குழாயைச் சரியாக மூடுவதில்லை

in சிறுகதை, புனைவு

கணேசுவின் சித்தியும் சித்தப்பாவும் ஊரிலிருந்து அவன் வீட்டிற்கு வந்திறங்கியிருந்தார்கள். பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தவர்கள் வந்தேவிடுவார்கள் என கணேசு எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம் தங்கி சென்னை கோவில்களுக்கும் கடற்கரைக்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். கணேசுவின் மகள்கள் சித்ராவுக்கும் அமுதாவுக்கும் பட்டுப் பாவாடை வாங்கி வந்திருந்தார்கள். சாப்பிட்டுவிட்டு சமையலைப் புகழ்ந்தார்கள். வாஞ்சையாக இருந்தார்கள்.

முதல் மூன்று நாட்கள் விருந்தாளிகளால் களை கட்டின. ஊர்க் கதை, உறவுக் கதை பேசியதில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்கள் நிறைவாகக் கழிந்தன. பெரியவர்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தங்கள் பிள்ளைகளின் அருமை பெருமைகளையே அதிகம் பேசினார்கள். கிடைத்த இடைவெளிகளில் காயத்ரி தன் மகள்களைப் பற்றிப் பாமாலை பாடினாள்.

நான்காம் நாள் காயத்ரி ஒன்றைக் கவனித்தாள். பாத்ரூம் (குளியலறை) குழாயை யாரோ மூடாமல் விட்டிருந்தார்கள். தண்ணீர்த் துப்பாக்கியிலிருந்து வருமளவு கொஞ்சமாக ஆனாலும் தண்ணீர் டைல்ஸ் தரையில் கொட்டிக்கொண்டிருந்தது. கணேசு இறுக்க மூடுவான். சித்ராவும் பாரதியும் இதில் அப்பாவை உரித்துவைத்திருந்தார்கள். சித்தி எதையும் பார்த்துப் பார்த்துச் செய்பவராகத் தெரிந்தார். ஆகையால் சித்தப்பாதான் சரியாக மூடாமல் போயிருக்க வேண்டும் என்று காயத்ரி கணக்கிட்டாள். இது இன்னும் சில முறை நடந்தது. பேத்திகளுக்குப் பட்டுப் பாவாடை வாங்கிக் கொடுத்ததற்காகக் குழாயை மூடாமல் விட்டுவிட முடியுமா?

“உங்கள் சித்தப்பா பாத்ரூம் குழாயைச் சரியாக மூடுவதேயில்லை. நீங்கள் அவரிடம் சொல்கிறீர்களா?” என்று கணேசுவுக்குக் காயத்ரி அன்புக் கட்டளையிட்டாள். கணேசுவுக்குத் தர்மசங்கடமாகிப்போனது. சித்தப்பாவுடன் கணேசுவிற்கு அவ்வளவு பழக்கம் இல்லை. சுட்டிக்காட்டினால் குத்திக்காட்டுவதாக அவர் எடுத்துக்கொள்ளக்கூடும். “நீதான் வாழைப்பழத்தில் ஊசி கோர்ப்பது போல் பேசுவாயே, அது போல் நீயே சொல்லிவிடேன்” என்றான் கணேசு. ‘இதைக்கூடவா செய்யத் துப்பில்லை?’ என்பது போல் அவனை முறைத்துவிட்டு விலகினாள் காயத்ரி.

அன்றிரவு சாப்பிட்ட பின் எல்லோரும் மொட்டை மாடிக்குப் போய் உட்கார்ந்தார்கள். அப்போது காயத்ரி தண்ணீர்ப் பிரச்சினை பற்றிப் பேச்சைத் தொடங்கினாள். “இப்போதெல்லாம் நிலத்தடி நீர் முன்பு போல் பம்ப்பில் ஏறி வருவதில்லை. தண்ணீரைத் தண்ணீர் போல் செலவழிக்க முடிவதில்லை. அதனால்தான் நாங்கள் குழாய்களை இறுக்க மூடிவிடுகிறோம். இல்லையென்றால் தண்ணீர் வீணாகிறது. மீண்டும் மோட்டாரை இயக்க வேண்டியிருக்கிறது. இந்தக் குழந்தைகளுக்குத்தான் பொறுப்பே இல்லை. பாத்ரூம் குழாயைச் சரியாக மூடாமல் விட்டுச் சென்றுவிடுகின்றன” என்றாள் காயத்ரி. “ஆமாமாம்” என கணேசு பலமாகத் தலையாட்டினான்.

“டைல்ஸில் தண்ணீர் கொட்டினால் அது காயாது. அதனால் பாத்ரூம் எப்போதும் ஈரமாகவே இருக்கும்” என்று தானே கண்டுபிடித்தது போல் சொன்னார் சித்தப்பா. “எங்கள் வீட்டிலெல்லாம் பாத்ரூமுக்கும் சிமென்ட் தரைதான். தண்ணீர் சீக்கிரம் காய்ந்துவிடும். தரை சொரசொரப்பாக இருப்பதால் வழுக்காது” என்றார் அவர். “இவர் என்னவோ சொல்கிறார். ஆனால் டைல்ஸ் போட்டால்தான் வீடு லட்சணமாக இருக்கும்” என்றார் சித்தி. காயத்ரி கணேசுவைப் பார்த்தாள். பிறகு பேச்சு ரியல் எஸ்டேட், வேலைவாய்ப்பு, நவீன வசதிகள் என்று மாறிவிட்டது.

ஐந்தாம் நாள் காலை ஐந்து மணிக்கு காயத்ரி தோளில் ஆடைகள், துவாலையுடன் குளிக்கக் கிளம்பினாள். பாத்ரூம் விளக்கைப் போட்டதும் குழாயிலிருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டாள். எழுந்தவுடன் முதல் வேலையாகக் குளித்துவிட்டு அதற்குப் பின்பே பல் தேய்க்கும் வழக்கமுள்ள கணேசு, வாஷ் பேசினில் பல் தேய்த்துக்கொண்டிருந்தான். “அந்தக் குழாயை சரியாக மூடாதது உங்கள் வேலைதானா?” என்று பொரிந்தாள் காயத்ரி. அவன் பல் தேய்த்து முடிக்கும் வரை பதிலுக்குக் காத்திருந்தாள். கணேசு வழக்கத்தைவிட அதிக நிதானத்தோடு எல்லாவற்றையும் செய்துவிட்டு, “காலையிலேயே ஆரம்பிக்காதே” என்று சொல்லி நகர்ந்தான். சித்தி, சித்தப்பா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். காயத்ரிக்கு அவர்களைப் பார்க்கப் பாதி ஏமாற்றமும் பாதி அனுதாபமுமாக இருந்தது. இன்னும் இரண்டு நாள் என்று சொல்லிக்கொண்டாள்.

 

(டிசம்பர் 2012இல் ஆனந்த விகடன் ‘பேயோன் பக்க’த்தில் வெளியானது)

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar