கும்பராசி அன்பர்களே…

in கட்டுரை, பிற

கும்பராசி அன்பர்களே, உங்களுக்காக ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன். கதாபாத்திரங்களின் பெயர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, வேதங்கள், சக்தி காரியாலயம், பெரிய புராணம், திருமந்திரம் போன்ற சக்திவாய்ந்த புனித நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எனவே குறிப்பிட்ட விக்னங்களுக்கான பரிகாரங்களைக் கருத்தில் கொண்டு அத்தியாயங்களை எழுதுகிறேன்.

உதாரணமாக, திருமணத் தடை இருந்தால் தினமும் காலையில் குளித்துவிட்டு 4ஆம் அத்தியாயத்தைப் படித்துவர தடையானது மேகம் போல் விலகி அற்புதமான மணவாழ்க்கை சித்திக்கும். இந்த அத்தியாயத்தில்தான் கதாநாயகனும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவனுமாகிய விருச்சிக லக்னத்துக் கும்பராசிக்காரனாம் மூர்த்தியை (பெயரே மூர்த்தி) கொல்ல வருபவர்கள் தவறுதலாக அவனது நண்பனைக் கொல்கிறார்கள். இதில் எவ்வித சுகவீனங்களுக்கும் இடமளிக்காத மூர்த்தியின் ஜாதக நிலையும் மனைவி காயத்ரியின் (விருச்சிக ராசி, துலா லக்னம்) தாலி பலமும் புலனாகின்றன.

வேலைத் தடை உள்ளவர்கள் 15ஆம் அத்தியாயத்தை அன்றாடம் காலையிலும் மாலையில் விளக்கேற்றிய பின்பும் படிக்கலாம். இந்த அத்தியாயத்தில் மூர்த்திக்கு சத்யநாராயணன் என்ற தனியார் நிறுவன அதிகாரி இன்டர்வியூ நடத்தி துபாயில் வேலை கிடைக்கச் செய்கிறார். பாஸ்போர்ட், விசா லக்னங்கள் அனைத்தும் வெவ்வேறு கிருஷ்ண பக்ஷம் சுக்ல பக்ஷம் போன்ற அம்சங்களைச் சுற்றி நீக்கப்படுகின்றன. இது எளிய பரிகாரம்.

எனக்கு வேண்டியவர்கள் சிலர் கும்ப ராசிக்காரர்களாக இருப்பதால் அவர்களுக்காக இதை எழுதியுள்ளேன். லாப வாய்ப்பு இருப்பதால் நாவலை நானே அச்சிட்டு வெளியிட அரசு மானியம் கேட்டிருக்கிறேன். என் நேரப்படி அது கண்டிப்பாகக் கிடைக்கும் என்று என் வாசகர் ஆரூட சாம்ராட் ஜோதிடமணி டாக்டர் திரு. வை. ராஜாங்கம் M.A., B.L. உறுதியளித்திருக்கிறார்.

மற்ற ராசி அன்பர்கள் சன்னதி மூடப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொள்ள வேண்டாம். பரிகாரங்கள் அவர்களுக்கும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளன. அடுத்து ஹெச்.ஜி. வெல்ஸின் War of the Worlds அறிவியல் புதினத்தைத் தழுவி அறிவியல் புனைவு ஒன்றையும் எழுதவிருக்கிறேன். இது நவக்கிரகங்கள் அருள் பாலிப்பை நல்கக்கூடியதாக இருக்கும்.

»பிற்சேர்க்கை

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar