நெஞ்சில் ஒரு கத்தி

in சிறுகதை

ஓர் இன்ஸ்பெக்டர் குமார் மர்மக் கதை

குமாரைப் பொறுத்த வரை கடவுளும் காதலும் ஒன்று: இரண்டுமே இருக்கிறதா இல்லையா என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அவர் கண்முன் விரிந்த காட்சி, காதல் மீதான சந்தேகத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அவ்வளவு அன்னியோன்யம் ஒரு சம்பவக் காட்சியில் அவர் கண்டிராதது.

கணவனின் கைகள் மனைவியின் கழுத்தைப் பிடித்திருந்தன. அவன் கையில் பல இடங்களில் கீறல்கள். மனைவியின் வலது கை, கணவனின் நெஞ்சில் நுழைந்திருந்த கத்தியைப் பிடித்திருந்தது. பெண்ணின் வலது கையில் கைக்கடிகாரம் கட்டிய அடையாளம் தெரிந்தது. இடது கை அவன் தலைமுடி மேல் கிடந்தது. அவள் கண்கள் தெறிப்பது போல் பிதுங்கிக் கூரையை வெறித்தன. அவை பார்த்த இடத்தைக் குமாரும் பார்த்தார். ஆனால் அங்கே சந்தேகத்திற்கு இடமாக ஒன்றும் தென்படவில்லை. “ஃபால்ஸ் அலாரம்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

தம்பதியினர் ரத்தத்தில் ஊறியிருந்தார்கள். கைகலப்பு நடந்ததற்கான அறிகுறிகளின் ஒரு பகுதியாக சாப்பாட்டு மேஜையின் ஒரு கால் உடைந்திருந்தது. நாற்காலி ஒன்று கோபித்துக்கொண்ட மனைவி போல் வேறு பக்கம் திரும்பி விழுந்து கிடந்தது. உப்புக் கிண்ணம், ஊறுகாய் ஜாடி, ஸ்பூன்கள், ஸ்பூன் ஸ்டாண்டு ஆகியவை அந்த நாற்காலியைச் சுற்றி வெவ்வேறு கோலங்களில் இறைந்து கிடந்தன. அருகே ஜன்னல் கண்ணாடி உடைந்து ஓர் ஓலை வெடியின் அளவில் முக்கோணமாகத் துளை விழுந்திருந்தது. அந்தத் துளை வழியே நடையும் தெருவும் புலப்பட்டன. உடைந்த துண்டு வீட்டிற்கு வெளியே கிடந்ததாக கான்ஸ்டபிள் 114 கண்டறிந்து சொன்னார்.

ஒன்று, இது பரஸ்பரக் கொலை அல்லது அப்படித் தெரியவைக்க யாரோ மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று நினைத்தார் குமார். ஏனென்றால் போலீஸ் கள்ளச்சாவி போட்டுத் திறக்கும் வரை யாரும் கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்ததாகத் தெரியவில்லை. நகை தொகை எதுவும் திருடு போகவில்லை.

“என்ன சார் இப்படி கெடக்காங்க?” என்றார் 114.

“விதி” என்றார் குமார் சுருக்கமாக. பிறகு ஒரு பிரஷ் வைத்துப் பூச்சி பிடித்துக்கொண்டிருந்த தடயவியல் ஆட்களிடம் “சீக்கிரமா முடிச்சிக்கிங்க. டிவி ஆளுங்க வந்துரப்போறாங்க” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

* * *

காலஞ்சென்ற ஆனந்தவல்லி (44)-சித்திவிநாயகன் (46) தம்பதி அந்த அபார்ட்மென்ட் பாணிக் கட்டிடத்தின் முதல் மாடியில் ஏழு ஆண்டுகளாகத் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு இரு பதின்பருவக் குழந்தைகள். பெற்றோரின் அகால மரணம் குழந்தைகளைத் தற்காலிகமாக இரண்டாம் மாடி வீட்டுக்கு அனுப்பியிருந்தது.

தரைத் தளத்தில் வசித்த வங்கி ஊழியர் நித்தியானந்தத்தின் (45) வீட்டின் கூடத்தை ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, சோபா, டீப்பாய், சுவர்களை மறைத்த தெய்வப் படங்கள் ஆகியவை ஆக்கிரமித்தன. கூடத்தின் ஓரத்தில் அன்னபூரணி நித்தியானந்தம் (44) முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் கத்தரிக்கோலால் பீன்ஸ் நறுக்கிக்கொண்டிருந்தார். குமார் எதைப் பார்க்கிறார் என்று திரும்பிப் பார்த்துவிட்டு சங்கடமாகப் புன்னகைத்தார் நித்தியானந்தம்.

நித்தியானந்தமும் அந்தக் குடும்பத்தினரைப் புகழ்ந்தார். அன்னபூரணி கூடுதலாக ஒரு தகவலைச் சொன்னார்.

“நேத்து நைட் பதினொண்ணு பதினொண்ரை இருக்கும். மாடில இவங்க வீட்லேந்து தொம்முனு சத்தம் கேட்டுச்சு. இவரைப் போய் என்னன்னு பாத்துட்டு வரச் சொன்னேன். இவர் போய் கதவத் தட்டிருக்கார். ஒண்ணும் பிரச்சனை இல்லன்னு சித்தி உள்ளேந்து குரல் குடுத்திருக்கார். அப்பறம் இவர் வந்துட்டார்.”

“சித்தி எக்ஸாக்ட்டா என்ன சொன்னாரு?” என்று குமார் நித்தியானந்தத்திடம்.

“கதவத் தட்டுனேன். ‘ஒண்ணுமில்ல, அரிசி மூட்டை விழுந்துச்சு’ன்னு உள்ளேந்து சித்தி கத்தினாரு. நான் சரின்னு வந்துட்டேன்.”

“உங்களுக்கு சந்தேகம் வர்லியா?”

“அப்படித்தான் இருந்துது. ஆனா நாம்ப கேட்டா கோச்சுக்குவாருன்னு விட்டுட்டேன்.”

“கடந்த காலத்துல உங்களுக்கு அவங்களோட ஏதாவது பிரச்சினை இருந்திருக்கா?”

“சேச்சே, இல்ல சார். நாங்கல்லாம் பிரதர்ஸ் மாதிரி.”

* * *

இரண்டாம் மாடியில் இருந்தவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி எல். சற்குணத்தான் (50). அவருடன் அவரது மனைவியும் திருமண வயது மகளும் வசித்தார்கள். வீடு சுத்தமாக இருந்தாலும் அலங்காரப் பொருட்களின் ‘ஜேஜே’ அந்த வீட்டை அலங்கோலமாகக் காட்டியது. ஆங்காங்கே ஆணிகளில் தொங்கிக்கொண்டிருந்த ஒப்பனைப் பொருட்கள், அங்கே பெண்களின் எண்ணிக்கை பெரும்பான்மை என்று தெளிவுபடுத்தின. உள்ளறையில் இரு பெண்களும் சித்தியின் குழந்தைகளுக்குத் துணையாக இருந்தார்கள். குமார் சற்குணத்தானை விசாரித்தார்.

“பியூட்டிஃபுல் ஃபேமிலி சார்” என்றார் சற்குணத்தான். “சித்தி மாதிரி ஒரு மனுஷனைப் பாக்க முடியாது. சித்தி பொண்டாட்டியும் பசங்களும்கூட தங்கமான குணம். அவங்களால யாருக்கும் ஒரு தொந்துரு கெடையாது…”

குமார் குறுக்கிட்டார்: “புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதாவது தகராறு…”

“வாய்ப்பே இல்லீங் சார். அவங்க குரல் வீட்டுக்கு வெளிய கேட்டதே கெடையாது. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் எவ்ரி வீக்கெண்ட் பசங்களை வீட்ல விட்டுட்டு அன்னியோன்யமா எங்கியாவது போயிடுவாங்க. அவ்ளோ ரொமாண்டிக் அண்டர்ஸ்டாண்டிங்.”

“எங்க போவாங்க?”

“அவுட்டோர் சார். எங்கன்னு தெரில.”

“பசங்கள வீட்ல விட்டுட்டா?”

“ஆமா சார். வீக்லி வீக்லி ஹனிமூன் மாதிரி போயிடுவாங்க.”

உள்ளே சிறிதாக ஒரு மின்னல் அடித்தது போல் இருந்தது குமாருக்கு.

“கடந்த காலத்துல உங்களுக்கு அவங்களோட ஏதாவது பிரச்சினை இருந்திருக்கா?”

“இல்லவேல்லீங் சார். அவுங்களுக்கு யாரோடயும் பிரச்சனை கெடையாது. ரொம்ப பீஸ்புல். நாங்கல்லாம்கூட சண்டைல்லாம் போட்டுக்குவோம். ஒண்ணுக்கு ரெண்டா லேடீஸ் இருக்குற வீடு இல்லீங்ளா சார், எப்பப் பாரு சத்தமா இருக்கும். ஆனா சித்தி ஃபேமிலி அப்படி இல்ல. ஒத்துமையான ஜோடி. வருஷாவருஷம் அவுங்க வெட்டிங் டே-க்கு தடபுடலா விருந்து வெப்பாங்க. லவ் பேர்ட்ஸ் மாதிரி.”

நிர்வசனமாகக் கேட்டுக்கொண்டிருந்த குமார், திடீரென்று நினைவுகூர்ந்தவராக, “அந்த லேடிக்கு இடதுகைப் பழக்கமா?” என்றார். சற்குணத்தான் உறுதிப்படுத்தினார்.

மூன்றாம் மாடி மலையாளக் குடும்பத்தினர் – ரெகு, ரெமா தம்பதி, குழந்தைகள் ரெஞ்சித், லெக்ஷ்மி – ஆஸ்திரேலியா சென்றிருந்தார்கள். சற்குணத்தான் ரெகுவின் தொலைபேசி எண்ணைத் தர முன்வந்தபோது குமார் மறுத்துவிட்டார் (“இல்ல, தேவைப்படாது!”). நான்காம் மாடி மொட்டை மாடியாக இருந்தது.

போலீஸ் காரில் உட்கார்ந்து ஸ்டீரிங்கைத் திருப்பிக்கொண்டிருந்த குமார், எண்ணங்களையும் மனதில் ஓட்டினார்:

சித்தியும் ஆனந்தவல்லியும் சந்தர்ப்ப சாட்சியங்களின்படி ஒருவரையொருவர் நேசித்தார்கள். அந்தத் தம்பதி ஒருவரையொருவர் கொல்லவில்லை என்றால் அவர்களுக்குப் பரிச்சயமற்ற யாரோ ஒரு ஆள்தான் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும். அதே சமயத்தில், பரிச்சயமற்றவர்கள் லாபநோக்கின்றிக் கொலை செய்துவிட்டுப் போக மாட்டார்கள். ஒரு குந்துமணிகூடத் திருடு போகவில்லை. கொலைக் கத்தியோ இடதுகைப் பழக்கமுள்ள ஆனந்தவல்லியின் வலதுகையில் இருந்தது. அவரைத் தெரியாத ஆள்தான் அவருக்கு இடதுகைப் பழக்கம் என்பதும் தெரியாமல் வலதுகைக்குக் கத்தியைக் கொடுத்திருப்பார்.

* * *

தடயவியல், போஸ்ட்மார்ட்ட அறிக்கைகள் இன்ஸ்பெக்டரின் மேஜைக்கு வந்து சேர்ந்தன. ஆனந்தவல்லி நள்ளிரவு 12 மணியளவில் இறந்திருக்கிறார். சித்திவிநாயகன் 1 மணியளவில். அதாவது முதலில் இறந்த ஆனந்தவல்லி, குறைந்தது 1 மணிநேரம் சுமங்கலியாக இருந்திருக்கிறார். அவரது தாலியில் சித்தியின் கைரேகையும் சிறிது ரத்தமும் வியர்வையும் படிந்திருக்கின்றன. சித்தியின் உள்ளங்கைகளில் அவற்றுக்கு ஜோடியான கீறல்களும் அழுத்தங்களும் இருக்கின்றன. சித்திதான் தன் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றார் என்றன அறிக்கைகள். அதோடு சித்தி வீட்டுக் கதவின் வெளிப்பக்கப் பிடியில் கைரேகைகளே இல்லை. அவை துடைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன.

“தேர்டு பார்ட்டி கில்லர் யார்னா இருப்பாங்க போலயே சார்” என்று 114 குமாரின் சந்தேகத்தை எதிரொலித்தார்.

போஸ்ட்மார்ட்ட அறிக்கையில் எதிர்பாராத விவரம் ஒன்றும் இருந்தது. கொலையுண்ட தம்பதியின் உடலில் நாள்பட்ட தழும்புகளும் சமீபத்தில் ஏற்பட்ட கீறல்களும் இருந்தன. இவை பழைய காயங்கள் மற்றும் எலும்புமுறிவுகளின், சண்டைகளின் அடையாளங்கள். இருவருக்கும் ஒரே விதமான காயங்கள் இருந்தது குமாருக்கு வலுவான சந்தேகத்தைத் தூண்டியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர் கொலை வீட்டில் இருந்தார்.

* * *

லட்சியத் தம்பதி வாரயிறுதிகளில் எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நண்பர்களும் உறவினர்களும் கைவிரித்தார்கள். சித்தி பையன்களை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு வீடு முழுவதையும் தேடிப் பார்த்தார்கள் குமாரும் கான்ஸ்டபிளும். பயணச் சீட்டு, ரசீது என்று எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த குமாருக்குக் கூடத்தில் இருந்த அலமாரியில் பந்தாக சுருட்டப்பட்டுக் கிடந்த பாலிதீன் பைகள் கண்ணில் பட்டன. லத்தியால் ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்து ஒரு சிறிய பையை எடுத்துக்கொண்டார். “செய்யது கட்பீஸ் ஜங்ஷன்” என்றது பை. அதன் அடியில் “ஊரப்பாக்கம்” என்று இருந்தது.

ஆனந்தவல்லியின் அண்ணனை செல்பேசியில் கூப்பிட்டார் குமார்.

“உங்க சிஸ்டருக்கு ஊரப்பாக்கத்துல யாராவது வேண்டியவங்க இருக்காங்களா?”

“இல்லீங்ளே சார். உங்க மச்சானுக்கு?”

“இல்லீங்ளே சார். ஏன் சார்?”

இன்னும் சிலரிடம் அதே கேள்வியைக் கேட்டார் குமார். எல்லோருமே அதே எதிர்க் கேள்விகளை வெவ்வேறு குரல்களில் கேட்டார்கள்.

* * *

இறந்துபோன தம்பதி ஊரப்பாக்கத்தில் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்த இரட்டைப் படுக்கையறை வீடு ஒரு சுதந்திரப் போராட்டக் கோட்டையைக் குமாருக்கு நினைவுபடுத்தியது. ஒரே வித்தியாசம், சித்தியின் ரகசிய இல்லத்துச் சுவர்களில் தோட்டா அடையாளங்கள் இல்லை; கீறல்களும் ரத்தக் கறைகளும்தான் இருந்தன. அகற்றாமல் மூலையில் கிடந்த சிறிதளவுக் குப்பையில் குமாரால் சில பற்களையும் காண முடிந்தது. அவற்றை அள்ளித் தடயவியல் பாலிதீன் உறையில் போட்டுக்கொண்டார்.

“தவறாம வீக்கெண்ட்ல வந்துருவாங்க. ஒரே அடிதடி சத்தம், அழுகைன்னு இருக்கும். நான் ஒரு வாட்டி கேட்டதுக்கு, ‘ஏன், நீயும் வரியா இந்த வெளையாட்டுக்கு?’ன்னு கேட்டாங்க. ‘இந்த வெளையாட்டுக்கு நான் வர்ல’ன்னு சொல்லிட்டேன்” என்ற தரைதள வீட்டுக்காரர் ராமநாதனிடம் “உங்ககிட்ட நார்மலா பேசுவாங்களா?” என்றார் குமார்.

“அவுங்க யார்கிட்டயும் வெச்சிக்கிறதில்ல சார். ஹவுசோனர் கிட்ட கம்ப்ளைன் பண்ணோம். அவுரு கண்டுக்கவேல்ல. எங்களைவிட டபுள் மடங்கு வாடகை தராங்க…”

“இவங்களை யாராவது பாக்க வருவாங்களா?”

“ஒரே ஒரு வாட்டி கணேஷ் டாக்டர் வந்தாரு, பக்கத்துத் தெருல இருக்காரே…”

* * *

“முதல் தடவை பாக்க வந்தப்ப என்கிட்ட ஃபோன் நம்பர் வாங்கிக்கிட்டாங்க” என்றார் பத்தாண்டுகளாக அங்கு கிளினிக் நடத்தி மீனம்பாக்கம் அருகே வீடு கட்டிக்கொண்டிருந்த ‘கணேஷ் டாக்டர்’ என்ற டாக்டர் கணேஷ். “ஒரு வாட்டி எமர்ஜென்சின்னு வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அதுக்கப்புறம் மாசத்துக்கு ரெண்டு தடவை மாதிரி வருவாங்க.”

“எதுக்காக வருவாங்க?”

“ஆல் டைப்ஸ் ஆஃப் இஞ்சுரீஸ்.”

“இஞ்சுரீஸ்-ன்னா எப்படி வந்துது?’

“டொமஸ்டிக் வயலன்ஸ்தான், வேறென்ன?”

“ரிப்போர்ட் பண்ணீங்களா?”

“கட்டுப்படி ஆகாது சார். இங்க வர்றவங்க பாதிப் பேரு இவங்கள மாதிரி வெளியூர்லேந்து வர்ற குவாரலிங் கப்புள்ஸ்தான். இந்த எடத்துக்கு அப்படி ஒரு ரெப்புடேஷனே இருக்கு. பீகார், பங்களாதேஷ்-லேந்து எல்லா வராங்க. நீங்க வேற ஏரியான்றதுனால உங்களுக்குத் தெரில. உங்களுக்கு ஃபுல் பேஷன்ட் லிஸ்ட் வேணும்னா கே4 ஸ்டேஷன்ல கேளுங்க. எஸ்.ஐ. டானியலை எனக்குத் தெரியும். இவங்க பேர்கூட அந்த லிஸ்ட்ல இருந்தாலும் இருக்கலாம், சொல்ல முடியாது. ஆனா போலீஸ் இதெல்லாம் கண்டுக்கிறதில்ல.”

* * *

குமாரின் அடுத்த நிறுத்தம், கொலையுண்ட தம்பதி ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு ஜாகை வகித்த வீடுகள். ஆனால் ஊரப்பாக்கத்தில் கிடைத்த அதே தகவல்களே அங்கும் கிடைத்தன. எப்போதும் கூச்சல், அடிதடி, அழுகை, புகார்கள், மிரட்டல்கள், கையூட்டுகள், ஹோமங்கள், பரிகாரங்கள், போலீஸ் கேஸ், பஞ்சாயத்துகள் என இருந்திருக்கிறது. சித்தி-ஆனந்தவல்லி திருமண உறவு ஆலோசகர்களைக்கூடப் பார்த்திருந்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகாமல் போன பின்னர் தற்போதுள்ள வீட்டுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்கள்.

குமாருக்குக் கொலையாளியை நெருங்கினாற்போல் தோன்றியது. ஆனால் எப்படி என்றுதான் அவருக்குப் புரியவில்லை. எவிடென்ஸ் ரூமுக்குச் சென்று வழக்கின் ஆதாரங்களை மேய்ந்துகொண்டிருந்தார். சித்தியின் நெஞ்சிலிருந்து மீட்கப்பட்ட கத்தியைப் பார்த்ததும் அவர் மூளையிலேயே ஒரு கத்தியைச் செருகியது போல் இருந்தது குமாருக்கு. லாக்கப்பில் இருந்த பெண்களிடம் குடும்பச் சுமைகளைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்த 114ஐ இழுத்துக்கொண்டு சம்பவ வீட்டுக்கு விரைந்தார் குமார்.

* * *

“என்ன சார், என்ன பிரச்சனை?” என்று கேட்டுக்கொண்டே பின்னால் வந்த நித்தியானந்தத்தைக் கண்டுகொள்ளாமல் குமார் நேராக சமையலறையில் நுழைந்தார். அன்னபூரணி மாலைச் சிற்றுண்டி கிளறிக்கொண்டிருந்தார்.

“ரீசன்ட்டா உங்க வீட்ல ஏதாவது காணாம போச்சா?” என்றார் குமார் அன்னபூரணியிடம்.

“இல்லியே சார்” என்றார் நித்தியானந்தம் முந்திக்கொண்டு.

“குறிப்பா கிச்சன்லேந்து.”

“கத்தியக் காணோம்” என்றார் அன்னபூரணி.

“இப்பகூட பாத்தனே, ஹால்-ல இருந்துதே. தேடினா கிடைச்சுரும்” என்றார் நித்தியானந்தம்.

அவரைத் தொடர்ந்து கண்டுகொள்ளாத குமார், கான்ஸ்டபிளிடம் கை நீட்டினார். 114 எவிடென்ஸ் ரூமிலிருந்து எடுத்துவந்த கத்தியைத் தந்தார்.

“இதுவா பாருங்க?”

அன்னபூரணி கத்தியை இருபக்கமும் திருப்பிப் பார்த்தார்.

“இதுதான். உங்ககிட்ட எப்படி வந்துது?”

“உங்க ஹஸ்பண்ட் கிட்ட கேளுங்களேன்.”

முகத்தில் ரத்தமெல்லாம் வடிந்து அடுப்பில் இருந்த ரவைக் கிச்சடியைத் தன்னை மறந்து வெறித்துக்கொண்டிருந்த நித்தியானந்தத்தின் பார்வை இன்ஸ்பெக்டரின் கையில் இருந்த கத்தியில் நிலைகுத்தியது. புறங்கையால் வாயை மூடிக்கொண்டு ‘வீல்’ என்று அலறினார் நித்தியானந்தம்.

“நான் சொல்றது சரியா இருக்கான்னு மட்டும் கன்ஃபார்ம் பண்ணுங்க. கொலை நடந்த அன்னிக்கி மாடி வீட்ல பெருசா ஒரு சத்தம் கேக்குது. உங்க சம்சாரம் என்னன்னு பாத்துட்டு வரச் சொல்லி உங்கள அனுப்புறாங்க. நீங்க சித்தி வீட்டு காலிங் பெல்லை அழுத்துறீங்க – கதவு கைப்பிடிலேந்து உங்க கைரேகைய அழிச்சிட்டீங்க, ஆனா காலிங் பெல்லை மறந்துட்டீங்க – ஸோ, சித்தி அரிசி மூட்டைதான் விழுந்திருச்சுன்னு உள்ளேந்து கத்தறாரு. ஆனா நீங்க சந்தேகப்படுறீங்க, ஜன்னல் கதவு உடைஞ்சிருக்குறத பாக்குறீங்க. கேப் வழியா பாக்குறீங்க. சித்தி மனைவியோட பாடியப் பாக்குறீங்க சித்திதான் அவர் சம்சாரத்தை கொன்னுட்டாருன்னு புரிஞ்சிக்கிறீங்க. திகைச்சுப் போய் பேசாம திரும்பி வந்துடுறீங்க. ஆனா உங்களையும் சித்தியையும் கம்பேர் பண்ணிக்கிறீங்க. சித்திக்கும் அவர் ஃபேமிலிக்கும் இருக்குற நல்ல பேரு காரணமாக உங்களுக்கு முன்னாடியே அவர் மேல பொறாமை இருந்திருக்கு. அவருக்கு இப்ப பொண்டாட்டி இல்ல-ன்றதும் அவரே கைப்பட அவர் பொண்டாட்டிய கொன்னுட்டதும் அந்தப் பொறாமைய டபுள் மடங்கு ஆக்கிருச்சு. அவரோட புது சந்தோஷத்தை அவர் அனுபவிக்கக் கூடாதுன்னு முடிவு பண்றீங்க. வீட்ல எல்லாரும் தூங்குனதும் உங்க வீட்டு சமையல் கத்திய கர்ச்சீப்ல சுத்தி வச்சுக்கிட்ட சித்தி வீட்டுக்குப் போய் கதவத் தட்றீங்க. அவர் எரிச்சலா கதவத் திறக்குறாரு. நீங்க சித்தி நெஞ்சுல கத்திய சொருவிக் கொல்றீங்க. கத்திய எடுத்துட்டா வேற யாரோ மூணாவது மணுஷன் கொன்னான்னு தெரிஞ்சிரும். அதுனால கத்திய சித்தி நெஞ்சுலயே விட்டுடுறீங்க. புருஷன் பொஞ்சாதி ஒருத்தர ஒருத்தர் கொன்ன மாதிரி அரேஞ்ச் பண்றீங்க. உங்க பொண்டாட்டிக்குப் புதுசா கத்தி வாங்கிக் குடுத்தா சந்தேகம் வரும்னு வாங்கிக் குடுக்காமயே இருக்கீங்க. நீங்க மட்டும் உங்க சம்சாரத்துக்குப் புதுக் கத்தி வாங்கிக் குடுத்திருந்தா உங்களைப் புடிக்க எனக்கு லேட்டாகியிருக்கும். ஏன்னா யாரும் கத்தரிக்கோலால பீன்ஸ் நறுக்கி நான் பாத்ததில்ல.”

நித்தியானந்தமும் அன்னபூரணியும் குமாரின் விளக்கத்தில் கட்டுண்டு கிடக்க, குமார் தொடர்ந்தார்.

“ஆனா நீங்க மூணு தப்பு பண்ணிட்டீங்க. முதல் தப்பு, காலிங் பெல்-ல கைரேகைய அழிக்கல. ரெண்டாவது, கத்தி. மூணாவது, சித்தி பொண்டாட்டிக்கு இடதுகைப் பழக்கம்-ன்றத மறந்துட்டீங்க. போஸ்ட்மார்ட்டம் வேற ரெண்டு பேரும் வேற வேற டைம்ல செத்திருக்காங்கன்னு சொல்லிருச்சு. எனிவே, நீங்க நினைக்கிற மாதிரி சித்தியும் ஆனந்தவல்லியும் சந்தோஷமா இல்ல. அவங்க வீக்கெண்ட்ஸ்ல காணாம போனதே ரகசியமா சண்டை போடுறதுக்குத்தான். நீங்க மட்டும் தலையிடலன்னா அவங்களே ஏதாவது ஒரு வீக்கெண்ட்ல அடிச்சுக்கிட்டு செத்திருப்பாங்க. இன் வியூ ஆஃப் தி ஃபோர்கோயிங், உங்களைக் கைது பண்றேன்.”

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar