இப்படித்தான் ஒருமுறை…

in கட்டுரை

நள்ளிரவு அல்லது அதிகாலை ஒரு மணி இருக்கும். ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். விழா பத்தேகாலுக்கே பிசுபிசுத்துப் பதினோரு மணி சுமாருக்கு அடங்கியது. எழுத்துலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் காலம் கடந்தது தெரியவில்லை. கிளம்பும்போது மணி பன்னிரண்டு ஐம்பது இருக்கும். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த ஆட்டோவில் அநியாயக் கட்டணத்திற்கு ஏற, துரதிர்ஷ்டவசமாகப் பாதி வழியில் ஆட்டோ நின்றுவிட்டது. ஆட்டோ ஓட்டுநர் நான்கைந்து ஆட்டோக்களைக் கைகாட்டி நிறுத்த முயன்றார். ஒருவர்கூட நிறுத்தவில்லை. சரி, நடந்தே போய்க்கொள்கிறேன் என்று பாதிக் காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். பிறகு அவர் ஒரு ஆட்டோவைக் கைகாட்டி ஏறிச் சென்றுவிட்டது தனிக் கதை.

நடந்தே போய்க்கொள்கிறேன் என்றால் முக்கால் மணிநேர நடை. நள்ளிரவில் தனியாக நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். நாய்களும் சமூக விரோத விடலைகளும் தங்களை சக்திவாய்ந்தவர்களாக உணரும் நேரமது. அந்த நேரத்தில் நாமெல்லாம் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். எப்போது ஒரு மனிதன் நள்ளிரவில் ஒரு பொதுத் தெருவில் கடந்த சில நொடிகளுக்கு முன்பு பார்த்த நாயின் மூச்சிரைப்பைக் கற்பனை செய்துகொண்டு மயிர்க்கூச்செறிந்து விழியோரத்தால் லேசாகத் திரும்பிப் பார்க்காமல் நடக்க முடிகிறதோ அப்போதுதான் அந்த மனிதன் நள்ளிரவில் நிம்மதியாக நடமாட முடியும் என்று கருதுகிறேன்.

சிறிது தூரம் நடந்த பின் மஞ்சள் தெருவிளக்கொளியில் ஆளில்லாத தெருக்களின் தனிமை என் மீது கவியவில்லை – வயிற்றைக் கலக்கத் தொடங்கியது. சாட்சிகளின்றி எப்போது வேண்டுமானாலும் யாருடைய தாக்குதலுக்கும் ஆளாகக்கூடிய நிர்வாண நிலை. வியர்க்க விறுவிறுக்கக் கந்தசஷ்டிக் கவசம் சொல்லத் தொடங்கினேன். அதற்குள் தொப்பலாக நனைந்திருந்தேன் வேறு. கவசம் பாதியில் மறந்து பன்னிரு விழிகளிலேவிற்குத் தாவினேன். அது முடிந்து புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேவிற்குச் சென்று அதற்குப் பின்பு வேறு எதுவும் தெரியாமல் ஜனகணமனவுக்கு மாறி அதுவும் தீர்ந்துபோய் பராசக்தி வசனங்களுக்கு வந்தபோது தெய்வாதீனமாக என் தெருவில் நுழைந்திருந்தேன்.

சொந்தத் தெரு தந்த தைரியத்தில் மூச்சு சீராகி மிதப்பாய் மெல்லக் கால்வீசி நடந்தேன். விசாலமான தெரு அது. எனது பகுதி நாய்களுக்கு என்னைப் பழக்கம். ஐம்பது அடி நடந்தால் என் வீடு என்கிற நிலையில் எனக்கு நேர்ப் பக்கவாட்டில் இருந்த ஒரு வீட்டிலிருந்து ஓர் அலறல். பெண் குரல். வேறு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, எனக்கு ரத்தம் உறைந்தது. திருடனா? கணவனா? எலியா? கெட்ட கனவா?

அடுத்து ஓசை எதுவும் இல்லாததால் மெல்ல விலகி நடக்கத் தொடங்க, அதே வீட்டிலிருந்து டமார் என்று பெரிதாக ஒரு சத்தம். அது ஒரு “சிங்கிள் ஹவுஸ்” வீடு. ஓசையின்றி வீட்டருகே சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். கும்மிருட்டு. உள்பக்கத்திலிருந்து கண்ணாடிப் பொருட்கள், மரச் சாமான்கள் உடையும் சத்தம். வியர்வை, வாய் வறண்டுபோதல், மூச்சிரைப்பு, பூமி மீதான கால்களின் பிடிமானம் நழுவுதல் ஆகிய எல்லாம் ஒரே சமயத்தில் நிகழ, செல்பேசியை எடுத்து 100ஐச் சுழற்றினேன். உடனே இணைப்பு கிடைத்தது. ஆனால் சத்தமாக அல்லவா பேசித் தொலைக்க வேண்டும். உடனே இணைப்பைத் துண்டித்துவிட்டுக் கதவருகே சென்றேன்.

வருவது வரட்டும் என்று இருண்ட வீடு பாரதிதாசன் கணக்காய்க் கதவை ஓங்கித் தட்டினேன். சில நிரந்தர நொடிகளுக்குப் பின்பு உள்ளே விளக்கெரிந்தது. கதவு திறந்து சட்டையில்லாமல் லுங்கியுடன் ஒருவர் வெளியே வந்தார். முகத்தில் காடுள்ள மிருகம் என்று வர்ணிக்கத்தக்க மீசை-தாடிக்காரர்.

“யாரு?” என்றார் தூக்கம் கலைந்த எரிச்சலில் முரட்டுத்தனமாக. அந்த அலறலில் அவர் மட்டும் எழுந்தது ஆச்சரியம்.

நான் அவரது தோற்றத்தை உள்வாங்கி ஒரு மனப்பதிவை ஏற்படுத்திக்கொண்டு வாயைத் திறப்பதற்குள் அவருடைய மனைவி ஸ்தானத்தில் ஒரு பெண்மணி பின்னே வந்து “யாருங்க?” என்றார். இவர் சற்று முன்புதான் அலறி முடித்தவர் போல் தெரியவில்லை. எதுவும் பிரச்சினை இல்லை என்று பட்டது.

“அதான் இவரும் கேட்டாரு” என்றேன் அந்தப் பெண்ணிடம் புன்னகையுடன். கையில் தொலைக்காட்சி ரிமோட்டுடன் ஒரு பதின்ம வயதுப் பையன் வந்து சேர்ந்துகொண்டான்.

“உங்களுக்கு யார் வேணும்? எங்கேந்து வரீங்க?” மீசைதாடிக்காரர் அழுத்தமாகக் கேட்டார்.

“இல்ல சார், உங்க வீட்ல யாரோ அலர்ற மாதிரி சத்தம் கேட்டுது. அதான் என்ன ஏதுன்னு பாக்க வந்தேன்.”

“இங்க யாரும் அலறல. இதக் கேக்கத்தான் சட்டை பேன்ட்டுல்லாம் மாட்டிக்கிட்டு வந்தீங்களா?”

“இல்லல்ல சார், இது ஃபங்ஷனுக்காக மாட்னது. இப்ப கழட்டிருவேன்.”

மீசைதாடிக்காரர் திடீரென்று பொங்கினார். “அலோ! கெளம்புங்க. இங்க நிக்காதீங்க!”

“போலீசக் கூப்புடவா செவுள்ள விடவான்னு கேளுங்க.” நைட்டியில் இருந்த மனைவி சன்னக் குரலில் ஆலோசனை அளித்தார். இதென்ன புதுப் பிரச்சினை என்று நான் மீசைதாடிக்காரர் முகத்தைத் திகைப்புடன் பார்க்க,

“நீ சும்மாரு நான் பாத்துக்குறேன்” என்றார் மீசைதாடி. பிறகு என்னிடம் அமைதியாக, “கெளம்புங்க” என்றார். அமைதியான ஆட்கள் எப்போது வேண்டுமானாலும் வன்முறையில் இறங்கக்கூடும் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

“சார், நானும் இந்தத் தெருதான் சார்! தெனமும் இந்தப் பக்கமாத்தான் வாக்கிங் வருவேன்” என்றேன்.

“அப்டியா? நான் உங்களப் பாத்ததே இல்லியே?”

“லேட்டா எழுந்துக்குவீங்களா?”

“வீட்டு நம்பர் சொல்லுங்க?”

“நூத்தி எண்பது.”

“இந்தத் தெருவா?”

“இந்தத் தெருதான்னு சொன்னனே. நான் வரேங்க. அதான் ஒண்ணும் இல்லன்னு ஆயிடுச்சே. போய் நிம்மதியாத் தூங்குங்க” என்று தூக்க ஆசை காட்டி நகரத் தொடங்கினேன்.

“யோவ், இருய்யா” என்று அதட்டிய மீசைதாடிக்காரர் என் முதுகுக்குப் பின்னால் பார்த்தார். போலீஸ் ரோந்து ஜீப் வந்துகொண்டிருந்தது..

இந்த ஆள் தெருவில் இறங்கிக் கைகாட்டி ஜீப்பை நிறுத்தினார். முக்கால் மணிநேரத்திற்கு முன்பு இது போல் ஒரு ஆட்டோ நின்றிருக்கலாம்.

ஜீப்பிலிருந்து இறங்கிய எஸ்.ஐ. பாணி ஆளிடம் மீசைதாடிக்காரர் விண்டு வைத்தார்: “பாதி ராத்திரி வீட்டுக் கதவத் தட்டி ஒரே சத்தமா இருக்குன்றாரு.”

திகைத்துக் கைகளை விரித்த என்னிடம், “இங்க வாங்க சார்” என்றார் போலீஸ்.

‘சார்’ என்ற மரியாதை எனக்கு நம்பிக்கையையும் சமத்துவ உணர்வையும் அளித்தது.

“ஹலோ சார்” என்றேன்.

“எங்கேந்து வரீங்க?”

“ஆழ்வார்ப்பேட்டைலேந்து.”

“மணி என்ன தெரியுமா?”

“ரெண்டு இருக்கும்” என்றேன் தயங்கி.

“வாட்ச் கட்டிருக்கீங்கல்ல, பாத்துச் சொல்லுங்க.”

பார்த்தேன். 1.55.

“தெரியுதுல்ல? இந்த டைம்ல இங்க என்ன பண்றீங்க?”

“ஒரு மீட்டிங் முடிஞ்சி வந்திட்டிருந்தேன். இவுங்க வீட்லேந்து லேடீஸ் அலர்ற மாதிரி சத்தம் கேட்டுது. ஏதாவது பிரச்சினையான்னு பாக்கக் கதவத் தட்டுனேன், அவ்வளவுதான்.”

“அந்தாளு ஜன்னல் வழியா எட்டிப் பாத்துக்கினுருந்தாரு.” பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. வயிற்றில் புதிதாகப் புளி கரையத் திரும்பிப் பார்த்தால் எதிர்வீட்டு முதல் மாடி இருட்டு.

“எட்டிப் பாத்தியாய்யா?” என்று இறங்கினார் போலீஸ்.

“சார், இது தப்பான திசைல போயிட்டிருக்கு” என்று பதறினேன்.

“நீ தப்பான திசைல வந்துட்டு என்னய்யா பேசுற?” என்றார் மீசைதாடிக்காரர்.

“ஒரு மணிக்கு என்னய்யா மீட்டிங்கு? புளூ ஃபிலிம் பாத்துட்டு வரியா?”

“நான் ஒரு ரைட்டர். ஒரு புத்தக வெளியீட்டுக்குப் போயிட்டு வரேன். கவிதை வாசிப்பு, கலந்துரையாடல்…”

“நீ வாசிப்பியா?”

“நானும் வாசிச்சேன். வா-போ-ன்றத தவிர்த்துருவோமே.”

“எங்க, வாசி?”

“வாசிக்கிறதுன்னா… வயலின் மாதிரி கிடையாது. இது படிக்கிறது.”

“ஊது?”

எங்கே கவிதை வாசிக்கச் சொல்லிவிடுவாரோ என்று பயந்துகொண்டிருக்கையில் இந்த விநோத வேண்டுகோள் என்னைத் திக்குமுக்காட்டியது.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” என்று ஊதினேன்.

“சரி, இங்க எதுக்கு வந்தே?” என்றார் ஊதலில் தோல்வியடைந்த எஸ்.ஐ.

“ஆழ்வார்ப்பேட்டைலேந்து உஸ்மான் ரோடு வரைக்கும் ஆட்டோல வந்தேன். அங்க ஆட்டோ பிரேக்டவுன் ஆகி அங்கேந்து இவ்ளோ தூரம் நடந்து வரேன். இதே தெருலதான் வீடு.”

“என்னா நம்பர்?”

“ஒன் எய்ட்டி.” ஆங்கிலத்தில் சொன்னது படித்த திமிராகத் தெரியுமோ என்று அஞ்சி உடனே “நூத்தி எண்பது” என்றேன்.

எஸ்.ஐ.காரர் என்னை முறைத்தார். “ஒன் எய்ட்டின்னா எங்குளுக்குப் புரியாதா? வா.”

“நான் போய்க்கறேன் சார்.”

“நீ ஒன் எய்ட்டியா ஃபோர் டொன்ட்டியான்னு எனக்கெப்புடித் தெரியும்? நான் கூட்டுப்போறேன் வா.”

சம்பவத்தில் மூழ்கியிருந்ததில் சிறு கூட்டம் ஒன்று கூடியிருந்ததைக் கவனிக்கவில்லை. இப்போது கவனித்தேன். தினமும் பார்க்கும் விளங்காமூஞ்சிகள்தான். இவர்களைப் பற்றியெல்லாம் உருகி உருகி எழுதியிருக்கிறேன். பேத்தியைத் தவறான பள்ளியில் கொண்டு விட்ட தாத்தா, குழந்தைகளின் எதிர்காலத்திடம் தன் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்ட ஃப்யூச்சரிச இளம் தாய், ஏ.டி.எம். வாசலே முதியோர் இல்லமாகிப் போன காவல் கிழவர், இன்னும் மருத்துவர் ஆகும் கனவில் இருக்கும் மூதாட்டி என்று எல்லா உருப்படிகளும் என்னைத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. ஒருவர்கூட என்னைக் கவனித்ததில்லை போல. தினமும் தொலைக்காட்சியில் வந்து பல்லிளித்துக்கொண்டிருந்தால் இந்த நிலை மாறுமோ என்னவோ.

நிகழ்ச்சி நிரலில் அடுத்த கட்டமாக எஸ்.ஐ. என் வீடுள்ள கட்டிடத்தில் எல்லோரையும் எழுப்பி என்னை வீட்டுக்கு அனுப்புவார் என்று ஊகித்தேன். இதை நிறுத்தியே ஆக வேண்டியிருந்தது.

“சார், ஒண்ணுமே பண்ணாம எதுக்கு சார் அவமானப்படுத்துறீங்க? இந்தத் தெருவுல நான் முழிக்க முடியுமா? வேணும்னா ஏதாவது அட்ஜஸ்ட் பண்றேன்” என்று பர்ஸை எடுத்தேன்.

“ஏய்!” என்று எஸ்.ஐ. மிரட்டியதும் கஞ்சா கேஸாய் உணர்ந்து குறுகிப்போனேன். ஜீப்பை வருமாறு சைகை செய்தார். இரவு லாக்கப் தேசம் என்று தோன்றியது.

“ஒரு ஃபோன் பண்ணிக்கவா சார்?” என்றேன். அது ஒன்று இருந்தது.

“ஒரு ஃபோன்” என்றார் நபர்.

மனைவிக்குத்தான் செய்து சொன்னேன்.

“அவர்ட்ட ஃபோனைக் குடுங்க” என்றார் மனைவி. செல்பேசியை அவரிடம் கொடுத்தேன்.

எஸ்.ஐ. அலட்சியமாக வாங்கியவர், “ம்… ம்… ம்… அதச் சொல்லலியே அடடே. நீங்க விடுங்க, அவரு வந்துருவாரு” என்று சொல்லிவிட்டு செல்பேசியை என்னிடம் திருப்பிக் கொடுத்தார்.

“இன்னொரு வாட்டி பணம் குடுக்க ட்ரை பண்ணாத, புரிதா?”

“மாட்டேன் சார்” என்றேன் புரிதலுடன்.

ஜீப் மெல்ல எங்களருகே மிதந்து வந்து நின்றது. எஸ்.ஐ. கதவைத் திறக்கப் போனார்.

“நான் போலாமா?” என்றேன் தயக்கமாக. என் கவலை எனக்கு.

“போங்க சார், அதான் சொல்லிட்டனே, போங்க” என்றார் எஸ்.ஐ.

நான் எதுவுமே நடக்காதது போல், மீண்ட மரியாதை அளித்த உவகையில் அவரிடம் சொல்லிக்கொண்டு விடை பெற்றேன். நெருங்கிய உறவினர் எஸ்.ஐ.யிடம் என்ன சொன்னாரோ தெரியாது. ஆனால் அதற்குப் பின்புதான் எனக்கு நியாயமாகச் சேர வேண்டிய மரியாதை கிடைத்தது. ஏதாவது வாக்குவாதம் நடக்கும்போது இச்சம்பவம் பேச்சோடு கலந்து வரும்.

எஞ்சிய பயணம் அசுவாரஸ்யமாய்க் கழிந்தது. என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். வெறுப்பால் விகாரமடைந்த முகத்தில் திறந்த நிலையில் இருந்த கண்களால் என்னைக் குதறிவிடுவது போல் பார்த்துக் கதவைத் திறந்தார் நெருங்கிய உறவினர். எந்த விளக்கமும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்று புரிந்ததால் பேசாமல் போய்ப் படுத்துக்கொண்டேன்.

ஜன்னல் வழியே முழு நிலவு மந்தகாசமாகத் தெரிந்தது. நான் பெரிய இயற்கை விஷயமாக மதித்து நிறைய விதந்தோதி எழுதிய நிலாவுக்குக் கீழேதான் அத்தனையும் நடந்தது என்பது சுரீரென்று உறைத்தபோதுதான் அவ்வளவு நேரமும் அடக்கிவைத்திருந்த கழிவிரக்கக் கண்ணீர் பனிக்குடம் போல் வெடித்துக் கிளம்பியது. உள் ரூமின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு விம்மத் தொடங்கினேன்.

“சூ!” என்றார் மனைவி.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar