புத்தகக் காட்சிக்கு எனது “டாப் 10”

in கட்டுரை

“இதோ வந்துவிட்டது 2014 சென்னை புத்தகக் காட்சி!” என்று இளமை கணக்காய் துள்ளுகின்றன பதிப்பகங்களும் கிரெடிட் கார்டு நிறுவனங்களும். இந்தப் புத்தகக் காட்சியில் என்னென்ன வாங்கலாம்? விளம்பரத்தால், நண்பர்களின் தூண்டுதலால் வாங்கும் தவிர்க்கப்பட வேண்டிய நூல்கள் போக நாம் வாங்கி அடுக்கிவைப்பதற்குச் சில நூல்களைப் பரிந்துரைக்கிறேன். இதுதான் என்னுடைய “டாப் 10”.

1. அல் கய்தா: கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்

அடால்ஃப் சாவர்க்கர், அல் அத்வானி பதிப்பகம், விலை ரூ. 108

இந்தச் சர்ச்சைக்குரிய சமூக இயக்கம் ஆயிரமாயிரம் பேருக்கு வைகுண்ட/சிவலோக/சொர்க்கப் பிராப்தி கிடைக்கப் பாடுபட்டுவருகிறது. இன்றும் அல் உம்மா, இந்தியன் முஜாகிதீன், சிமி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சில வாசகர் அமைப்புகள் ஆகியவற்றுக்கு “இன்ஸ்பிரேசனாக” உள்ளது. ஆயினும் இது சந்தித்து வரும் சவால்களுக்குப் பஞ்சமில்லை. அல் கய்தாவின் சாதனைகள் யாவை, அதன் ‘உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி’ கருத்தாக்கமும் இந்து மக்கள் கட்சியின் ‘இந்து தேசம்’ கருத்தாக்கமும் இணையும் புள்ளிகள், இயக்கம் மேலும் சிறந்தியங்க என்ன மாற்றங்கள் தேவை என்பவை உள்ளிட்ட விசயங்களை இந்நூல் விவாதிக்கிறது. பிற வகை அடிப்படைவாதிகளுக்கும் சாவர்க்கரின் இந்தப் புத்தகம் உதவும் என்றே தோன்றுகிறது.

2. ஹிட்லரின் ஜெர்மனி: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

கபல்ஸ்தாசன், அடல் கய்தா பதிப்பகம், ரூ. 151

உலக வரலாற்றில் கேஷவ் பலிராம் ஹிட்லர் அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் எதிர்ப்பு இருந்ததில்லை. இருந்தாலும் ஹிட்லரின் அடிப்பொடிகளிடையே அவருக்கு பலத்த ஆதரவு இருந்தது. காரணம்? அவர் நேசித்த ஆரிய இனம் தழைத்தோங்கிய இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது ஜெர்மனி ஒரு முன்மாதிரியாக இருந்தது (‘திகழ்ந்தது’). குஜராத் மாநிலம் பிற இந்திய மாநிலங்களைவிடப் பெரிதாக எதையும் பிடுங்கிவிடவில்லை என்பது உண்மையே. எனினும் அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏராளமான நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் பிடுங்காத மயிர்களே அதிகம். இதனாலேயே குஜராத் இந்தியாவுக்கு சிறந்த முன்மாதிரி ஆகிறது. ரிக் வேதம், உபநிஷதம், கந்த சஷ்டி கவசம், தெனாலிராமன் கதைகள், 30 நாட்களில் சமஸ்கிருத பாஷை போன்ற நூல்களிலிருந்து ஆதாரபூர்வமான தகவல்களுடன் எழுதியிருக்கிறார் கபல்ஸ்தாசன்.

3. அந்த அதுவும் இந்த இதுவும்: அபுனைவு நூற்தலைப்புகளும் உம்மைத் தொகைப் பயன்பாடும்

முனைவர் இரா. மாணிக்கம், புதுமை பதிப்பகம், ரூ. 370

ஓர் ஆக்கத்திற்குத் தலைப்பு வைப்பது எளிதல்ல. புனைவுகளுக்குத் தலைப்பு வைக்கப் படைப்பூக்க உழைப்பு தேவை. ஆனால் அபுனைவுப் படைப்புகளுக்கு அப்படியல்ல. அபுனைவு எழுத்தாளர்கள் தமது படைப்புகளுக்குப் பெயர் சூட்டக் காலங்காலமாய் உதவிவரும் ஓர் உத்தி உம்மைத் தொகையாகும். லியோ டார்ட்டாய்ஸ் எழுதிய ‘சண்டையும் சமாதானமும்’ முதல் எனது ‘ராமுவும் சோமுவும்’ வரை புனைவு ஆக்கங்களிலும் இவ்வுத்தி பயன்பட்டுள்ளது. உம்மைத் தொகைப் பயன்பாட்டின் பரிணாம வளர்ச்சி, பிற மொழிகளில் உம்மைத் தொகைப் பயன்பாடு, உம்மைத் தொகைப் பயன்பாடும் தமிழ்ப் பதிப்புத் துறையின் நாலுகால் பாய்ச்சலும், “உம்மையும் தொகையும்”, உம்மைத் தொகைப் பயன்பாட்டின் முன் உள்ள சவால்கள் ஆகிய அத்தியாயங்கள் குறிப்பிடத்தக்கவை.

4. நிகழ்வுகள் 2013

தமிழ் மனோரமா பதிப்பகம், ரூ. 100

2013ஆம் ஆண்டு நிகழ்வுகளின் முழுப் பட்டியல். ‘நான்காம் பிறை 3D’ திரைப்படம் வெளிவந்தது முதல் ஐ.பி.எல். 6இல் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது வரை, அக்டோபரில் நடந்த இந்தியன் கிராண்ட் ப்ரிக்ஸ் முதல் சுவாமி விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழா வரை, கும்ப மேளா முதல் ஜெயேந்திர சரஸ்வதி தீபாவளி ஆசிகள் வரை, அரவிந்த் காஜலகர்வால் தில்லி முதல்வர் ஆனது முதல் பா.ஜ.க.வின் லாண்டரி செலவுகள் அதிகரித்தது வரை, கிண்டி மொபைல் போன் கடையில் துணிகரத் திருட்டு முதல் ராகுல் காந்தி காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டது வரை, 2,013 முக்கிய நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடியது.

5. ஊருணிப் பூச்சி

அமர்ப்ரீத் காத்தமுத்து, பொன்வேய் பப்ளிஷர்ஸ், ரூ. 80

இந்த ஆண்டின் ஆகச்சிறந்த கவிதைத் தொகுப்பு என்று இதைக் கூறலாம். அவசர யுகத்தின் வாழ்வியலில் உறவுகளின் சமூக அரசியல் தனிநபர் தேர்வுகளில் குறுக்கிடுவதைச் சொற்களின் எல்லைகளை மென்மையாக, ஆனால் நுட்பமாக மீறும் மொழியில் பேசும் கவிதைகள். தமிழ்க் கவிதைவெளிக்கு ஒரு நல்வரவு இந்த அமர்ப்ரீத் காத்தமுத்து.

6. வெறும் பூச்சி

ரோஷன் கருணகிழங்கே, ஐம்பொன் பப்ளிஷர்ஸ், ரூ. 80

இந்த ஆண்டின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்பிது. உலகமயமாக்க வாழ்நிலைச் சூழல்களில் உறவுகளின் மாறுநிலைகள் தனிநபர் ஊடாட்டங்களில் நீர்மிப்பது பற்றி வார்த்தைகளின் வரம்புகளைக் கறாராக மீறும் மொழியில் பேசுகின்றன இக்கவிதைகள். தமிழ்க் கவிதைவெளிக்கு ஆகச்சிறந்த வரவு ரோஷன் கருணகிழங்கே.

7. அஜக்தா, அலேக்தா!

முகேஷ் மாதவன், காவியம் புக்ஸ், ரூ. 1,100

சந்தைப்படுத்தலின் அடுத்த கட்டத்திற்குத் தாய்த் தமிழைக் கரம்பிடித்து அழைத்துச் சென்று விற்பனையிலும் முதல் வாரத்திலேயே வசூலைக் குவித்த இந்த சூப்பர்ஹிட் சிறுகதைத் தொகுப்பு, தமிழ்ப் பதிப்புலகம் இருபத்தோராம் நூற்றாண்டினுள் ஆணித்தரமாக அடியெடுத்துவைத்திருப்பதை விமரிசையாக அறிவிக்கிறது.

8. குறிப்பிடத்தக்க சமூகத் தீமைகள்

ஃபில்லிப் கால்லின்ஸ், தமிழில்: சு. வைத்தியநாதன், சுவை வெளியீடு, ரூ. 120

இன்றைய யுகத்தில் மட்டுமல்ல, என்றைய யுகத்திலும் சமூகத் தீமைகள் தவிர்க்க இயலாதவை. இவற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதென்பது மாளாத செந்நெல். இந்நிலையில் சமூகத் தீமைகளை நடைமுறைக்குகந்த பாணியில் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் நூலாசிரியர். அதாவது ஃபில்லிப் கால்லின்ஸ். எடுத்துக்காட்டாக, ஒரு சமூகத் தீமையை ஒழிப்பதற்கு, அப்போதைக்கு அதைவிடச் சிறியதான இன்னொரு சமூகத் தீமையை ஆதரிக்க நமது தேர்தல் ஜனநாயகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. நமக்கான சமூகத் தீமைகளைத் தேர்ந்தெடுப்பதோடு புதிய சமூகத் தீமைகளை உருவாக்குவதன் அவசியத்தையும் ஆசிரியர் அழகாகத் தர்க்கித்து எழுதியிருக்கிறார். ஆல்வின் டாஃப்ளர் எழுதிய Future Shockஇனை அடுத்து முக்கியமான அபுனைவுப் புத்தகம் என்பேன்/என்கிறேன்.

9. Crime and Punishment

ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, பெங்குவின், ரூ. 235

தலைசிறந்த சிந்தனையாளர்களான வால்டர் பெஞ்சமின், மிகையில் பக்தின் போன்றோரால் மேதை எனப் போற்றப்பட்டு தமிழ் இணைய உலகில் “எலக்ஸ்” என்று அறியப்படும் தாஸ்தாயெவ்ஸ்கியின் மறக்கவியலாத நாவல். இன்று இலக்கிய திரில்லர் என்ற அடைமொழியுடன் பல நாவல்கள் வருவதைப் பார்க்கிறோம். குற்றமும் தண்டனையுமை மிஞ்சிய இலக்கிய திரில்லரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை (எனது ‘ஒரு லோட்டா இரத்த’த்தைத் தவிர). இந்நாவலை ஓர் உளவியல் மர்மக் கதையாகப் படிக்கலாம். வட்டிக்கடை ஆயாவைக் கொல்ல விரிவாகத் திட்டமிடும் இளம் வெட்டி ஆபீசரான ரஸ்லோநிகோவ் (ரஸ்கோல்நிகாவ்) அவளைக் கொன்றானா? அவளையும் அவள் தங்கையையும் அவன் கொன்ற பின்பு போலீஸ் எப்படித் திணறுகிறது? ரஸ்லோநிகோவ் போலீசுக்குத் தன் மீது சந்தேகம் வருமாறு நடந்துகொள்கிறானா? கொலைக் கருவிகளை ஒளித்துவைத்த இடம் குறித்து வலியச் சென்று போலீசுக்குத் தெரியப்படுத்துகிறானா? கடைசியில் எப்படி அவனே போலீசிடம் சரணடைந்து சிறை செல்கிறான்? படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

10. தேர்ந்தெடுத்த படைப்புகள்

பேயோன், ஆழி பதிப்பகம், விலை பின்னர் அறிவிக்கப்படும்

உலகின் முன்னணி தமிழ் எழுத்தாளரான என்னுடைய கடந்தகாலப் படைப்புகளில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டால் யோசிக்கலாம் என்று நோபல் பரிசுக் குழு கூறியிருந்தது. அதையொட்டி எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற பெருங்குழப்பத்தினூடே சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், துண்டிலக்கியங்கள் என ஆயிரக்கணக்கான படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்த நூலாகியிருக்கின்றன. சகட்டுமேனிக்குப் பக்கங்கள். தேர்ந்தெடுத்த படைப்புகளில் நாவல்களே கிடையாதா என ஆதங்கித்துக் கைவிரிப்பவர்களுக்கு ஒரு தகவல்: எனது நூற்றி சொச்ச நாவல்களில் பத்தையாவது சேர்க்கும்படி பதிப்பாளரிடம் உரிமையோடு கேட்டது நிஜம். ஆனால் அவரும் மனிதர்தானே, மறுத்துவிட்டார். இத்தொகுப்பிலுள்ள அனைத்துப் படைப்புகளும் இன்னும் பல மணிநேரங்களுக்குப் பேசப்படும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

பத்தோடு பதினொன்றாக எனது இன்னொரு புதிய நூலான ‘பிரிட்டிஷ் ஏஜெண்ட்’டையும் குறிப்பிட வேண்டும். எனது கடைசியாக அச்சேறிய ‘ஒரு லோட்டா இரத்த’த்திற்குப் பிறகு எழுதப்பட்ட படைப்புகளின் தொகுப்பு இது. இதிலுள்ள பல படைப்புகள் தற்போது என் வலைத்தளத்தில் இல்லை என்பதால் பலவும் எக்ஸ்குளூசிவ் ரகம்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar