயரை ஓர் உருப்படாத திரையரங்குக்கு சூட்டியபோது அது விஷயமாக இரு உரிமையாளர்களுக்கும் சட்டப் பிரச்சினை ஏற்பட்டு நியூ ராயல் தியேட்டர்ஸ் உரிமையாளர் ராயல் தியேட்டர்ஸை நீதிமன்றத்திற்கு வெளியே பணம் கொடுத்து சரிக்கட்டியது தனிக்கதை.

இந்த இடத்தில் படேலுடன் இன்னொரு சந்திப்பு வைத்து அதில் அவனை பிம்லாவுடன் சேர்த்துப் பார்த்ததாகச் சொல்லி இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாக வர்ணித்துக் காதலில் கசப்பான அனுபவங்களுக்கு உள்ளாகும் அறிவுஜீவியாக என்னைத் தத்துவார்த்த தொனியில் ஸ்தாபித்துக்கொண்டு முடித்துக்கொள்வது தேய்வழக்கு மரபு. ஆனால் தேய்வழக்குகளில் வருவது போலா நடக்கிறது வாழ்க்கை? 1998 நவம்பர் பிம்லாவைப் பார்த்தது செய்தித்தாளில் ஓர் இரங்கல் குறிப்புப் புகைப்படத்தில். பிறந்த தேதி, இறந்த தேதி போட்டு “இன் ரிமெம்பரன்ஸ்” என்று எழுதியிருந்தார்கள். அவள் இறந்தது நவம்பர் 1994. எப்படிச் செத்தாள் என்று பழைய நண்பர்களை விசாரித்து அறிய ஆர்வம் இல்லை. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவள் செத்தபோது, அவள் மரணம் வலியற்றதாக இருந்திருக்கட்டும் என்று சர்வமங்கள சந்தோஷிமாதாவைப் பிரார்த்தித்துக்கொண்டேன்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar