திருட்டுக் கவிதை

in கட்டுரை, புனைவு

மொழிபெயர்ப்பாள நண்பர் லபக்குதாஸ் தொலைபேசியில் குமைந்தார்.

இடைநிலை பாத்தீங்களா?”

“பாத்தனே.”

“என்னோட மொழியாக்கம் படிச்சீங்களா?”

“இல்ல, இனிமேதான்…”

“அதுல முவம்மர் லிப்ஜான் கவித விட்டுப் போயிருச்சு.”

“லிப்ஜானா?”

“அரபுக் கவிஞர் லிப்ஜான். அருமையா எழுதுவாரு.”

“அருமையா ‘எழுதுவாரு’ன்னா இனிமேதான் அருமையா எழுதுவாரா?”

“சரி, ‘எழுதக்கூடியவர்’யா. போதுமா? அந்தக் கவிதைய ஆசிரியர் அமுக்கிட்டாருய்யா!”

“தென்றல் அப்டில்லாம் பண்ண மாட்டாரே!”

“நான் அந்தக் கவிதைய அனுப்பவே இல்லன்றாரு!”

“சரி, இன்னொரு வாட்டி அனுப்புறது.”

“இஷ்யூ க்ளோஸ் பண்ணிட்டாங்களாம்.”

இரு நாட்களுக்குப் பின்பு மீண்டும் வந்தது அழைப்பு லபக்குதாஸிடமிருந்து. இம்முறையும் அது தொலைபேசி அழைப்புதான்.

“லேட்டஸ்ட் மோனம் பாத்தீங்களா?”

“வாங்குறதில்ல. அதுல என்ன பிரச்சன?”

“நான் பண்ண முவம்மர் லிப்ஜான் கவிதைய வார்த்தைல்லாம் மாத்திப்போட்டுத் தன் பேர்ல போட்டுருக்காரு தென்றல்.”

“தென்றல்ராஜ்-ன்னே வந்திருக்கா?”

“இல்ல, மோனம் கபூர்-ன்ற பேர்ல போட்டிருக்காரு. என்னய்யா ஏமாத்து வேல இது!”

லபக்குதாஸ் பொங்க, என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை. தாளாத அதிர்ச்சியோடுதான் கேட்டேன்:

“யோவ், இதெல்லாம் உமக்குப் புதுசாய்யா?”

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar