மணவாழ்க்கை: மேலும் கடிதங்கள்

in கடிதம்

அன்புள்ள சார்,

வாழ்க்கைத் துணை தொடர்பான ஒரு கடிதத்துக்கு உங்கள் பதிலைப் பார்த்தேன். என் பிரச்சனைக்கு நீங்களே தீர்வு என்று தோன்றியது. பிரச்சனை இதுதான் சார் – நான் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் தப்பாகிறது. சாதாரணப் பேச்சுகூட சண்டையில் முடிகிறது. எப்போது சனி-ஞாயிறு வருமோ என்ற கவலையிலேயே இளமை கழிகிறது. என்னதான் செய்வது? என் மனைவியை எப்படிப் புரிந்துகொள்வது?

இவண்

சூசை D.
தி.நகர்

அன்பின் சூசை D.,

பெண்களைப் புரிந்துகொள்ள முயன்று சிரமப்பட வேண்டாம். அவர்களே புரியவைத்துவிடுவார்கள். உங்கள் திருமணம் தொடங்கி ஆயுட்கடைசி வரை அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அதை அவர்கள் “மணவாழ்க்கை” என்பார்கள். கவலையே படாதீர்கள், இப்போது புரியாவிட்டாலும் இறுதியில் நீங்கள் பெண்கள் “ஸ்பெஷலிஸ்ட்”-ஆகத்தான் சாவீர்கள். சுமங்கலியாகச் சாவதன் ஆண் வடிவம் இது.

அன்புடன்
பேயோன்

* * *

அன்புள்ள பேயோன் சார்,

நான் உங்கள் நீண்டகால வாசகி. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் ஒரு இளைஞனின் வேதனைகளை ‘வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் ஒரு இளைஞனின் வேதனைகள்’ என்ற உங்கள் நாவலில் சிறப்பாக வருணித்திருந்தீர்கள். அதே கோணத்தில் உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்க விரும்புகிறேன்.

எனக்குப் பெரியோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே பெற்றோருடன் வளர்ந்ததால் அவர்கள் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருக்கிறேன். அவர்களை விட்டுப் பிரிந்து இரண்டு நாட்கள்கூட இருந்ததில்லை. அதே போல நானும் என் தம்பி, தங்கையும் இணைபிரியாத பாசம் உள்ளவர்கள். யாரோ ஒரு மூன்றாம் மனிதனுடன் இருப்பதற்காக இதுநாள்வரை வளர்த்த பாச உறவுகளை விட்டுச் செல்லலாமா? உலக நடைமுறை அதுதான் என்றாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை. இது விஷயத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்கலாம் என விரும்புகிறேன். தயவுசெய்து உதவவும்.

இப்படிக்கு
ஸ்ரீமதி

அன்பின் ஸ்ரீமதி,

உங்கள் உறுதியான அற உணர்வைப் பாராட்டுகிறேன். பெண்கள் திருமணமான பின்பு வேறொருவர் வீட்டில் குடியேறும் நிகழ்வுகளை நானும் பார்த்திருக்கிறேன். உண்மையில் அவை தவிர நான் வேறு எதையும் பார்த்ததில்லை. இதுதான் நம் நாட்டு இயற்கை நியதி.

ஒரு பெண் திருமணமானதும் அவளது அசல் சொந்தங்களைக் கைவிட்டு அன்னியர்களின் வீட்டில் புகுவது பிதுரார்ஜிதக் கலாச்சாரத்தின் (patriarchal culture) விளைபொருளாகும். கலாச்சாரமற்ற பண்டைய சமூகங்களில் இளைஞர்கள் வளர்ந்தவுடன் அவர்களை ராணுவத்தில் சேர்த்துப் போருக்கு அனுப்பிவிடுவார்கள். பெண் பிறந்தவீட்டை விட்டுப் புகுந்தவீடு செல்வதும் அதைப் போன்றதே. நமக்கென்று வீடு வாசல் இருக்கும்போது ஏன் இன்னொருவர் வீட்டுக்குப் போக வேண்டும்?

திருமணமாகிப் புகுந்தவீடு செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டில் என்ன நடக்கிறது? கணவனின் தாய் ஓய்வெடுக்க, அந்தப் பெண்ணே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. கணவனின் நானாவிதத் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. குடும்பப் பொறுப்பு என்ற பெயரில் ஒன்பது மாதம் குழந்தைச் சுமையை அவள் அனுபவிக்கிறாள். அதன் பின்பு தாயாகவும் பாடுபட வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் சம்பளம், போனஸ்கூடக் கிடையாது. நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலே இந்தக் கதிதான். மோசமான குடும்பத்தில் சிக்கினால் என்ன ஆவாள்? எப்போதாவது அவளது பெற்றோர் தவறாமல் வருடத்திற்கு ஒருமுறை நான்கைந்து மாதங்கள் அவளுடைய கணவன் வீட்டில் தங்கும்போது மட்டுமே ஏதோ சிறிது நிவாரணம் கிடைக்கிறது.

என்னைக் கேட்டால் பெண்கள் திருமணமான பின்பு பெற்றோருடனே இருக்க வேண்டும். அவர்கள் திருமணம் ஆனதையே காரணமாகக் கொண்டுகூட நிரந்தரமாகப் பெற்றோருடன் இருக்கலாம். அப்போதுதான் அந்த உறவு விட்டுப்போகாது. கணவன் எங்கும் ஓடிவிடப்போவதில்லை. ஒரு மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பினால் வந்து பார்க்கப்போகிறான். அல்லது ஏதாவது ஒரு வார இறுதியில் கணவன் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிவிட்டு வரலாம், சில புத்திசாலிப் பழங்குடிகள் மத்தியில் இந்தப் பழக்கம் இருக்கிறது. கணவன் உடன் இல்லாதிருப்பது முக்கியமானது. “Good fences make good neighbours” என்பார்கள் ஆங்கிலத்தில். இன்று நிலவும் கணவன்-மனைவிப் பிரச்சினைகளுக்கெல்லாம் வேலி தாண்டும் வெள்ளாடுகளே காரணம்.

திருமணம் என்ற பெயரில் இளம்பெண்களின் குடும்பங்கள் பிரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இது ஒரு மாபெரும் இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கெல்லாம் நிம்மதி.

அன்புடன்
பேயோன்

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar