மகளிர் தின சிறப்பிதழ்

in கட்டுரை

இன்று மகளிர் தினம்! தலைநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தோரணங்கள் ஊரெல்லாம் தோகை விரிக்கின்றன. தெருக்களில் கொழுப்பற்ற இனிப்புகள் விநியோகிக்கப்படுகின்றன. இளம்பெண்கள் அறிவும் அழகும் சமமாய்ச் சுடர் விட மகளிர் தின அன்பளிப்பாய்க் கிடைத்த கரடி பொம்மைகளை மகிழ்ந்த முகங்களுடன் தழுவிக்கொண்டு திரிகிறார்கள். பேருந்துகளின் கூரைகளில் கல்லூரி மாணவிகளின் கலகல கிளுகிளு அணிவகுப்பு. எங்கும் சிரித்த முகங்களைத்தான் பார்க்க முடிகிறது. ஆண்கள்கூடப் புத்தாடை அணிந்து டீக்கடை வாசல்களில் சிரிப்பும் அரட்டையுமாய் அனுபவிக்கிறார்கள். சிறு குழந்தைகள் இரு கைகளிலும் வாயிலும் கொத்துக் கொத்தாக சாக்லேட்களை வைத்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஆண்கள் பரிச்சயமில்லாத பெண்களுக்குப் பூச்செண்டுகளை அளித்து வாழ்த்துகிறார்கள். பெண்கள் அவற்றை சிநேகப் புன்னகையுடன் பெற்றுக்கொண்டு கூந்தலில் சூடிக்கொள்கிறார்கள். பூக்கள் வழக்கத்தைவிட அதிகமாகப் பிரகாசிப்பது போல் ஒரு பிரமையைக் கிளப்பி விடுகின்றன. மொத்தத்தில் மக்களுக்கு இது மகளிர் தினம் என்பதே மறந்துவிட்டது போலுள்ளது.

பால்கனியிலிருந்து இவ்வளவையும் நான் பார்க்கிறேன். கல் மனத்தையும் கரைத்துவிடக்கூடிய இந்தக் காட்சிகள் எனக்குக் குதூகலத்தை அளிக்கின்றன. ஏனென்றால் அடிப்படையில் நான் பெண் இனத்தின் ரசிகன். முக்கியமான இனம் என்பதால் மட்டுமல்ல, பல்வேறு காரணங்களால். ஆனால் ஆண் ரசனை பெண்களின் நிலையை இரவோடிரவாக மாற்றிவிடாது. இப்போது மகளிர் தினத்தைக் கொண்டாடுமளவு வந்திருக்கிறோம். அடுத்து நேரடியாக மகளிரையே கொண்டாடுவதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்.

“கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமையற்ற பெண்களின் கூட்டமடி” என்ற பாரதி போல் எனக்கும் பெண்கள் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால் மனிதன் எல்லாத் துறைகளிலும் சிகரங்களைத் தொட்டுவரும் இந்தக் காலத்தில் பெண்களின் நிலை சிலாக்கியமாக இல்லை. குடும்பங்களின் குடுமிகளைக் கையில் வைத்திருக்கும் பெண்கள் சமூக அளவில் சக்தியற்றுக் கிடக்கிறார்கள். சொந்தக் கணவர்களையே கொத்தடிமைகளாக நடத்தும் மனைவிகள்தான் பணியிடத்தில் பதவி உயர்வுக்குப் போராட வேண்டியிருக்கிறது. இன்று வரை ஒரு பெண் பியூனை நான் பார்த்ததில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆண்களாகிய நாமும் போராட வேண்டும், இப்படி:

மகளிர் தின சிறப்புப் பகிர்வுகள்

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar