நூல் அறிமுக உரை: ஆதி கிரணம்

in உரை

வளரும் இளம் எழுத்தாளர்களில் ஒருவரான கோவிந்த் சீதாராம் தனது முதல் நாவலுக்கான வெளியீட்டுக் கூட்டத்தில் அவரது நாவலைப் பற்றி நான் அறிமுகப்படுத்திப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது. காரணம், எழுதுவதற்கு உள்ள நேரம் படிப்பதற்கு இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அந்த நேரத்தில் எழுத வேண்டிய வேலை இருக்கிறது. இதை அவரிடம் சொன்னபோது அவர், பரவாயில்லை, நீங்கள் வந்து மேடையில் நின்றாலே போதும் என்றார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மூத்த எழுத்தாளர்களின் கடமை என்று நினைக்கிறேன். இது மிகச் சாதாரண சிந்தனை. இருந்தாலும் நினைக்கிறேன்.

கோவிந்தின் ‘ஆதி கிரணம்’ நாவலை நான் படிக்கவில்லை. நாவல் எது பற்றியது என்று சொன்னால் அறிமுக உரைக்கு உதவிகரமாக இருக்கும் என்று கோவிந்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் அதைச் சொல்லவோ என்னவோ என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினார். ஆனால் அந்த சமயத்தில் எனக்கு அதைவிட முக்கியமான வேறொரு அழைப்பு வந்ததால் நான் அவருடையதைத் துண்டித்துவிட்டேன். இருந்தாலும் நஷ்டமில்லை. இந்த மேடைக்கே வந்தாயிற்று.

கோவிந்த் அனுப்பிய புத்தக பார்சல் இன்னும் பிரிக்கப்படாமல் மேஜை மேல் இருக்கிறது. ஒரு பிரிக்கப்படாத பார்சலுக்குரிய மர்மத்துடன் இருக்கிறது. அனுப்பியவர் கோவிந்த் என்பதும் அவர் இந்தக் கணத்தில் இன்ன முகவரியில் வசிக்கிறார் என்பதும் மட்டுமே நிச்சயம். உள்ளே என்ன இருக்கிறது என்பது பிரித்துப் பார்க்காத வரை உத்தரவாதம் இல்லை. கோவிந்த் தன்னுடைய முதல் நாவலை அதில் வைத்து எனக்கு அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார், அப்படியே நினைத்துக்கொண்டும் இருக்கிறார். எனக்கு அவரைப் பழக்கம் என்பதால் நானும் அவரை நம்புகிறேன். அவர் பெரிய பொய்களைச் சொல்லுபவர் அல்ல. ஆனால் அதனுள் எது வேண்டுமானாலும் இருக்கக்கூடும்.

இதோ, இதுதான் அந்த பார்சல். இதற்குள் என்ன இருக்கலாம்? ஒரு வண்ணத்துப்பூச்சி – எடுத்தவுடனே அதுதான், ஒரு வானவில் – இதுதான் வழக்கமாக அடுத்த ஐட்டம், ஒரு சிட்டுக்குருவி, ஒரு கடல், ஒரு பூ, ஒரு தோட்டம், ஏன், ஒரு தவளை, ஒரு அணில் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். மர்மம் என்கிற விசயம் இயற்கையாகவே தான் மறைத்துவைத்திருக்கும் பொருளைப் பற்றிய மிகையான எதிர்பார்ப்புகளைத் தூண்டக்கூடியது. திறக்கும் வரைதான் மர்மத்தின் ஈர்ப்பு. திறந்து பார்த்தாலோ – அதில் கடலே இருந்தாலும், சே, இவ்வளவுதானா என்று ஏமாற்றமடைந்து கொட்டிவிடுவோம். இதுதான் மனித இயல்பு. அல்லது இதுவும்கூட மனித இயல்பு என்று சொல்லலாம். ஏனென்றால் மனித இயல்புகள் நிறைய உண்டு. ஒன்றை மட்டும் மனித இயல்பு என்று சொன்னால் மனித ஒற்றைப் பரிமாணமுள்ள ஆளாகிவிடுவான். அது சௌகரியப்படாது.

‘ஆதி கிரணம்’ பார்சல் இப்படியானதொரு மர்மத்தைத்தான் எனக்குத் தருகிறது. பார்சலைக் கையில் தூக்கிப் பார்க்கும்போது தோராயமாக முன்னூறு கிராம் இருக்கும் என்று தோன்றுகிறது. மதிப்புரைக்கு அனுப்பப்பட்டது என்பதால் இரு பிரதிகள், தலா 150 கி. எனலாம். எனது பல்லாண்டு கால நவீன இலக்கிய வாசிப்பு அனுபவத்தில் 150 கிராமில் அட்டையைச் சேர்க்காமல் கிட்டத்தட்ட 180 பக்கம் பிடிக்கும். அஞ்சல் தலை, அஞ்சலக முத்திரை மற்றும் எழுதப்பட்டதில் உள்ள மைகள், பார்சல் கட்டப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நூல் போன்ற விசயங்களையும் சேர்த்துக்கொண்டால் தைரியமாக 176 பக்கம் சொல்லலாம்.

கோவிந்தின் இந்த நாவலைப் படிக்கவில்லையே தவிர இது மாதிரிப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கமுள்ள நண்பர்களிடம் விசாரித்ததில் இவர் என்ன விதமாக எழுதக்கூடியவர் என்பது பற்றி மசங்கலான ஒரு யூகத்தை ஒப்பேற்றிக்கொள்ள முடிந்தது. தலைப்பைப் பார்த்தால் ஏதோ இதிகாச/புராணக் கதையைத் தன்னுடைய உபயோகத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் போலும் என்று தோன்றியது. இவர் மிகவும் கனமான நடையில் எழுதக்கூடியவராம் – நண்பர்கள் சொல்கிறார்கள். கனமான நடை என்றால் எனக்கு யானைக்கால்தான் நினைவுக்கு வரும். இது பழைய வியாதி. இப்போது எழுதுபவர்கள் யானைக்கால் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எங்களைப் போல யாராவது இளைஞர்களின் நூல் அறிமுக உரைகளில் சொன்னால்தான் உண்டு.. ஆனால் இப்போது இந்த இளைய சந்நிதியினர் எல்லோரும் இந்த நடையில்தான் எழுதுகிறார்கள் என்பது ஒரு நகைமுரண் வேடிக்கை. உதாரணமாக, “க்ஷேமதோஷனின் எதிர்பாராத கடைசி க்ஷண நபும்சகத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்திய ஜனன பரியந்த துரோகக் கிடக்கையையும் எண்ணியெண்ணித் துக்கித்த ரூபகனின் ஆழ்மன எதிர்பௌருஷம்” என்று படிக்கும்போது ‘இந்த வியாதியைத்தான் எப்போதோ ஒழித்துவிட்டார்களே’ என்று தோன்றும்.

இங்கு மேடையிலும் முதல் இரு வரிசைகளிலும் அமர்ந்திருக்கும் நபர்களைப் பார்க்கும்போது கோவிந்துக்கு உள்ள தொடர்புகளின் வீச்சு புலனாகிறது. முதல் வரிசையில் எனக்கு மிகவும் அபிமான இயக்குநர் சபரி அமர்ந்திருக்கிறார் பாருங்கள் – தமிழ்த் திரைவானை எண்ணிலடங்காத உயரத்திற்கு, சிதிலங்களுக்கு அப்பாற்பட்ட சிகரங்களுக்கு, உலகின் அடி ஆதர்ச மூலைகளுக்கு உயர்த்திய ஒப்பற்ற மகா கலைஞன் இங்கு ஒரு பெட்டிப் பாம்பைப் போல், ஒரு மழைக்கு ஒண்டிய ஒரு நாயைப் போல், கருவிலுள்ள ஒரு குழந்தையைப் போலச் சுருண்டிருக்கும் ஒரு புழுவைப் போல் எவ்வளவு எளிமையாக அமர்ந்திருக்கிறார் பாருங்கள்! சார், வணக்கம் சார், ஐயோ என்ன சார் நீங்கள்!

கோவிந்த் படுசுமாராக எழுதுபவர், ஆனால் மிக உபயோகமானவர் என்று படுகிறது. இந்த உபயோகத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இளம் எழுத்தாளர்களின் உபயோகம் குறைத்து மதிப்பிடுவதற்குத் தகுதியற்றது. இவரது நாவலை நான் படிக்கவில்லைதான். ஆனால் இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று நினைக்கிறேன். அதை அவசியம் படியுங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நானும் படிப்பேன். இது வெறும் 176 பக்கம்தான் இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே விட்டெறிந்தால் கண்டிப்பாகப் பத்தடி தள்ளித்தான் தரையிறங்கும், அவ்வளவு லேசான எடையுள்ளது இந்த நூல். இதைவிடப் பத்து மடங்கு பெரிய புத்தகங்களையெல்லாம் நாம் படித்ததாகக் காட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த நூலை நிஜமாகவே படிக்கலாம். ஆகவே அவசியம் படியுங்கள். சுருக்கமாகச் சொன்னால், ஆதி கிரணம் – கோவிந்த் சீதாராமன். நன்றி, வணக்கம்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar