வாசகர் கடிதம் எழுதும் கலை

in கட்டுரை

வாசகர் கடிதம்… சிறுகதையும் கட்டுரையும் தொலைபேசி அழைப்பும் கலந்த இந்த இலக்கிய வடிவம் கடந்த நாற்பதாண்டுகளாகக் காலங்காலமாய் படைப்பாளிகளை ஈர்த்துவந்திருக்கிறது. ஏனெனில் புனைவிலும் கட்டுரையிலும் சொல்லத் தெரியாத விசயங்களை வாசகர் கடிதத்தில் எழுதலாம். ‘தன்னைப் பற்றியே பேசுகிறான்’ என்ற வசைக்கு இடமளிக்காமல் சுயபுராணம் பாட இதில் வசதியுண்டு. அது போலவே, இன்னொருவர் பெயரில் நம்மை நாமே வகைதொகையின்றிப் புகழ்ந்துகொண்டு மகிழலாம். இது கடல் போன்ற ஒரு துறையாகும்.

பல எழுத்தாளர்கள் சக எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எழுதும் கடிதங்களில் அரிய சொந்தக் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அக்கடிதங்களைத் தொகுத்து ‘இன்னார் கடிதங்கள்’ என்று புத்தகமாய்ப் போட்டுக்கொள்கிறார்கள். பிரசுரம்தான் இக்கடிதங்கள் எழுதப்படுவதன் நோக்கம். பல எழுத்தாளுமைகள், “எனக்குக் கடிதம் எழுது, நான் பதில் போட வேண்டும்” என்று கேட்டுப் பெறுகிறார்கள். இன்று இணைய எழுத்துக்கும் கடிதங்கள் முக்கியமான ஒன்றுகளாகிவிட்டன. படைப்பூக்கத்தின் இடைவேளைகளை இட்டுநிரப்புபவை கடிதங்களே. ஆனால் எழுத்து வாழ்க்கை என்பது ரோஜாக்களின் படுக்கை அல்லவே. கடிதங்களே வராத நிலையில் ஓர் எழுத்தாளனின் கதி என்ன? கடிதங்களுக்கு பதில் எழுதாமல் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலைக்கு அவன் ஆளாக வேண்டுமா?

இங்கே ஒரு விசயம்: படைப்பாளிகளுக்கு வாசகர் கடிதம் எழுதிக்கொண்டிருந்த தலைமுறையினரில் பலர் இன்று முதியோர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டார்கள். மற்றும் பலர் இறந்துவிட்டார்கள். எஞ்சியுள்ள மிகச் சிலர், புரியும்படி எழுதித் தொலைப்பதில்லை. இன்னொரு பக்கம் எழுத்தாளர்களை அணுகுவது இன்று மின்னஞ்சலால், சமூக வலைத்தளங்களால் எளிதாகியுள்ள அதே சமயத்தில் வாசகர் கடிதங்களின் தரம் குறைந்துவருகிறது. கடிதங்களும் மின்னஞ்சல்களுமாய் எனக்கு தினமும் சுமார் ஐம்பது வருகின்றன. இவற்றில் ஒன்றுகூடப் பிரசுரிக்கத்தக்கவை அல்ல. இதுதான் நிலைமை. இதனால்தான் இன்று பல எழுத்தாளர்கள் வாசகர்கள் அனுப்ப வேண்டிய கடிதங்களையும் தாமே எழுதுகின்றனர். சொல்லப்போனால், எழுத்தாளன் போன்ற முதிர்ச்சியான, பண்பட்ட, சாமர்த்தியமான, நகைச்சுவை உணர்வு மிக்க, கண்ணியமான, தன்னலமற்ற, குழந்தைமை கொண்ட, நியாயமான, கழிவிரக்கம் செறிந்த, அறிவுக் கடலான ஓர் ஆளுமைக்குக் கடிதம் எழுதும் தகுதி இன்னொரு எழுத்தாளனுக்கே இருக்கக்கூடும். ஆனால் எந்த எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்திற்காக உழைப்பான்? அதனால்தான் நம் வாசகர் கடிதங்களை நாமே எழுத வேண்டியுள்ளது. கேள்வி-பதில் பகுதிக்குக் கேள்விகள் எழுதுதல் என்கிற இதழியல் மரபு முன்னமே இதற்கு அடிகோலியுள்ளமை கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

வாசகர் கடிதம் எழுதுதல் வெறும் சுயசொறிதலாக எடை குறைத்துப் பேசப்படக் கூடாது. எப்போதும் ஒரே வாசகரே கடிதம் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்பதால் ஒவ்வொரு கடிதத்தையும் ஒவ்வொரு வாசகர் எழுதுவதாகக் காட்ட வேண்டும். ஒவ்வொரு வாசகருக்கும் தனித்தனி எழுத்துநடையைக் கையாள வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எழுத்துப் பிழைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொரு விதமான கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு வாசகருக்கும் பெரும்பாலும் வெவ்வேறு பெயரும் ஊரும் இருக்க வேண்டும். ஒரு ஊரில் எல்லோருக்கும் ஒரே பெயர் இருக்க முடியுமா? கடிதங்களில் யதார்த்தச் சித்தரிப்பு, எழுத்தாளனின் படைப்பூக்கத்திற்கு மிகத் திருப்திகரமானதொரு சவாலாகும்.

எழுத்தாளர்கள் தமக்கு வாசகர் கடிதம் எழுதிக்கொள்வதில் ஓர் அணுகுமுறை வைத்திருப்பார்கள். நான் எனது உத்தியை விளக்குகிறேன். இதற்குத் தேவையான கருவிகள்:

நேரம் (மிக அவசியம்)
டெலிபோன் டைரக்டரி (ஓரளவு அவசியம்)
தமிழக வரைபடம்
சொந்தக் கருத்துகள் (இருந்தால் பயன்படும் சாத்தியங்கள் அநேகம்)

டெலிபோன் டைரக்டரியை ஏன் சொல்கிறேன் என்றால் வாசகருக்குப் பெயர் வைப்பது அல்லது அவர் பெயரை ஊகிப்பது நேரத்தைக் கபளீகரம் செய்யும். பெயர்களை யோசிப்பதில் நாமறியாது நேரம் கரையும்போது நாம் எழுத நினைத்திருக்கும் விசயங்கள் மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய் மனதின் ஆழ்வெளிகளில் ஒரேடியாகத் தொழுதுண்டு பின் சென்றுவிடும் அபாயம் உள்ளது. அதே சமயத்தில் சட்டென மனத்தில் உதிக்கும் பெயர்களை வைத்தால் படிப்பவர்கள் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறது. டைரக்டரியில் உள்ள பெயர்களைப் பயன்படுத்தும்போது பெயர்களுக்கு ஓர் உண்மைத்தன்மை கிடைக்கிறது. ஊர் பெயரைத் தேர்ந்தெடுக்கத் தமிழக வரைபடம் போதும்.

அடுத்து இந்த ‘சொந்தக் கருத்து’ என்கின்ற கருத்தாக்கம். சொந்தக் கருத்து என்பது கசப்பான சவாலாக இருக்கத் தேவையில்லை. பலர் சொந்தக் கருத்தையும் தனித்துவமான கருத்தையும் குழப்பிக்கொண்டு சஞ்சலம் அடைகிறார்கள். இந்த அநாவசியத் தலைவலி தேவையே இல்லை. நாம் என்ன சொல்கிறோமோ அதுதான் சொந்தக் கருத்து. முக்கியமான விசயம், அது நம் பெயரில், நம் வார்த்தைகளில் இருக்க வேண்டும். நக்கல், நையாண்டி, சிற்றிதழ் பதங்கள், வெகுஜன கலாச்சார சொல்லாடல்கள் போன்ற நகாசுகளை இடைச்செருகினால் வாசகர்களைச் சுண்டியிழுக்கும். இது நிஜமான வாசகர் கடிதங்கள் வரச் செய்துவிடும் என்பதே இதிலுள்ள ஒரே பிரச்சினை.

இப்பயனுள்ள கையேடு ஒரு கோடிகாட்டல் மட்டுமே. நீ என்ன சொல்வது, நான் என்ன செய்வது என்று உங்களுக்குப் பட்டால் நீங்கள் வேறு உத்திகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar