16 காதல் கவிதைகள்

in கவிதை

பிரியம்

தண்டவாள இணை போல்
இடைவெளி விட்டு நடப்பவள்
விளக்கெரியாத தெருவில்
என்னோடு ஒட்டி என் கையை
இறுகப் பிடித்து நடக்கிறாய்.
இருட்டு என்றால் உனக்கு
என் மீது அவ்வளவு பிரியமா?

வருந்துகிறேன்

நீ இட்ட கோலத்தில்
அறியாமல் நடந்த என் சுவடுகள்.
தடங்களுக்கு வருந்துகிறேன்.

வேலைக்காரி

நீ போட்ட கோலத்தை
ஊர் அழிப்பதற்குள்
ஹேண்ட்பேகை மாட்டிக்கொண்டு
வேலைக்குப் போய்விடுகிறாய்
நீ வீடு திரும்பும் வரை
காத்திருக்க வேண்டும் நான்
எனக்கொரு வேலை
கிடைக்கும் வரை.

சிவப்பு

உன் வெட்கத்தின்
முகச் சிவப்பில்
மறைந்துபோகிறது
நெற்றிக் குங்குமம்.

பிரிவு

நமக்குள் எல்லாம்
முடிந்த கணம்
உனக்கொன்றும்
எனக்கொன்றுமாக
இருக்கிறது,
அதிலாவது ஒற்றுமை
இருந்திருந்தால்
பிரிந்திருக்க வேண்டாம்
போலயே.

அழகு

உன் அப்பாவுடன் பேசும்போது
ரகசியமாக உன்னைப் பார்த்து
நான் கண்ணடிக்க,
நீ முகம் சிவக்கிறாய்
அழகாய்த்தானிருக்கிறது
இருந்தாலும் உனக்கு
வேறு எதுவுமே வராதா?

சந்தேகம்

என் அன்பின் மீதுனக்கு
சந்தேகம் வந்துவிட்டது
எனக்குத்தான்
உன் சந்தேகம் மீதின்னும்
அன்பு வரவில்லை.

பண்பாடு

பூங்கா பெஞ்சில்
அமர்ந்திருந்தோம்.
கொஞ்சுவதற்கில்லை
பண்பாட்டுச் சூழல்
ரோஜாப் பூவிரண்டை
மோதிக் காட்டுகிறேன்
நீ புன்னகைக்கிறாய்
மூர்க்கமாய் அழுத்தி
இதழ்கள் உதிர்ந்து
தரை குப்பையாக,
கண்கள் செருகி
முகம் சிவக்கிறாய்
பொது இடத்தில்.

பேரிடி

புவியீர்த்த பெருவயிறு
பாதி நரைத்த தலை
கொடுவாள் மீசை
பிரெஞ்சு தாடி
இத்தனையுமாய்
எதிர்ப்படும் உன் தந்தை
என்னைப் பார்த்ததும்
களுக்கென்று சிரித்து
தலைகுனிந்து
ஓடிப்போகிறார்
உன் அப்பா உன் சாயல்
என்பதற்காக இப்படியா?

இனப்பெருக்கம்

திருமணத்திற்குப் பின்பு
உனக்கு 2 குழந்தைகள்
வேண்டும் என
உத்தரவிடுகிறாய்
ஏன், இப்போதே
கொடுக்கிறேனே
என்றால், எப்படியும்
9 மாதம் ஆகும் என்கிறாய்

மணல் வீடு

நெற்றியில் கூந்தல் கற்றை
அழகாய் விழக் குனிந்து
நம் வீடென்று நீ கட்டிய
மணல் மேட்டை
மிதித்து ஓடும் சிறுவன்
என் சாயல்தான், ஆனால்
அவன் அம்மாவை எனக்கு
சத்தியமாகத் தெரியாது.

ரத்தம்

தாவணி வயதிலும்
பென்சில் சீவும்போது
எனக்கான உன் இதழ்களிடை
நாக்கு வெளிவரும்
அழகு அற்புதம்!
தற்செயல் ஸ்பரிசங்களால்
பரவசமூட்டும் உன்
மென்விரல்களை
அரை பிளேடு லேசாய்க் கீற
என்னைச் சந்திக்கும் ஆவலில்
எட்டிப் பார்க்கிறது உன் ரத்தம்!

பிரிவு

உன்னைப் பிரிந்த பின்னரும்
நாம் சந்தித்த தேதியையும்
பிரிந்த தேதியையும்
மறக்க முடியவில்லை
இப்போது எந்தத் தேதி
எதற்கு என நினைவில்லை.

அழைப்பு

“என்னை அழை” என
குறுஞ்செய்தி அனுப்புகிறாய்
என்னவென்று அழைக்க?
அதை மட்டும் என்
தலையில் கட்டிவிட்டாய்.

சேர்த்தி

நம்மை யாரும் பிரிக்க முடியாது
என்று பல முறை சொல்வாய்
இன்று நீயே நம்மைப் பிரித்தாய்
யாரும் என்பதில் நீயும் நானும்
சேர்த்தியில்லை என உணர்த்தி.

கிடைத்தல்

என்னைக் காதலிப்பதாகச்
சொல்கிறாயே, முத்தமெல்லாம்
கிடையாதா?

அனைத்தும் ஆனந்த விகடனின் ‘பேயோன் பக்க’த்தில் வெளியானவை

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar