நம்மை மீறிய விஷயம்

in சிறுகதை, புனைவு

‘மலைக் குற மகளுடன் வாழு’ என ஆடியோ பிளேயரில் சூலமங்கலம் சகோதரிகள் வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

“அது ஒண்ணுதான் கொறச்சல்” என்று முணுமுணுத்தான் விநோத்.

“என்னாது?” என்றாள் சாந்தி.

“நீ போயிட்டு எப்ப வருவ?”

“நீங்க வர்றதுக்குள்ளாற வந்துருவேன். இவளுக்கு க்ளாஸ் இருக்கே” என்றாள் அவள். அதாவது 8 வயது மகள் ஜோதிக்கு ஸ்கேட்டிங் க்ளாஸ். ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டு என்னத்தைப் பிடுங்கப்போகிறாள் என்று கேட்டு ஒரு ஞாயிறு அரை நாளை வீணாக்கிக்கொண்ட பின்பு மகளின் ஸ்கேட்டிங் கல்வியில் விநோத் அதிக ஆர்வம் காட்டவில்லை. மனைவியின் உறவினர் வீட்டு விசேஷம் தவிர வேறு எந்தச் சூழ்நிலையிலும் தவற விடக் கூடாத வகுப்பு ஸ்கேட்டிங்குடையது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்திருந்தது.

அலுவலகத்திற்குக் கிளம்பும்போது வரும் ஆத்திர அவசரம் மாறாதிருந்தாலும் அன்றைய வேலை நாள் விநோதுக்குப் பொன்னாள். சாந்தியின் தந்தைவழிச் சித்தியோ யாரோ ‘வீக் டே’யாகப் பார்த்து உத்தரவு வாங்கியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை உயிரை விட்டிருந்தால் இவனும் அல்லவா கூடப் போக வேண்டும். மனைவிக்கு வடிகாலும் நிறைய தகவலும் கிடைக்கும். மகளுக்கு விளையாடக் குழந்தைகள் கிடைப்பார்கள். ஒரு ஓரமாகக் கையைக் கட்டிக்கொண்டு முகத்தை மையமாக வைத்துக்கொண்டு நிற்பதற்காக அவ்வளவு தூரம் போவானேன் என்பது விசேஷங்கள், கருமாதிகள் இரண்டிற்குமான விநோதின் வாதம்.

இருந்தாலும் வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை என்று விநோதுக்குத் தெரியும். கடைசி நிமிடத்தில் ஏதாவது நிகழ்ந்து தொலைத்துத் தானும் மனைவியுடன் சாவுக்குப் போக நேர்ந்துவிடலாம் என்ற புத்திசாலிப் பதற்றத்தில் அவசரமாகக் கிளம்பினான் விநோத்.

அலுவலகத்திற்குப் போன பின்பு விடுமுறையில் வேலை பார்ப்பது போல் ஒரு ‘ரிலாக்ஸை’ உணர்ந்தான் விநோத். கடைசியாக இப்படியொரு தருணம் வாய்த்தது எப்போது என்று நினைவுகளைக் கிளறித் தோல்வியடைந்தான். வழக்கத்தைவிட அதிகம் புன்னகைத்தான். துணை மேலாளர் செந்தில்வேல்கூட “என்னப்பா, ஒரே சிரிச்ச முகமா இருக்கே? ஆபீஸ்ல ஏதாவது செட் ஆயிருச்சா?” என்று கண்ணடித்து விசாரித்தார். “அட நீங்க வேற சார் வயித்தெரிச்சலக் கெளப்பிக்கிட்டு” என்றான் விநோத்.

மாலை ஏழு மணி போல் வீடு திரும்பிய விநோதுக்கு வீட்டில் நுழைந்ததும் தூக்கிவாரிப் போட்டது. சாந்தியும் அவனது மாமியாரும் திருமண வயது மைத்துனியும் சாவகாசமாய்க் கதை பேசிக்கொண்டு ஒரு கூடைக் கீரையை ஆய்ந்துகொண்டிருந்தார்கள். கூடத்தில் பெரும்பகுதி அவர்கள் வசம் போயிருந்தது. ‘ஆஹா, ஆஹாஹா!’ என்று இருந்தது அவனுக்கு. ‘சாந்தியின் சொந்தக்காரர்களா கொக்கா? செத்தும் கெடுக்கும் சீதக்காதிகள்’ என்று சபித்தபடி இருவரையும் பார்த்தான்.

“நல்லாருக்கீங்களா?” என்ற மாமியார் கேட்டபோது அவர் காலிலேயே விழுந்து ‘நீங்க வேண்டாமே ப்ளீஸ்!’ என்று அழுது குமுற வேண்டும் போல் இருந்தது விநோதுக்கு. ஆனால் அவனால் இயன்றதெல்லாம் ‘வந்துட்டீங்களா? சுத்தம்!’ என்ற புன்னகைதான்.

“என்ன இவ்ளோ லேட்டா வரீங்களே?” என்றாள் மைத்துனி அபத்தமாய்.

“இல்லியே, வழக்கமா வர்ற டைம்தான்” என்று இளித்த விநோத் படுக்கையறையை நோக்கி விரைந்தான். சாந்தி அவன் பின்னாலேயே சென்றாள்.

“உங்கம்மாவும் கோமதியும் வந்திருக்காங்களே, என்ன விசேஷம்?” மனைவியின் முகத்தைப் பார்க்காமல் சட்டையைக் கழற்றிக்கொண்டு கேட்டான் விநோத்.

“கோமு எங்கம்மாவ விட்டுட்டுப் போறதுக்காக வந்திருக்கா. காலைல போயிடுவா. எங்கம்மா நாலு நாள் இருப்பாங்க.”

“பலே.”

“என்ன பலே?” என்றாள் சாந்தி.

“சும்மாத்தான்” என்றான் வழக்கம் போல. அதற்கு மேல் பேசினால் வக்கீல் செலவு. வெளிப்படையாக எதிர்ப்பு எதுவும் வரும் வரை வீண் சண்டை வேண்டாம் என்கிற ரீதியில் சாந்தி வெளியேறினாள்.

ஜோதி எங்கிருந்தோ ஓடிவந்து விநோதின் கால்களைக் கட்டிக்கொண்டாள். “அப்பா, சித்தி, பாட்டி வந்திருக்காங்க” என்றாள் உற்சாகமாக. “வெவரம் கெட்ட ஜென்மம்” என்றான் விநோத் அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி. ஜோதிக்கோ ஒழுங்கான மறுமொழி வேண்டியிருந்தது. “சித்தி, பாட்டி வந்திருக்காங்கப்பா!” என்றாள் மீண்டும், அப்பனின் பரவசமின்மையைப் புரிந்துகொள்ள முடியாமல். “அதுல்லாம் நம்மள மீறுன விஷயம். நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது” என்றான் சன்னக் குரலில். “போப்பா!” என்று அவனைத் தள்ளிவிட்டு ஓடிப் போனாள்.

கோமதி ஒழுங்குப்பிள்ளையாக மறுநாள் காலை கிளம்பிப் போனாள். விநோதுக்கு அடுத்த சில நாட்கள் ரம்மியமாகக் கழிந்தன என்று சொன்னால் நேர்மையாக இருக்காது.

விநோதின் மாமியார் சர்வ வியாபகியாகத் தெரிந்தார். கழிப்பறை கலந்த குளியலறை அவன் வீட்டில். கடிகார நேரப்படி தோளில் துண்டும் கையில் சோப்பும் எடுத்துக்கொண்டு குளிக்கக் கிளம்பினால் மாமியார் மெல்லக் குளியலறைக்குள் புகுந்துகொண்டிருப்பார். காபி டம்ளரை சமையலறையில் வைக்கப் போனால் வழியில் காய்கறி வெட்டிக்கொண்டிருப்பார். டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும்போது கூடத்தைப் பெருக்குகிறேன் பேர்வழி என்று ஃபேனுக்கு பதிலாக டி.வி.யை அணைத்துவிடுவார். ஊருக்கு முன் தூங்கியெழுந்து பாத்திர சத்தத்தால் தூக்கத்தைக் கலைப்பார். அவன் கதவை முக்கால் மூடிவிட்டு உடை மாற்றும்போது “ஜோதி…” என்று அன்பாக அழைத்துக்கொண்டே கதவைத் திறந்து எட்டிப் பார்ப்பார். பரிமாறும்போது ‘போதும்’ என்று சொன்ன பிறகு இன்னும் ஒரு கரண்டி விழும். மைத்துனி இதற்கு நேரெதிர். முக்கால் கரண்டி விழுவதற்கு முன்பே “போதுமா போதுமா?” என்பாள். மாமியாருக்குக் காய்கறிகளைச் சிறிதாக நறுக்க வராது. ஓட்டல் போல் முழுக் காயையும் பிளந்து சாம்பாரில் போட்டுவிடுவார். கொசுவின் ரீங்காரத்திற்கு ஆம்ப்ளிஃபையர் வைத்த மாதிரி சகிக்க முடியாத குரல். எல்லாவற்றையும்விட, விநோத் வீடு திரும்புவதற்கு முன்பே பாட்டியுடனான நடவடிக்கைகளில் ஜோதி ஐக்கியமாகிவிடுவாள். கூப்பிட்டால் வர மாட்டாள். ஒரு சின்ன தகவலை, சந்தோஷத்தைப் பகிர மனைவி உடன் இல்லாமல் அம்மாவில் தொலைந்திருப்பாள். இதெல்லாம் போக, அவரை அத்தை என்று கூப்பிடுவதா, அம்மா என்று கூப்பிடுவதா? மேடத்தில் விநோதுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் சாந்திக்கும் மேடத்திற்கும் இருக்கக்கூடும்.

மூன்றாம் நாள் இரவு தூங்கும் நேரத்தில் சாந்தி விநோதிடம் ஒன்றைச் சொல்லத் தொடங்கினாள். இறந்துபோன தூரத்துச் சித்திக்கு ஒரே மகன். அவன் சகோதர சகோதரிகள் யாரும் இல்லாமல் தனியாக அழுதுகொண்டிருந்த காட்சி சாந்தியின் மனதில் ஆழமாகத் தைத்துவிட்டது. அவள் அம்மா மனதிலும் தைக்காதிருக்குமா? முதலில் அங்கேதான் தைத்திருக்கும். ‘உன் குழந்தையைத் தனியாக விடாதே. இன்னொரு குழந்தை பெற்றுக்கொள். நாளைக்கு எப்படி இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது’ என்று மாமியாரும் ஓதியிருக்கிறார். சாந்தி இதைப் புத்தம்புதிய விஷயம் போல் நீட்டிமுழக்கியதைக் கையாலாகாத எரிச்சலுடன் விநோத் பொறுமையாகக் கேட்டான்.

உண்மையில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய பேச்சு ஜோதிக்கு மூன்று வயது நிரம்பியபோதே தொடங்கிவிட்டிருந்தது. ஜோதி இன்னும் சிறு குழந்தையாக இருந்த நாட்களை அடிக்கடி  சிறிது ஏக்கத்துடன் நினைத்துப்பார்த்த விநோதுக்கு அது அற்புதமான வாய்ப்பு போல் இருந்தது. இன்னொரு குழந்தை என்றால் பிரசவ வேதனையை அனுபவிக்கப்போவது தானல்ல என்பதால் அவன் ஆர்வத்தை அவ்வளவாக வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. இருந்தாலும் துக்கடா வேலையை வைத்துக்கொண்டு இன்னொரு குழந்தைக்கு ஆகும் செலவைச் சமாளிக்க முடியாது என்றான். ஆனால் சாந்தி இன்னொரு குழந்தைக்குப் பிரசவ வேதனையை அனுபவிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தாள். எல்லா செலவையும் வரும்போது சமாளிக்கலாம் என்றாள். தயக்கத்திலேயே நாட்கள் ஓடின. பிறகு விநோத் நிச்சயமாகக் குழந்தை வேண்டும் என்றான். அப்போது சாந்திக்குப் பண பயம் வந்துவிட்டது. அவள் நண்பர்களும் உறவினர்களும் எம்.எல்.ஏ.க்களைப் போல் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். தங்களிடம் இருந்ததையும் தாங்கள் செய்த காரியங்களையும் ஃபேஸ்புக்கில் பகிரவும் செய்தார்கள். “பாருங்க, என் கசின் பேங்காக் போய் ஃபோட்டோஸ் போட்டிருக்கா”க்கள் மலிந்தன. “போடாம விட்ருவாங்களா? போறதே அதுக்குத்தானே?”க்களும்தான்.

இப்போது திரைக்கதையில் அம்மா நுழைந்திருந்ததால் திடீரென்று சாந்திக்குக் குழந்தை வெறி வந்துவிட்டது. இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் அது முதல் குழந்தைக்குச் செய்யும் துரோகம் போலவும் தெய்வக் குற்றம் போலவும் ஆகியிருந்தது. தான் சொன்னபோது கேட்காமல் யாரோ சொல்லி வழிக்கு வருவது விநோதுக்கு உறுத்தியது. இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்று சமாதானம் ஆனான். ஆனால் சம்பள உயர்வு (“வர்ற டைம்தான்”) வந்தால்தான் இன்னொரு குழந்தையைக் கையாளத் தகுதி வரும் என்று தோன்றியது. நீண்டநேர விவாதம், செலவுப் பட்டியல்கள் எல்லாம் முடிந்த பின்பு சம்பள உயர்வுதான் பதில் சொல்ல வேண்டும் என்று தம்பதி சமேதராய்த் தீர்மானித்தார்கள்.

நான்காம் நாள் சொன்னபடி மாமியார் கிளம்பவில்லை. பல சமயங்களில் இப்படி ஆகிவிடுவதுண்டு. ஆறாம் நாள் மதியம் புறப்படுவதாக சாந்தி ஆறுதல் அளித்தாள்.

ஐந்தாம் நாள்தான் அலுவலகத்தில் செந்தில்வேல் விநோதைத் தன் கேபினுக்குக் கூப்பிட்டார். ‘விரைவில் ப்ரொமோஷனை எதிர்பார்’ என்பதே அவருடைய நீண்ட, பெருந்தன்மை பொங்கிய உரையின் சாராம்சமாக இருந்தது. பதவி உயர்வு என்றால் சம்பளம் பதினோராயிரம் போல் உயருமாம். கூடுதல் பொறுப்புகள் உறுதி, அவ்வப்போது வெளியூர்ப் பயணங்கள் இருக்கும். பயணங்கள் வருமானகரமானவை. அவன் கேட்டதை அவனால் செரிமானிக்க முடியவில்லை. இப்போது அவனுக்கு வயது முப்பத்தியாறு. நாற்பது வரும்போது வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்றும் அப்போது தேட வேண்டிய வேலைக்கு இப்போதே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். சுயதொழில் யோசனைகளுக்காக சோம்பலாய் கூகுளைத் தேடுவதும் உண்டு.

“நாளைக்கு லெட்டர் வந்துரும், ட்ரீட் குடுக்க ரெடியா இருங்க” என்றார் செந்தில்வேல். கேபினை விட்டு வெளியே வந்த விநோத் வேறு ஏதோ ஓர் இடத்திற்கு வந்துவிட்டது போல் உணர்ந்தான். ‘நமக்கா இதெல்லாம்?’ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. திடீரென்று நடுத்தர வர்க்கத்திலிருந்து உயர் நடுத்தர வர்க்கத்திற்கு வந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டான். இனி அவன் கோட்டு-டை கூடப் போடலாம். அந்த இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம். “நாம புவர் பீப்பிளா?” என்று கேட்கும் மகளிடம் “கொஞ்சம் ரிச்சுதான்” என்று சொல்லிக்கொள்ளலாம். ஏன், அவளை இன்னும் அதிகம் கையைக் கடிக்கும் பள்ளியில் சேர்க்கலாம். கிரெடிட் கார்டு கடனை, வாகனக் கடனை அடைக்கலாம். சிக்கனத்திற்காகக் குறைத்த டீ-சிகரெட்டை அதிகரிக்கலாம். நீண்டகாலமாகத் தள்ளிப்போட்ட ‘ஃபுல் பாடி செக்கப்’பை செய்துகொள்ளலாம். புதிய முதலீடு ஏதேனும் தொடங்கலாம். கொஞ்சம் சிக்கனமாக இருந்தால் ஏதாவது சுற்றுலா கிளப்பில் சேரலாம். உரிமையாய்க் கொஞ்சம் அகலக் கால் வைக்கலாம்…

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான திட்டங்களோடு வீடு திரும்பினான் விநோத். பதவி உயர்வு உறுதிப்படும் வரை சாந்தியிடம் அது பற்றி மூச்சு விடக் கூடாது என்று முடிவெடுத்திருந்தான். ஒன்று கிடக்க ஒன்று ஆகி ஒன்றும் இல்லை என்று ஆகிவிட்டால் அது அவனுடைய குற்றம் என்று ஆகி அவன் நிம்மதி போய்விடும்.

வழக்கம் போல் ஜோதி தூங்கியதும் சாந்தி புதுக் குழந்தை பற்றிப் பேச்செடுத்தாள். ஐஸ்வரியம் வரப்போகிறது என்றதும் ஒரே குழந்தையை வைத்துக்கொண்டு பணத்தை மிச்சப்படுத்தி இன்னும் சொகுசாக வாழலாமே என்று விநோதுக்கு ஒரு ஓரமாகத் தோன்றியது. ஆனால் இரண்டாம் குழந்தை ஆசை அதைவிட வலுவாக இருந்தது. சம்பள உயர்வு வந்ததும் கருத்தடைச் சாதனத்தை அகற்றிவிட்டு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்வதாக சாந்தி பிரகடனம் செய்தாள். இந்த முன்னேற்பாடுகளைக் கேட்க விநோதுக்கு பயமாக இருந்தது. எதையும் நிச்சயமாகக் கருத வேண்டாம் என்று எச்சரித்தான். “வரும்தானே?” என்றாள் சாந்தி. “கண்டிப்பா வரும்” என்றான் விநோத். அப்புறம் என்ன?

விநோதின் மனதில் இன்னொரு புதிய கவலை. ‘கர்ப்பமாக இருக்கும்போது உன்னை யார் பார்த்துக்கொள்வார்கள், குழந்தை பிறந்த பின்பு ஜோதியையும் கவனித்துக்கொள்ள வேண்டுமே’ என்றான். விநோதின் தாய் அவனுடைய திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டார். தந்தை திருமணத்திற்குப் பின்பு போயிருந்தார். தங்கைகள் இருவர் வெளி மாநிலங்களில் மூழ்கியிருந்தார்கள்…

“ஏன், எங்கம்மா இருக்காங்களே!” என்றாள் சாந்தி. உயரே மௌன சாட்சியாகச் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி மடேர் என்று தலை மேல் விழுந்தது போல் இருந்தது விநோதுக்கு. “அவங்க ஃபுல்லா இருந்து பாத்துக்குவாங்க. நல்லா கேட்டீங்க. அவங்க எதுக்கு இருக்காங்க?” என்றாள் அவள் மேற்கொண்டு. அதே கேள்வி அவனுக்கும் தோன்றியதுண்டு. ஆனால் அதற்கு அர்த்தமுள்ள பதில் எதுவும் அவனுக்குக் கிடைத்ததில்லை. சாந்தியின் பதிலில் அவனுக்குத் திருப்தி இல்லை. வேதனை இருந்தது எனலாம். “ஆமாம்ல” என்றான்.

அன்றிரவு விநோத் எவ்வளவு புரண்டு படுத்தாலும், போகுமிடமெல்லாம் மாமியார் குறுக்கே வரும் காட்சியையும் ஜோதிக்கு சடை பின்னும் காட்சியையும் மனக்கண்ணிலிருந்து நீக்க முடியவில்லை. அற்ப விஷயம், ஆனால் இதில்தான் எவ்வளவு சிக்கல்! இதையும் மீறி மனித உயிரினம் உயிர் பிழைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் விநோத். வாழ்க்கை எனும் சுழித்தோடும் காட்டாற்றுக்குப் போட்டியாக மனிதனும் முகத்தைச் சுழிக்க முடியுமா? அரிதாகச் சில சமயங்களில் அவன் இப்படித் தத்துவமாக இறங்கிவிடுவதுண்டு. நகைமுரணாக, சமையலறையில் மாமியாரின் அதிகாலைப் பாத்திர உருட்டல்தான் அவன் சிந்தனையைக் கலைத்தது.

மறுநாள் விநோத் தன் சோற்றுப் பையை அருகில் போட்டுவிட்டு சீட்டில் அமர்வதைத் தனது திறந்த கேபினிலிருந்து பார்த்துவிட்ட செந்தில்வேல், “விநோத்!” என்று அங்கிருந்தே கத்தினார். விநோத் அவரது அறைக்கு ஓடினான். “கதவ மூடு” என்றார் அவர். கதவை மூடியதும் மேஜை மேல் கிடந்த திறக்கப்படாத உறையை அவனிடம் நீட்டினார். விநோத் உறையைப் பிரித்துக் கடிதத்தைப் பார்த்தான். “Congratulations! Based on your sustained performance…” அதற்கு மேல் படிக்க அவனுக்குத் தேவை இருக்கவில்லை. செந்தில்வேல் ஊகித்த தொகையைவிட இரண்டாயிரம் அதிகமாகவே இருந்தது. பேசிக் தொகையே சம்பளமாகச் சொல்லிக்கொள்ளும் அளவு கணிசமானது.

விநோத் அது கனவா நனவா என்று ஒரு கணம் யோசித்தான். அவன் வாய் உலர்ந்தது. குபீரென்று வியர்த்தது. கைகள் நடுங்கின. இதயம் கட்டுப்பாடின்றி அடித்துக்கொண்டது. பிறகு அந்தக் கடிதத்தை சுக்குநூறாகக் கிழித்து செந்தில்வேலின் தலை மீது அபிஷேகம் போல் கொட்டினான். குப்பைமேனியாக அதிர்ச்சியில் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த துணை மேலாளரிடம் விரக்தியாகப் புன்னகைத்துச் சொன்னான், “இந்த ப்ரமோஷனே எனக்கு வேணாம் சார்.”

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar