‘இந்தா பிடி இன்னும் 50’ முன்னுரை

in கட்டுரை, கவிதை

இன்று தமிழில் கவிதை எழுதுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் ஒரே சமயத்தில் ஒரு கோடிப் பேர் சேர்ந்து எண்ண வேண்டியிருக்கும். சமையல் புத்தகங்களுக்கு இணையான எண்ணிக்கையில் கவிதைத் தொகுப்புகள் அச்சாகின்றன. சமைப்பவர்களே கவிதை எழுதும் கூத்தும் ஒரு பக்கம் நடக்கிறது (கவிஞர்கள் எல்லாம் சமைக்கிறேன் பேர்வழி என்று புடவை கட்டிக்கொண்டு இறங்கிவிட்டால் என்ன ஆகும்?).

சென்னைப் புத்தகக் காட்சி சமயத்தில் தமிழில் கடும் காகிதப் பஞ்சம் ஏற்படுவதாக எனது உளவுத் துறை நண்பர் ஒருவர் கூறுகிறார். தி.நகர், திருவல்லிக்கேணி பகுதிகளில் நிவாரண ஹெலிகாப்டர்களிலிருந்து ராட்சத காகித மூட்டைகள் வீசப்படுவதை நானும் பார்த்திருக்கிறேன். ஜனநாயக நாடு என்பதால் இன்னார் இத்தனை முறைதான் எழுதலாம் என்று வரம்புகள் இல்லை. எனவே வந்த பெயர்களே திரும்பத் திரும்ப வருகின்றன. வந்த கவிதைகளேகூட “நினைவிருக்கிறதா, அன்றைக்கு வேறு தொகுப்பில் பார்த்தோமே” என்று பல்லிளித்தபடி மீண்டும் வருகின்றன. திரும்பவும் ஓலைச்சுவடிக் காலத்திற்கே போய்விடலாம் போல் இருக்கிறது.

பத்து தொகுப்பு, பதினைந்து தொகுப்பு போட்டவனெல்லாம் இந்தக் கூட்டத்தில் தன்னுடைய தொகுப்பு காணாமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிற நிலைமைதான் இன்றைக்கு. சமாளிக்க முடியவில்லை. நான் எழுதத் தொடங்கிய காலத்தில் ப்ரெஸ் என்றால் பத்திரிகை. இன்றைக்கு அவனவன் தன்னுடைய கவிதைத் தொகுப்பைப் போட்டுக்கொள்ள சொந்தமாய்ப் பதிப்பகம் ஆரம்பிக்கிறான். 80 ரூபாய் விலை வைத்து உரிமையாய் 10% தள்ளுபடி வேறு தருகிறான். தேவையா? இதனால்தான் நல்லவர்கள் எல்லாம் இலக்கியத்திற்கு வரத் தயங்குகிறார்கள்.

சின்னப் பையன்கள் பலர் மூத்த கவிஞர்கள் நான்கு பேரைப் படித்துவிட்டு அவர்களைப் பிரதிசெய்து எழுதத் தொடங்குகிறார்கள். ஐம்பது உருப்படி சேர்ந்தால் தொகுப்பு போட்டு வெளியீட்டு விழா நடத்தி நடிகைகள், இயக்குநர்கள், லைக் போடுகிறவர்கள் என்று சம்பந்தம் இல்லாத ஆட்களையெல்லாம் கூப்பிட்டு வைத்துக் கும்மியடிக்கிறார்கள். இப்படி எத்தனை இளைஞர்கள் கவிதைத் தொகுப்பாளன் ஆகும் கனவில் தங்கள் சேமிப்புகளை அழிக்கிறார்கள் தெரியுமா? கேட்டுச் சொல்லுங்கள்.

பேயோன்
மார்ச் 2, 2014

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar