மழைப் பொருமல்

in கவிதை

சிறுநீர் கழித்துவிட்டுக்
கடைசியில் உதறுவது போல்
கொஞ்சமேதான் பெய்கிறதிந்த மழை
நாளுக்கு ஐந்து நிமிடம் பத்து நிமிடம்
அதிகம் போனால் ஒரு மணிநேரம்
அடேயப்பா, ஒரு மணிநேரம்!
ரொம்ப நன்றி சார்,
நிறைய பெய்துவிட்டீர்கள்
இப்போது நீங்கள் போகலாம்
வீட்டில் தேடப்போகிறார்கள்.

மழை என்று பெய்வது
நமக்கும் விவசாயிகளுக்கும்
(நாம் விவசாயி அல்ல;
எந்த விவசாயி கவிதை எழுதுகிறான்?)
தண்ணீரை வாரிக் கொடுக்கவா?
இல்லையில்லை, நல்ல கதை!
கத்தரி வெயிலில் என்னால் இயன்றது
இவ்வளவுதான் என்பது போல்
பம்மிப் பதுங்கிக் கத்தரி போனதும்
எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோமோ என்று
பதுக்கிவைத்த வெக்கை தனை
உமிழ்ந்து எங்களை அவிக்கவல்லவா
ஆடுகிறதுன் குடுமி?

சாலை சகதியாயிற்றா? ஆம்.
பேண்ட் கால் சேறாயிற்றா? ஆம்.
உலரும் துணி நனைந்தாயிற்றா? ஆம்.
குடைகள் விரிந்தாயிற்றா? ஆம்.
பாதைவாசிகள் ஒதுங்கியாயிற்றா? ஆம்.
குட்டைகள் முளைத்தாயிற்றா? ஆம்.
கொசுக்கள் பூத்தாயிற்றா? ஆம்.
மாடுகள் நனைந்தாயிற்றா? ஆம்.
போக்குவரத்து நின்றாயிற்றா? ஆம்.
நீர்ப்போக்கில் சாக்கடை சேர்ந்தாயிற்றா? ஆம்.
டீச் சகிதம் புகை ஊதியாயிற்றா? ஆம்.
தவிர்க்கவியலா மழைக் குளிர்ச்சி
காற்றிலே உரசியாயிற்றா? ஆம்.
இடமில்லாக் குடைகளில் குழந்தைகளை
வீடு சேர்த்தாயிற்றா? ஆம்.

அமர்க்களம், எல்லாம் சரியாக இருக்கிறது.
நாளை வா, நாளை மறுநாளும் வா
ஆனால் பட்டியலில் எதையும் விட்டுவிடாதே
இப்போதே அடுப்பை அணைத்துவிட்டால்
நவம்பர் வரை என்னத்தைச் செய்ய?

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar