கிறிஸ்துமஸ் காட்சிகள்

in கட்டுரை

“இன்று கிறிஸ்துமஸ்!” என்ற செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தி அலறலில் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தபோது காலை மணி ஆறு. வழக்கமாக மகன் பள்ளிக்குக் கிளம்புவதை வேடிக்கை பார்க்க ஐந்தரை மணிக்கே எழுந்துவிடுவேன். இன்று விடுமுறை நாளுக்காகத் தூக்கம் அதிகம்.

என் தெருவிற்கு இருதெருக்கள் தள்ளி இருக்கும் புனித ராபர்ட் தேவாலயத்தின் வாசலில் புத்தாடைக் கோலத்தில் நிறைய கிறிஸ்தவர்கள் காணப்பட்டனர். சிறுபான்மையினராக இருப்பதில் வெட்கமோ என்னவோ, சாதாரண நாட்களில் இவர்களைப் பார்க்கவே முடிவதில்லை. ஜான்களும் மைக்கேல்களும் குழந்தைகளுக்கு அன்று விடுமுறை என்பதை மீறி உற்சாகமாகத் தெரிந்தனர். ஊரில் முக்கால்வாசிப்பேர் பல்கூடத் துலக்கியிராத அந்த நேரத்திலும் சிலர் கோட்டு-சூட்டு அணிந்து முழு மாப்பிள்ளை அழைப்பு ஆடையில் வந்திருந்தார்கள். பணக்காரர்களுக்காக ஓர் இலவசத் திருமணம் நடக்கப்போவது போலிருந்தது. இதற்கு முரண்நகையாய்ப் பெண்கள் நெற்றியில் குங்குமம் இல்லாமல் அமங்கலமாக அலைந்துகொண்டிருந்தார்கள்.

தேவாலயத்தின் உச்சியில் ஒரு பெரிய நட்சத்திரத்தைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். பூமியில் இருப்பவர்களுக்கு நட்சத்திரம் இவ்வளவு பெரிதாகத் தெரியாது என்ற பகுத்தறிவுச் சிந்தனைக்கெல்லாம் இடமில்லை. அத்தனை ஒளியான ஒரு பொருள் சுற்றுப்புறத்தை சுட்டுப் பொசுக்காமல் இருக்கிறதே என்ற ஆறுதல்தான் மிச்சம். மத நிகழ்வு என்பதால் இரண்டு போலீஸ் ஜீப்கள் நின்றிருந்தன. சில இந்து இன்ஸ்பெக்டர்கள் அவற்றின் மேல் ஒய்யாரமாகச் சாய்ந்து விட்டேற்றியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு வந்தால் பரபரப்பாவார்கள் போலும்.

காலை டிபனுக்கு இயேசுவின் ரத்தமும் சதையும் என்றால் பத்து மணியளவில் பிரியாணியை எதிர்பார்க்கலாம். சிறுவயதில் எங்கள் வீட்டருகே இருந்த புனித கிறிஸ்து தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்டது சுவையான அனுபவம். இப்போதுகூட உள்ளூர் எம்.எல்.ஏ.வைத் தெரியும் என்று சொல்லி இந்த தேவாலயத்தினுள் புகுந்து பிரியாணி சாப்பிடலாம் போல் தோன்றியது. அதிர்ஷ்டவசமாக எனது நண்பர் சாய் ஆபிரகாம் குடும்பத்தோடு கண்ணில் பட்டார். “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! சர்ச்சில் எனக்கு பிரியாணி கொடுப்பார்களா?” என்று பேச்சு வாக்கில் நைச்சியமாகக் கேட்டேன். இந்த முறை ஃப்ரைடு ரைஸ்தானாம். நண்பருடன் பேச்சுப் பேசியபடி தேவாலயத்தினுள் இயல்பாக நுழைவது போல் நுழைந்தேன். உள்ளேயும் நல்ல கூட்டம். பாதிரியார் ‘கெட்டப்’பில் இருந்த ஒருவர் எதிர்ப்பட்டு நண்பரைப் பார்த்துப் புன்னகைத்தார். ஆனாலும் ஃப்ரைடு ரைஸ் என்ற பின்பு எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அடுத்த ஆண்டு புலவ். அதற்குப் பிறகுதான் மீண்டும் பிரியாணி. அதாவது 2015 வரை பிரியாணி கிடையாது.

நண்பர் ஜஸ்டின் ஜெயக்குமாரிடம் விடைபெற்று வெளிவந்து யோசனையாக நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் வந்து, “இதுல சில வசனங்கள் இருக்கு சகோ” என்று பிரசுரம் ஒன்றை விநியோகித்துச் சென்றார். நானும் வசனம் எழுதுபவன்தான். உதவும் என்று வாங்கிக்கொண்டேன். பிரித்துப் பார்த்தால் வெறும் கதைதான் இருந்தது, வசனம் இல்லை. அருகில் இரு சிறுவர்கள் அதே துண்டுப் பிரசுரத்தில் கப்பல் செய்ய முயன்றுகொண்டிருந்தார்கள். மெல்லிய காகிதம். எனவே கப்பல் செய்யும்போது தாள் கிழிந்தது. அவர்களில் இளையவன் என்னையும் என் கையில் இருந்த துண்டுப் பிரசுரத்தையும் பார்த்தான். நான் என் பிரதியை அமைதியாக பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டேன்.

அந்தக் கோலாகலமான இடத்தை விட்டு சோபையற்ற என் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விருப்பமின்றி நின்றிருந்தேன். தேநீர் சாப்பிடக் கிளம்பியவனை இன்னும் காணோமே என்று என் மனைவி நினைத்தாரோ என்னவோ, செல்பேசியில் அழைத்தார். தோசை மாவும் முட்டையும் வாங்க வேண்டியிருந்தது. சிறிது நேர மனப் போராட்டத்திற்குப் பின்பு என் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துண்டுப் பிரசுரத்தை எடுத்து அந்தச் சிறுவர்களுக்கே கொடுத்துவிட்டு “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” என்று புன்னகைத்தேன். என் இடத்தில் கிறிஸ்துவும் அதைத்தான் செய்திருப்பார்.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar